திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா…

திருப்பதி திருமலைஏழுமலையான் பிரம்மோற்சவ விழா

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் தங்கக் கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
இம்முறை கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் மாட வீதிகளில் வாகன சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர்களான தேவி, பூதேவி சமேத மலையப்பர் ரங்கநாயக மண்டத்தில் அலங்கரிக்கப்பட்டு, அங்கிருந்து, கோயிலுக்குள் உள்ள சம்பங்கி மண்டபம் வரை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் வரை உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பிரம்மோற்சவத்திற்கு தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். குறிப்பாக ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம் டிக்கெட்களை பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும். மேலும், விஐபி பிரேக் தரிசனம், வாணி அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் டிக்கெட்களை பெற்ற பக்தர்களும் சுவாமியை தரிசிக்கலாம்.
வழக்கமாக புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அலைமோதுவது வழக்கம். ஆனால், இம்முறை கரோனா பரவல் காரணமாக தினமும் ஆன்லைனின் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசன வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இலவசதரிசனத்தை முற்றிலுமாக தேவஸ்தானம் ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், நேற்று பிரம்மோற்சவ விழா தொடக்கம் என்பதாலும் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதாலும் தமிழகம், கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்தனர். இதில் பலர் முன்பதிவு செய்யாமல், இலவச தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்கலாம் என்ற எண்ணத்தில் வந்தவர்கள் ஆவர்.

இதனைத் தொடர்ந்து, அலிபிரி மலையடிவாரத்திலேயே டிக்கெட் இல்லாதவர்களை தேவஸ்தான பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அங்குள்ள பெருமாள் கோயிலில் அவர்கள் பூஜை செய்துவிட்டு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியாத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்.