திகைப்பூட்டும் திருமணங்களால் திண்டாடிடும் திருப்பூர்…

திகைப்பூட்டும் திருமணங்களால் திண்டாடிடும் திருப்பூர்


25 வருடங்களுக்கு முன் திருப்பூருக்கு தொழிலாளிகளாக வேலைக்கு வந்து தங்கள் அயராத உழைப்பால்
முதல் தலைமுறை தொழில் அதிபர்களாக மாறியவர்களில் இருவர் சமீபத்தில் தங்கள் வாரிசுகளுக்கு
திருமணம் கூடி வந்தபோது நடக்கும் சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்தபின்னர் செலவினங்களை எதார்த்தமாக கணக்கெடுத்தபோது கிடைத்த

திருமண பட்ஜெட்;

ஐந்தாயிரம் அழைப்பிதழுக்கு 2 லட்சம், ஆனால் கூட்டம் ஆறாயிரம் வரலாம் அதற்கேற்ற மண்டபம் அதன்
வாடகை மற்றும் அதற்கான பராமரிப்பும் சேர்த்து 6 லட்சம், ஆறாயிரம் பேர் வருகின்ற மண்டபத்தை அப்படியே வைக்கமுடியுமா? பிரபலமான சில டெக்கரேட்டர்களின் கட்டணம் 15-40 லட்சம், இத்தனை பேர் வருகின்ற கல்யாணத்திற்கு சமையல் அசத்திடவேண்டாமா! ஆடி கார் சமையல்காரர் வந்தார் (மண்ணிக்கவும் கேட்டரிங்ஸ்ட்னு பதிவிடனும்) முதல் வார்த்தையிலேயே கூலா குண்டைப்போட்டார் இந்த தேதியில் புக் செய்தாயிற்று!

அதனால் கல்யாண தேதியை மாற்றுங்கனு!

ஆடிக்கார் கேட்டரிங்ஸ்ட் சமையலுக்காக அமைச்சர் வரை சிபாரிசு பறக்கிறது!

கடைசியில் ஒப்புக்கொண்டு தன்

கண்டிசனை சொல்கிறார் மொத்தம்

நான்கு வேளையும் சேர்த்து 8000 இலை வரும்ங்க இலைக்கு சராசரியாக

ஐநூறு மொத்தம் 40 லட்சம் தான்

வரும்ங்க அதுவும் அமைச்சர்

சொன்னதால் ஏற்றுக்கொள்கிறேனுங்க!

தேதி கிடைத்ததே பெரிது உடனே

ஆமோதிக்கப்படுகிறது!

பெரிய மண்டபம் பிரமாண்ட கல்யாணம்

கார் மட்டும் சிறியதாக இருக்குமா!

50 லட்சத்தில் வெளிநாட்டுக்கார் புக் செய்யப்படுகிறது!

மொத்த துணிமணிகளுக்கு 25 லட்சம்,

கூடுதல் நகைகளுக்கு 50 லட்சம்,

போட்டோ வீடியோவிற்கு 10 லட்சம்,

திருமணத்திற்கு வரும் வெளிநாட்டு

பையர்களுக்கு பட்டுவேட்டி பட்டு சேலை

நட்சத்திர விடுதி மற்றும்

விமான கட்டணம் 3 லட்சம்,இதை சொல்லியே ஆகவேண்டும்,)

இதர செலவுகள் 10 லட்சம் என இந்த உயர்நடுத்தர வர்க்கத்திற்கு
சற்று மேலே உள்ள சம்பந்திகள் திருமணத்திற்காக குறைந்தபட்சம்
2 1/2 கோடியில் பட்ஜெட் போடுவது

திருப்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்
இன்றைய தேதியில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது!

இந்த ஆடம்பர திருமணத்தை தங்களின் வாரிசுகளுக்கு செய்துவைக்கும் அந்த பெற்றவர்களின் நினைவுகள் சற்று பின்னோக்கி செல்கின்றது.

35 வருடங்களுக்கு முந்தைய
கொங்கு மண்டல திருமணங்கள் அனைத்துமே
மணமக்கள் இல்லங்களில் உள்ளூர்
சொந்தங்களும் மணமக்களின்
நெருங்கிய சுற்றத்தார்களும் மட்டுமே
கலந்துகொள்ளும் ஒரு எளிமையான நிகழ்வாக மட்டுமே இருந்தது.

அத்தகைய திருமணங்கள் மணமக்களின்
குடும்பங்களுக்கு சிரமமே இல்லாமல் இருக்க
மிகவும் திட்டமிடப்பட்டு மணமக்களுக்கு அளவான நகைகள்,அளவான ஆடைகள்
மற்றும் தேவைப்படுபவர்களுக்கு
தேவையான அளவிற்கு மட்டுமே வாங்கப்பட்டன!

அதேபோல் அன்றைய திருமணங்களுக்காக பெரிய அளவில் கடன்
வாங்கக்கூடாது என்பதற்காக விவசாயம் அறுவடை முடிந்து வருமானம்
வரும் காலங்களில் வைக்கப்பட்டன!
அதற்கு மேலும் கடன் பட்டு சிரமம் ஆகக்கூடாது என்பதற்காக
சொந்தங்களிடம் விசேசங்களுக்கு
மொய் பணம் வாங்கி திரும்ப
வைக்கும் எளிய பணபறிமாற்றப்பழக்கம் இருந்தது!
சாப்பாடு செய்வதற்காக உள்ளூர்
சமையல்காரர்கள் ஓரிருவர் மட்டுமே தேவைப்பட்டனர்.
மீதமுள்ள அனைத்து திருமண வேலைகளிலும்
சொந்தங்களும் சுற்றங்களும்
மட்டுமே ஈடுபட்டனர்!

அருமைக்காரர் அல்லது அவர்களது சமுதாய
பெரியவர்கள் தலைமையில் அனைத்து
சீர் சிறப்புகளுடன் உறவுகள் முன்னிலையில்
சிறப்பாகவும் மகிழ்வாகவும் நடந்தது!
அதேசமயம் அனைத்து இல்லங்களிலும் நான்கைந்து பேருக்கும் திருமணங்கள்
கடனில்லாமல் சிறப்பாக நடந்தன!
திருமணம் என்பது வாழ்வில் ஒரு நல்நிகழ்வு
அதற்கு எந்த அளவில் எப்படி செலவு செய்யவேண்டும்
என்று அன்றைய பெரியவர்களுக்கு தெரிந்திருந்தது!
அதனால் ஆடம்பரத்தையோ வீண் விரயத்தையோ அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால் இன்று அதிகமாக
பிரமாண்டமாக செலவளிப்பதில்
தான் குடும்ப கௌரவமும் திருமண கௌரவமும் அடங்கியுள்ளதாக
இளையவர்களின் வலியுறுத்தலால் பெரியவர்களும் வேறுவழியின்றி
சமரசம் செய்து கொள்கின்றனர்.

மக்களின் திடீர் வசதியையும் வாரிசுகளுக்காக தாராளமாக செலவளிக்கும்
தன்மையையும் கருத்தில் கொண்டு
அனைத்து ஆடம்பரங்களும் இங்கு திணிக்கப்பட்டவையே!

ஒரு திருமணத்தைவிட இன்னொரு
திருமணம் கூடுதல் பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்று தூண்டிவிடும்
சுயநல திருமண அமைப்பாளர்களின்
வியாபார தந்திரமும்
திருமணத்திற்கு வருபவர்களை ஆச்சர்யப்படுத்தவேண்டும் என்பதற்காகவும்
இதுதான் பெருமை என்று போலியாக நினைப்பதுமே ஆடம்பரத்திற்கு காரணம்!

சில வருடங்களாகவே இப்படித்தானே ஆடம்பரமாக நடந்தது இப்போது மட்டும் எதிர்ப்பு ஏன்
என்கிற கேள்வி எழலாம்! பாதிக்கப்பட்ட பலருடைய நியாயமான பதிலையும் பதிவது
அவசியம்!

தவறு என்று தெரிந்ததை ஏதாவது ஒருநாள் சரிப்படுத்தித்தானே ஆகவேண்டும்
அது இப்போதே செய்யலாமே!
தொழில்நிலை பல வருடங்களாக
ஆரோக்கியமாக லாபகரமாக இருந்தபோது
செலவு செய்து பழகிவிட்டோம் இன்று தொழில் மந்தநிலை மற்றும்
பலபேர் தொழிலையே விட்டுவிட்டார்கள் இருந்தாலும் அவர்களின் இல்ல திருமணத்திற்கு
சொத்துக்களை விற்றோ கடனை வாங்கியோ பெரிய அளவில் திருமணம் செய்தே ஆகவேண்டும் என்ற நிர்பந்தம்!
நகரத்தில் உள்ளவர்களின் திருமண போட்டியால் விவசாயத்தில் உள்ள பலபேர் பாரம்பரிய பூர்வீக விவசாய நிலங்களை விற்று ஆடம்பர திருமணம் செய்து வைக்கிறார்கள் இது ஆரோக்கியமானதா?

அதிக கூட்டம் கூடுவதையே காலவிரையம்,காசுவிரயம்
என நினைக்கும் வெளிநாட்டினரை ஆடம்பர
திருமணத்திற்கு அழைத்து பட்டு
வேட்டிசட்டை,பட்டுசேலை அணிவித்து நம் பகட்டை காட்டுவதால் நம் பண்பாட்டை
அறிந்துகொள்ளமுடியுமா என்ன?
பனியனுக்காக கொடுத்த அதிக விலைதான் இப்படி திருமணஆடம்பரமாக மாறியுள்ளது
என்பதை அவர்களையும் மேடையேற்றி காண்பிக்கிறார்கள்!
இறுதியாக:
========
இந்த வகையான ஆடம்பர திருமணங்களை முதலில் ஆரம்பித்தவர்கள் வசதிபடைத்த செல்வந்தர்கள் தான், அதன்பின்னர் நடுத்தர வர்க்கத்தினரும் செய்து இப்போது குறைக்க மனமிருந்தும் செலவைக்குறைத்தால் நொடிந்துபோய்விட்டனர் என்கிற அவச்சொல்லிற்கு அஞ்சி கடனை வாங்கியானது இடம்பொருளை விற்றாவது செய்து கொண்டுள்ளனர்.
நமது ஊரில் வசதி படைத்தவர்கள் எதை செய்தாலும் அது ஃபேஷனாக மாறும்!
எனவே இந்த சிக்கன திருமணத்தையும்
ஃபேஷனாக மாற்றுங்கள்!
திருமண விழாக்களை சொந்தபந்தங்களையும்
நெருங்கிய நட்புகளை மட்டும் வைத்து நடத்துங்கள்! சம்பந்தமே இல்லாதவர்களையும் அழைத்து
உங்கள் வசதியை காட்டும்
திருவிழாவாக மாற்றவேண்டாம்!

இதனால் ஆடம்பர செலவுகளை செய்யமுடியாததால் வசதியில்லை என்று
திருமணமாகாமல்
இருக்கும் பலருக்கும் திருமணம் நடக்கும்!
பல ஆயிரம் குடும்பங்கள் உங்கள் வழியை பின்பற்றி கோடிக்கணக்கான மதிப்புள்ள உணவுப்பொருட்களின் வீண்விரயத்தையும்
எதிர்கால நலத்திற்கான பணத்தின் விரையத்தையும் தடுக்கலாம்!

( இது திருப்பூருக்கு மட்டுமான பதிவு இல்லைங்க கொங்கு மண்டலம் முழுவதற்குமானது!)

பொதுநலனில்
-ஜூப்ளி பாலு.
முகநுால் பதிவு