பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு…


காவிரி விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்திக்க உள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் அளித்த காலக்கெடு மார்ச் 29ஆம் தேதியுடன் முடிந்த பின்பும் வாரியத்தை அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. இதனைக் கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோரைச் ஏப்ரல் 1ஆம் தேதி சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்துள்ளார்.

இந்நிலையில், தமிழக ஆளுநர் பிரதமர் மோடியை சந்திப்பார் என்று இன்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதற்கும் தமிழக முதல்வரைச் சந்திப்பதற்கும் பிரதமர் நேரம் ஒதுக்க மறுத்துள்ள நிலையில் ஆளுநரை சந்திக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.