விரைவில் நீரா பானம்: தமிழக அரசு அனுமதி..

தென்னை விவசாயிகள் வருமானத்தை பெருக்கும் வகையில் தென்னை மரத்திலிருந்து “நீரா” பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் சுமார் 8 கோடி தென்னை மரங்கள், 10 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. அகில இந்திய அளவில் தேங்காய் உற்பத்தியிலும், உற்பத்தி திறனிலும் முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டில், தென்னை விவசாயிகள் தங்கள் வருமானத்தை பெருக்கிக்கொள்வதற்காக தென்னை மரத்தில் இருந்து நீரா பானத்தை இறக்கி பதப்படுத்தி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடந்த 18-4-2017 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த கூட்டத்தில், தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசினால் அனுமதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் சங்கம், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தென்னை உற்பத்தியாளர் இணையம் மூலம் மட்டுமே நீரா உற்பத்தி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் தமிழக அரசு நீரா உற்பத்திக்கு லைசென்சு வழங்குவதற்கான விதிகள் அடங்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த விதிகளுக்கு தமிழ்நாடு நீரா விதிகள் 2017 என்று அழைக்கப்படுகிறது. இந்த உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைய சட்டப்படி முறையான அனுமதியை பெற்றிருக்கும் தேங்காய் உற்பத்தியாளர் நிறுவனம் அல்லது கூட்டுறவு சங்கங்கள் இதற்கான லைசென்சுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதன்படி, தென்னை மரத்தில் இருந்து நீரா எடுக்கவும், விற்பனை செய்யவும், அதில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யவும் விண்ணப்பிக்கலாம். இதற்கான லைசென்சு வழங்கும் அதிகாரி தகுதி உள்ளவர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்குவார். இந்த லைசென்சு ஒவ்வொரு நிதியாண்டின் இறுதி வரை செல்லத்தக்கது.

அதன் பிறகு, மார்ச் 31-ந்தேதிக்குள் மீண்டும் லைசென்சை புதுப்பித்துக்கொள்ளலாம். ஏதாவது, விதி மீறலில் ஈடுபட்டால் லைசென்சு ரத்து செய்யப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எவ்வளவு லைசென்சு வழங்கலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசாரங்கத்து இருக்கிறது. அவ்வப்போது அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.

மேற்கண்டவாறு அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.