கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.1000 கோடி: தமிழக அரசு உத்தரவு

கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

நிதியை செல்விடுவதற்கான திட்ட வரைவு கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, சிவகங்கை, நாகை, ராமநாதபுரம், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டம் ஆட்சியர்களுக்கும் தொடர்புடைய துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், கால்நடைகள், மற்றும் உடைமைகள் இழப்புக்கு 205 கோடியே 87 லட்சம் ரூபாயும், வீடுகள் சேதத்துக்கு 100 கோடி ரூபாயும், நாசமடைந்த பயிர்களுக்கு 350 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறைக்கு 25 கோடி ரூபாயும், நகர பஞ்சாயத்துக்களுக்கு 5 கோடி ரூபாயும், கிராமப் பஞ்சாயத்துகளுக்கு 25 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாயும், குடிநீர் வாரியத்துக்கு 5 கோடி ரூபாயும் நகராட்சி நிர்வாகத்துக்கு 5 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகங்களுக்கு 27 கோடியே 50 லட்சம் ரூபாயும், மீன்வளத்துறைக்கு 41 கோடியே 63 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், கால்நடைகள், மற்றும் உடைமைகள் இழப்புக்கு வழங்க ரூ. 205.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.