
தமிழக அரசு பள்ளிகளில்“ பயிலும் மாணவர்களை அழைத்துக் கொண்டு துபாய் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர்.
தமிழக அரசு பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கடந்த ஆண்டு வினாடி வினா போட்டியானது நடத்தப்பட்டது.
பள்ளி அளவில் தேர்வான மாணவர்கள் அந்தந்த மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் சிறப்பாக பங்காற்றியவர்களை வெளிநாடிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் மாணவர்களை துபாய் அழைத்து செல்வதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த டிசம்பரில் ஓமிக்ரான் பரவல் அதிகமாக இருந்த காரணத்தால் அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
வினாடிவினா போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்கள் தற்போது 11-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், அவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லவேண்டும் என்பதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதியா இருந்தார். இது தொடர்பாக அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், 34 மாணவர்கள் 33 மாணவிகள் என 67 பேர் துபாய் அழைத்து செல்லப்பட உள்ளனர். துபாய் மற்றும் ஷார்ஜாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு அரசு சார்பில் மாணவர்கள் சுற்றுலாவுக்காக அழைத்து செல்லப்படவுள்ளனர். மேலும் ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சிக்கு மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள புத்தக அரங்கங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்க உள்ளது.
67 மாணவர்கள், 5 ஆசிரியர்கள், பள்ளிகல்வித்துறையை சேர்ந்த 3 அதிகாரிகள் உடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இவர்களுடன் அந்த கல்விசுற்றுலாவிற்கு செல்கிறார். திருச்சி விமான நிலையத்தில் மாணவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்டுள்ளனர். 10.40 மணிக்கு திருச்சியில் இருந்து ஷார்ஜாவுக்கு செல்லும் விமானத்தில் மாணவர்கள் பயணிக்கின்றனர்..