தமழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் வேலூர் இல்லத்தில் அமலாக்கத் துறை சோதனை…

வேலூரில் தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை) சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

அமைச்சர் துரைமுருகனும், எம்.பி. கதிர் ஆனந்தும் இப்போது வேலூர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் வெளியில் காத்திருக்கின்றனர்.

சோதனையின் பின்னணி என்ன? தமிழகத்தில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் போட்டியிட்டார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புகாரின்பேரில் 2019 மார்ச் 29-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் (மார்ச் 30) வரை துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.11.51 கோடி பணம் பறிமுதல்.. இதற்கிடையில், ஏப்ரல் 1-ம் தேதி சென்னையில் இருந்து துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் துரைமுருகனின் நெருங்கிய கட்சிப் பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவரது உறவினருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோன் உள்ளிட்ட 6 இடங்களில் மீண்டும் நடத்திய சோதனையில் மூட்டை மூட்டையாகவும் பெட்டி பெட்டியாகவும் 11 கோடியே 51 லட்சத்து 800 ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள்.
அப்போது, வேலூர் மக்களவைத் தொகுதி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் விவரங்களுடன் கூடிய ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் சுமார் ரூ.9 கோடி அளவுக்கு புத்தம் புதிய 200 ரூபாய் நோட்டுகள் இருந்தன. தேர்தல் நேரத்தில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் காட்பாடி காந்தி நகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் செஸ்ட் பிராஞ்சில் (வங்கிகளுக்கு இடையில் மட்டும் பணப்பரிமாற்றம் செய்யும் கிளை) இருந்து பணப் பரிமாற்றம் செய்யப்பட்டது தெரியவந்தது.

வழக்குப் பதிவு: வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவுக் கணக்கு அதிகாரி முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேடாகப் பணம் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பூஞ்சோலை சீனிவாசனிடம் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதன் நீட்சியாக அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது. காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகம், அமைச்சரின் நம்பிக்கைக்குரிய பூஞ்சோலை சீனிவாசன் அவரது உறவினர் வீடு உள்பட 4 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

இதுஒருபுறம் இருக்க சட்டவிரோத மணல் குவாரிகள் விவகாரம் தொடர்பாகவும் அமலாகத் துறை சோதனை செய்யலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, சட்ட விரோத மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வேலூர், அரியலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராகினர். அப்போது தொட்டே இவ்விவகாரத்தில் அமைச்சர் துரை முருகன் மீது அமலாக்கத் துறை விசாரணை பாயும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இன்றைய சோதனை நடைபெறுகிறதா என்ற பேச்சுக்களும் எழுந்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு : டோக்கன் வினியோகம் தொடங்கியது…

Importance of Money Ethics in Online Rummy

Recent Posts