‘‘இன்று மிக முக்கிய நாள்’’: நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பிரதமர் மோடி கருத்து…


நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கிய நாள் இன்று, நம்மை நாடே உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ளது. தெலங்கு தேசம் கட்சி எம்.பி. சீனிவாஸ் ஆளும் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்தார்.

அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதன்படி மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெறுகிறது. பின்னர் குரல் வாக்கெடுப்பும் நடைபெறுகிறது.

தீர்மானத்தை தோற்கடிக்க ஆளும் பாஜக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதேசமயம் எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ய அனைத்து கட்சிகளும் ஒன்று திரண்டு வருகின்றன. பாஜக தலைவர் அமித் ஷா கூட்டணி கட்சித் தலைவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதேபோல் எந்த அணியையும் சாராத அதிமுக, பிஜூ ஜனதாதளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமதி ஆகிய கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்க இருதரப்பிலும் முயற்சி மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது.

இதனால் மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறுகையில் “இன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மிக முக்கியமான நாள். நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் அமளியின்றியும் நடைபெறும் என நம்புகிறேன். அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். நாடே நம்மை உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது” என கூறியுள்ளார்.