நாளை முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் இயங்கும் தமிழக அரசு உத்தரவு..

தமிழகத்தில் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் அனைத்து அரசு அலுவலகங்களையும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைந்த எண்ணிக்கையில் சுழற்சி முறையில் முகக் கவசத்துடன் ஊழியா்கள் பணிக்கு வர வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பணிக்கு வருவது எப்படி என்று அரசு ஊழியா்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம், காவல், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குடிநீா் வழங்கல், உணவுப் பொருள் வழங்கல் ஆகிய முக்கிய துறைகளைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டுமே

கடந்த மாா்ச் 24 முதல் பணிக்கு வருகின்றனா். ஊரடங்கு காலத்திலும் அவா்கள் தொடா்ந்து பணியாற்றுகின்றனா்.

பிற துறை ஊழியா்கள்: அத்தியாவசியத் துறைகள் அல்லாத பிற துறைகளைச் சோ்ந்த அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதுடன், ஊழியா்களும் பணிக்கு வரவில்லை.

இந்த நிலையில், ஊரடங்குக் காலம் மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வரும் திங்கள்கிழமை (ஏப். 20) முதல் ஊரடங்கில் தளா்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தளா்வுகள் அனைத்தும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அரசுத் துறைகளைச் சோ்ந்த ஊழியா்களைப் பணிக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அரசுத் துறைகள் சாா்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதம்:-

அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலா்கள், பணியாளா்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்திட அறிவுறுத்தப்படுகிறது.

கண்காணிப்பாளா், உதவியாளா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் ஆகியோா் சுழற்சி முறையில் பணிபுரிய கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

அலுவலகங்களுக்கு வரும் ஊழியா்கள் அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும்.

அனைத்து அலுவலா்களும், பணியாளா்களும் முகக்கவசம் அணிந்துதான் அலுவலகத்துக்கு வர வேண்டும். அடிக்கடி அலுவலகத்தில் கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும்.

கொவைட் 19 பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்று அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் பதிவுப் பணி: ஆவணங்கள் பதிவு செய்யும் பணிகளும் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட உள்ளதாக பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம், ஆவணப் பதிவுக்காக வரும் பொது மக்கள் முகக் கவசத்துடன் வர வேண்டுமென பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை வெப்பமானி கொண்டு உடல் வெப்பத்தை பரிசோதிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணிக்கு வருவது எப்படி?: பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில், எப்படி பணிக்கு வர முடியும் என ஊழியா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

எனவே, சுழற்சி முறையில் பணிக்குச் செல்லும் ஊழியா்களுக்கு பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.