குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை : ‘மிக மோசம்’ என ரயில்வே அறிக்கை..

நாட்டில் குறித்த நேரத்துக்கு ரயில்கள் வருகை கடந்த 3 ஆண்டுகளில் மிக மோசம் என ரயில்வே அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017-18ம் ஆண்டில் மட்டும் எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர்பாஸ்ட், சரக்குப்போக்குவரத்து ஆகிய ரயில்கள் 30 சதவீதம் குறித்த நேரத்துக்குச் செல்லவில்லை அல்லது தாமதமாக சென்று சேர்ந்துள்ளன என அறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2017 ஏப்ரல் முதல் 2018 மார்ச் வரை மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் குறித்தநேர வருகை என்பது 71.39 சதவீதம் மட்டுமே. இது கடந்த 2016-17-ம் ஆண்டைக்காட்டிலும் இது குறைவாகும். 2016-17-ம் ஆண்டில்76.69 சதவீத ரயில்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு வந்துள்ளன. 2015-16-ம் ஆண்டில் 77.44 சதவீத ரயில்கள் மட்டுமே சரியான நேரத்துக்கு வந்துள்ளன.

ரயில்வே துறையில் ஏராளமான இடங்களில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில்கள் குறித்த நேரத்துக்கு வருகை தருவதில் பாதிப்பு ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2016-17-ம் ஆண்டில் ரெயில்வேலிய்ல 2,687 இடங்களில் 15 லட்சம் பராமரிப்பு பணிகள் நடந்ததால், இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது. அந்தஆண்டைக்காட்டிலும், 2017-18-ம் ஆண்டில் 4,425 இடங்களில் 18 லட்சம் பராமரிப்பு பணிகள் நடந்துள்ளதால் ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

இது குறித்து ரயில்வே துறையின் ஊடக மற்றும் தொடர்புத்துறையின் இயக்குநர் ராஜேஷ் தத் பாஜ்பாய் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பில் எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ளாமல், ரயில்வே இருப்புப்பாதைகளைப் பராமரிக்கும் பணியை தீவிரமாகச் செய்து வருகிறோம். இதன் காரணமாக ரயில்கள் குறித்த நேரத்துக்கு வருகை தருவதில் தாமதம் ஏற்படலாம். இந்த பராமரிப்பு காரணமாக ரயில்கள் விபத்தில் சிக்குவது பெருமளவு குறைந்துள்ளது.

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக ரயில்விபத்துக்கள் குறைந்து 2 இலக்க எண்களில் வந்துள்ளன. கடந்த 2014-15-ம் ஆண்டில் 145 ரயில் விபத்துக்களில் இருந்து 107 விபத்துக்களாகக் குறைந்தது. 2015-16-ம் ஆண்டில்107 விபத்துக்கள் 104 ஆகக் குறைக்கப்பட்டது. 2016-17ம் ஆண்டில் 104 விபத்துக்கள், 73ஆகக் குறைந்துள்ளன எனத் தெரிவித்தார்.

அதேசமயம், இந்திய ரயில்வே துறையில் எக்ஸ்பிரஸ், மெயில், சூப்பர் பாஸ்ட் ஆகியவை தொடர்ந்து குறித்த நேரத்துக்கு வருகையை கடைப்பிடிக்காமல் இருந்து வருவது வெட்கமாக இருக்கிறது என்று ரயில்வே வாரியத்தின் தலைவர் அஸ்வானி லோஹானி தெரிவித்துள்ளதாக ரயில் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.