மத்தியில் ரயில்வே பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே போக்குவரத்து சுதந்திர இந்தியாவுக்கு முன்னர் இருந்ததை விட, தற்போது மிகவும் மோசமாக இருக்கிறது என்பதே உண்மை. அதிலும், தமிழகத்துக்கு கிடைத்த கிடைக்க வேண்டிய ரயில்களையெல்லாம் மலையாளிகள் எப்படித் தட்டிப் பறித்தார்கள் என்று, கடந்த 2010ம் ஆண்டு எழுத்தாளர் சாம்ராஜ் தனது வலைப்பூவில் விவரமாகப் பதிவு செய்துள்ளார். தமிழர்களுக்கு மலையாளிகள் செய்து வரும் வரலாற்றுத் துரோகங்கள் குறித்த தொடரின் ஒருபகுதியாக இதனை எழுதியுள்ளார். அவரது மலையாளிகள் குறித்த மற்ற கட்டுரைகளையும் உரிய நேரத்தில் இப்பகுதியில் வெளியிடுவோம். தற்போது ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் தருணம் என்பதால் இதனை மறுபதிவேற்றமாக வெளியிடுகிறோம். இனி சாம்ராஜின் மொழியில்….
_________________________________________________________________________________________
ரயில் மீது எனக்கு பெரும்காதல் உண்டு. என் பெற்றோர்கள் சென்னையிலும் நான் மதுரை பாட்டி வீட்டிலுமாக வளர ரயில் பயணங்கள் என் வாழ்வில் சிறுவயது முதலே தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.
ரயில் நம்மை வசீகரிக்கிறது, அற்ப காரணங்களுக்காக போகும் பயணத்தையுமே அது அழகாக்குகிறது . எல்லா கலைஞர்களிடமும் ரயிலை பற்றி ஒரு நல்ல சித்திரம் இருக்கிறது. ரயில் மீதான என் மோகம் இன்னும் தீர்ந்தபாடில்லை. ஆனாலும் “புத்திதெளிய” ஆரம்பித்த காலத்திலிருந்து இந்த மோகத்தின் மீது சில பூட்ஸ் கால்கள் நடந்துபோயின.
என் தனி வாழ்வின் சோகம் காரணமாக ரயில் மீதான என் மோகம் கேள்விக்குள்ளாகவில்லை. எனது எந்த காதலியும் ரயிலிலோ ரயில் நிலையத்திலோ என்னைவிட்டுப் பிரிந்து போனதுமில்லை மாறாக பல ரயில்கள் மாறிப்போய் மலையும் கடலும் சார்ந்த ஊரில் காதலித்திருக்கிறேன். தீரா பரவசத்தோடு திரும்பியிருக்கிறேன். ஆனால் என் அழகியல் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல உட்பட்டதே.இதே மன நிலையில் தான் சென்னையில்இருந்து மதுரைக்கு வைகை விரைவு ரயிலில் வந்து கொண்டிருந்தேன்.
முன்பதிவு இல்லா பெட்டி. இரண்டாம் உலக போர் காலத்தை நினைவுபடுத்தும் அளவிற்கு கூட்டம். நான் சாமான்கள் வைக்கும் தட்டில் ஒரு ஒரத்தில். கையில் ஜோ டி குருஸின் ஆழி சூழ் உலகு நாவலோடு. நான் பொதுவாக ரயிலில் பக்கத்தில் இருப்பவர்களிடம் அதிகம் பேசுவதில்லை. சமயங்களில் நமது முழு பயணங்களை ஆக்கிரமித்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் நாம் அவர்கள் பக்கமேதிரும்பாமல் எதிரே இருக்கும் மாமியை பார்த்தே பயணப்படும் அவஸ்தை ஏற்படும்.மணிரத்ன பாணியிலான உரையாடல்களை நிறுத்திக் கொள்வேன். 500 கி மி வார்த்தைகளால் துரத்தப்பட்ட துர் பயணங்கள்உண்டு. படிக்கவில்லையெனினும் புத்தகத்தை விரித்து வைத்து விடுவேன். என் பக்கத்தில் இருப்பவர் குனிந்து ஜன்னல் வழி வெளியே பார்த்தார்.
ரயில் மெதுவாக போய் கொண்டிருந்தது. வெளியே இரு புறமும் ஜல்லிகள் குவிக்கப்பட்டிருக்க. தன் பக்கத்தில் இருப்பவரிடம் பேச தொடங்கினார் சந்தோசமாக.” நம்ம ஊர்ல ரயில்வேயில் எப்பவும் வேலை நடந்துகிட்டே இருக்கு, பரவாயில்ல நம்ம மந்திரிகள் எல்லாம்::” நான் அவரை திரும்பி பார்த்தேன். பாவம் தினமலரின் வழி உலகத்தை ”அப்படியே” நம்பும் ஒரு அப்பிராணி.
இந்திய ரயில்வேயில் குறிப்பாக தென்னக ரயில்வேயில் மலையாளிகள் நம்மை வஞ்சிப்பதை எழுத தொடங்கினால் அதுவொரு அறுபது ஆண்டு கால துரோகம், துக்கம்.
எளிய உதாரணங்களிருந்து நாம் போகலாம். மதுரையிலிருந்து ஒரு ரயில் தினமும் மதியம் இரண்டு மணிக்கு குருவாயூருக்கு போய் கொண்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன். அதே நேரத்தில் கூடல் எக்ஸ்பிரஸ் என்றொரு ரயில் மதுரையிலிருந்து சென்னைக்கு போய் கொண்டிருந்தது. மலையாள ரயில்வே அதிகாரிகள் இந்த இரண்டு இரயில்களையும் மதுரை டிவிஸனில் இருந்து பிடுங்கினார்கள். இரண்டையும் இணைத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் என பெயரிட்டார்கள். குருவாயூரிலிருந்து இரவு பத்து மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு எட்டு மணிக்கு சென்னை போய் சேரும். ஏறக்குறைய இருபத்திரண்டு மணி நேரம். இதில் எந்த மலையாளியும் சென்னை போகப் போவதில்லை. காரணம் குருவாயூரிலிருந்து சென்னை பாலக்காடு. கோவை வழி பத்து மணி நேரமே. பின் எதற்கு இந்த வண்டி இவர்களுக்கு…
குருவாயூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு போகவும், காலையில் நாகர்கோவில் போகவும் நெல்லை போகவும் மதுரை போகவுமே இந்த ரயில். இந்த ரயிலில் பெரும் கூத்துக்கள் உண்டு. இந்த வண்டியில் எஸ் 1 எஸ்2 எஸ்3 எஸ்4 என்ற சேர்கார்கள் உண்டு. மதுரைக்கு போதிய இடம் கிடைப்பதில்லை என்று கோரிக்கை எழுந்த பொழுது இணைத்தார்கள் பெட்டிகளை. அவை அனைத்தும் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள். மிக எளிமையாகச் சொன்னால் chair car இல் நீங்கள் சென்னையில் இருந்து மதுரை வந்தால் 147 ரூபாய், sleeper 235 ரூபாய். காலை 7 மணிக்கு ஏறி மாலை 4 மணிக்கு போகின்றவர்களுக்கு எதற்கு sleeper class . ஆனால் குருவாயூர் வரை போகின்றவர்களுக்கு chair car பெட்டிகள் உண்டு. நம்மிடம்தான் கேள்வியே கிடையாதே. நம் ஆட்கள் sleeper class டிக்கெட் எடுத்து தூங்கிவிடுகிறார்கள். ட்ரெயினில் மட்டுமா நம் ஆட்கள் தூங்கினார்கள். இந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் திண்டிவனம் நிற்கும், மனப்பாறை நிற்கும். வைகைஎக்ஸ்பிரஸ் எங்கும் நிற்காது. அதில் நம்மவர்களுக்கு பெருமிதம் வேறு ”மதுரை, திண்டுக்கல் திருச்சின்னு போய்கிட்டே இருப்பான்”.இடையிலிருக்கும் ஊர்களில் இருப்பவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா?. அவர்களெல்லாம் சென்னை வர வேண்டாமா? கேரளாவிலிருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் வருபவன் மணப்பாறையில் இறங்க முடியும். மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸில் போகிறவன் இறங்க முடியாது. கேரள ரயில்களில் போய்ப் பாருங்கள். அவர்கள் மாநிலத்துக்குள் நுழைந்ததும் எல்லா வண்டிகளும் பாசஞ்சர்தான். சில ரயில்கள் தவிர எல்லா ரயில்களும் எல்லா நிறுத்தங்களிலும் நின்றுதான் போகும்.அங்கு எக்ஸ்பிரஸ் ட்ரெய்ன் 1 மணி நேரத்தில் கடப்பதை மற்ற பேசஞ்சர் 21/4 மணி நேரம் எடுத்து கடக்கும். குருவாயூர் express இல் s1 s2 s3 s4 தமிழ் நாட்டிற்கான முன் பதிவு பெட்டிகள்.இவை குருவாயூரிலிருந்து கிளம்பும் போதே இந்த பெட்டிகள் முழுக்க open ticket எடுத்தவர்களால் நிரம்பியிருக்க,முன்பதிவு செய்தவர்கள் தங்கள் இடத்தைப் பெற அவர்களிடம் கெஞ்ச வேண்டும். அத்தனை மிதப்புடன் அமர்ந்திருப்பார்கள்.
TTE என்ற தெய்வம் குருவாயூரிலிருந்து நாகர்கோவில் வரை இந்தபெட்டிகளில் தென்படவே மாட்டார். அப்படியே வந்தாலும் முன்பதிவு செய்தவர்களை மட்டும் பார்த்து விட்டு போய் விடுவார். நாகர்கோவில் வந்தவுடன் தான் இந்த அம்பிகளுக்குள் அந்நியன் புகுவார். அதன் பின் தமிழக ரயில் நிலையங்களில் மிக கறாராக கண்காணிப்புகள் தொடரும். ஒபன் டிக்கட்டை பார்த்து இறக்கி விடுவார் இந்த மலையாள டிடிஇ (கேரளத்தின் மொத்த மாநிலத்திற்குள்ளும் பகலோ இரவோ ஓப்பன் டிக்கட் பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏறி கொள்ளலாம். இதை டிடிஇ கண்டுகொள்ள கூடாது என்பது வாய்மொழி உத்தரவு). ஆக மதுரைக்கு இரண்டு ரயில்கள் போய் பெற்றது ஒபன் டிக்கட்டுக்கும் ரிசர்வேசனுக்கும் நிற்கும் பெரும் மந்தைகளைதான்.
ஒரு ரயிலுக்கு பின்பே இவ்வளவு சதிகள் எனில்,. அந்த கால கவிஞர் இளவேனில் கவிதையொன்று உண்டு
“ஒரு துளிக்கே மரணமென்றால்
எனக்கு மட்டும் ஏன் இத்தனை கோப்பை விஷம்”
வாருங்கள் நண்பர்களே, இன்னும் பருக பல கோப்பை மலையாளிகளின் விஷம் உண்டு.
சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை எத்தனை ஸ்டேசன்கள் எத்தனை வண்டிகள் என்று இதை கேரளத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.
சென்னை எக்மோரிலிருந்தும்,செண்ட்ரலிலிருந்தும் ரயில்கள் புறப்படுகின்றன.அதன் பின் செங்கல்பட்டுக்கு ஒன்றும் கிடையாது. விழுப்புரத்திலும் ஏறக்குறைய ஒன்றும் கிடையாது. மதுரைக்கு ஒரு பாசஞ்சர் இருக்கிறது. (அதைச் சொன்னால் தாங்காது. அதை தனியே எழுதுகிறேன்.) விருத்தாச்சலத்திலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றும் கிடையாது. பாசஞ்ச்ர் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். திருச்சியில் கொஞ்சம் எக்ஸ்பிரசும், பாசஞ்சர் ரயில்களும் உண்டு. திண்டுக்கல்லுக்கு பேச்சே கிடையாது. மதுரையில் கொஞ்சம் உண்டு. விருதுநகரில் கிடையாது.கோவில்பட்டியில் ம்…..ஹும். நெல்லையில் உண்டு.நகர்கோவில், கன்னியாகுமரியில் உண்டு. ஆனால் இங்கு பெரிய சதி நடக்கும். கன்னியாகுமரி- மும்பை என்று ஒரு வண்டி புறப்படும். கன்னியாகுமரி, நாகர்கோவில் மார்த்தாண்டம் அங்கு முடிந்தது தமிழ்நாடு. பின்பு சேட்டன்களின் தேசம்தான். நாகர்கோவில் கன்னியாகுமரியிலிருந்து பல ரயில்கள் கேரளா வழியாகத்தான் போகிறது. அவற்றால் தமிழ்நாட்டுக்கு எந்த உபயோகமில்லை. ஆனால் அவை தமிழ்நாட்டிற்கான ரயில்கள் என்ற கணக்கிலேயே வரும். கன்னியாகுமரி – பெங்களுர் என்றும் ஒரு வண்டி உண்டு. அதுவும் இதே கதைதான்.தென்தமிழகத்திலிருந்து பெங்களுருக்கு ஒரேயொரு வண்டிதான். தூத்துக்குடி மைசூர் எக்ஸ்பிரஸ். 2013 வரை அந்த ரயிலில் எல்லா ரிசர்வேசனும் முடிந்துவிட்டதாக வதந்தி உலவுகிறது.
மதுரையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் தினமும் சென்னைக்கு கிளம்புகிறது. இது கிட்டத்தட்ட இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து ஓடுகின்றது. அதன் பிறகு 1979ம் ஆண்டு வைகை எக்ஸ்பிரஸ் என்ற பகல் ரயில் விடப்பட்டது. இதுவும் தொடக்கத்தில் முறையாக காலையில் மதுரையிலிருந்து ஒரு வண்டி அதே நேரத்தில் சென்னையிலிருந்து ஒரு வண்டி என்று இருந்தது. கொஞ்ச நாளில் அதை நிறுத்தினார்கள். திருச்சியிலிருந்து பல்லவன் என்று ஒரு வண்டி விட்டார்கள். எப்படி? அங்கே இருக்கிறது சூட்சமம். காலை மதுரையிலிருந்து புறப்படும். வைகை, சென்னைக்கு மதியம் 2.25 சேர்ந்து பெயர் மாறி பல்லவனாக திருச்சி போகும்.இரவு 8.45க்கு திருச்சி போய்ச் சேர்ந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் காலை புறப்பட்டு 11.45க்கு சென்னை வந்து 12.25 வைகையாக புறப்படும். ஒரே வண்டி இரண்டு ரயில்கள். இதில் கவனிக்கத் தகுந்தது, காலை 6.45க்கு வைகையை விட்டால் பிறகு 11.30க்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் தான்.அதன் பிறகு இரவு 8.45க்குதான் சென்னைக்கு மதுரையிலிருந்து வண்டி. இடைப்பட்ட ஒன்பது மணி நேரத்திற்கு ஒன்றும் கிடையாது. இதை விட கொடூரமான ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன். வைகை எக்ஸ்பிரஸ் துவக்கப்பட்ட 1979 க்கும், இந்த 2010 க்கும் இடையே 31 வருடங்கள். இந்த 31 வருடத்தில் உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள். மக்கள்தொகைப் பெருக்கம்.,ரஷ்யாவில் சோசலிச சமூகம் கூட பின்னடைவுக்கு உள்ளாகி விட்டது. எழுபதுகளின் இறுதியில் மதுரைக்கு சின்ன பெட்டியோடு வந்து இறங்கி ஒரு ஆட்டோகாரனால் அவமானப்படுத்தப்பட்ட அண்ணண் அழகிரியெல்லாம் இந்த 31 வருட காலத்தில் அஞ்சாநெஞ்சராகவும் பெரும் சக்தியாகவும் உருவெடுத்துவிட்டார். ஈழத்தில் ஆயுதப் போராட்டம் ஏறக்குறைய முடிந்து விட்டது. இன்னும் என்னென்னவோ நடந்து விட்டது. நான் கூட பெரிய பையனாகி விட்டேன். ஆனால் இந்த 31 வருடத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு, சென்னையிலிருந்து மதுரைக்கு ஒரு புதிய ரயில் கூட விடப்படவில்லை. (இடையில் விடப்பட்ட கூடல் எக்ஸ்பிரஸைத்தான் மலையாளிகள் பறித்தார்கள்.) 31 வருடத்திற்கு முன் சென்னையின் மக்கள் தொகை என்ன? மதுரையின் மக்கள் தொகை என்ன?இன்றைய மக்கள் தொகை என்ன? அன்றைக்கு ஆம்னி பஸ்சின் எண்ணிக்கை என்ன? இன்றைய ஆம்னி எண்ணிக்கை என்ன?
நான் மதுரை ரயில்வே நிலையத்திற்கு சொல்லும் நிலவரம்தான் தமிழ்நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களுக்கும். அன்று காந்தியடிகள் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்யும்போது தமிழ்நாட்டில் என்ன ரயில்கள் ஓடிக் கொண்டிருந்ததோ அதே ரயில்கள்தான் ஏறக்குறைய தமிழ்நாட்டில் இப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றது. காந்தியடிகள் பயணித்த ரயிலில் பயணிப்பதில் சிலருக்கு வரலாற்றுப் பெருமை இருக்கலாம். ஆனால் இன்றைய புவியியலுக்கு இது போதுமா!
தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களோடு ஒப்பிட்டால் கேரளத்தில் 50 கிலோ மீட்டர் இடைவெளியில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுகின்றன. துல்லியமான புள்ளிவிவரங்களின் வழி இதை பார்ப்போம். திருவணந்தபுரம் தலைநகர் அதனிலிருந்து முப்பது கி.மீ தூரத்தில் இருக்கிறது கொச்சுவேலி என்ற இடம். சென்னையோடு ஒப்பிட்டால் அது சைதாப்பேட்டை போன்றது. மக்கள் தொகையின் அடிப்படையில் அல்ல இது. ஒரு உத்தேச ஒப்பீடு. ஆனால் அங்கிருந்தும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுகின்றன.இதன் பின் கொல்லம்.இது கொச்சுவேலியிருந்து 50 கிமீ.இங்கிருந்தும் எக்ஸ்பிரஸ், பாசஞ்சர் இரண்டும் புறப்படுகின்றன. இதன் அடுத்து ஆலப்புழை இது கொல்லத்திலிருந்து 80 கிமீ. இங்கும் அப்படியே. அடுத்து எர்னாகுளம். இது ஆலப்புழையிலிருந்து 60 கிமீ. சகட்டுமேனிக்கு இங்கிருந்து இந்தியாவின் மூலைமுடுக்குக்குகெல்லாம் ரயில் உண்டு. இதன் அடுத்து திரிச்சூர் இது எர்னாகுளத்திலிருந்து 67 கிமீ.. அடுத்து குருவாயூர். வெறும் 30கிமீ. அடுத்து சொர்னூர் 30கிமீ. கடைசியாக பாலக்காடு சொர்னூரிலிருந்து 50கீமீ. கோழிக்கோடு பாகம் பற்றி என்னிடம் தரவுகள் போதுமான அளவு இல்லை. இந்த ரயில் நிலையங்களிலிருந்து எராளமான வண்டிகள் புறப்படுகின்றன. அப்படியே தமிழ் நாட்டிற்க்கு திரும்புவோம்.
சென்னையை விட்டால் தென் திசையில் அடுத்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் ரயில் நிலையம் திருச்சி. திருச்சிக்கும் சென்னைக்குமான தூரம் 350கிமீ. மற்றொரு பாதையில் போவோம். அடுத்த எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் ஊர் ஈரோடு. இது சென்னையிலிருந்து 387கிமீ. மற்றொரு பாதை கடலூர் வழி போனால் கும்பகோனம் அடுத்த ரயில் நிலையம். இது ஏறக்குறைய 350கிமீ..மற்றொரு பாதையில் போனால் ராமேஸ்வரமே அடுத்த நிலையம். இது திருச்சியிலிருந்து 350 கிமீ. திருச்சியிலிருந்து அடுத்த எக்ஸ்பிரஸ் புறப்படும் ரயில் நிலையம் மதுரை. இது திருச்சியிலிருந்து 150கிமீ. அடுத்து நெல்லை இது மதுரையிலிருந்து 150கிமீ. இதற்கு அடுத்து நாகர்கோவில் 60கிமீ. இது மாத்திரம் குறைவாக இருக்கிறது என்று நீங்கள் கருதினால் கேரளத்தை நெருங்கிவிட்டோம் நண்பர்களே. மதுரைக்கு அடுத்து செங்கோட்டை அடுத்த ரயில்நிலையம் 170கிமீ. முடிந்தது தமிழக எக்ஸ்பிரஸ் வரைபடம்.. ஈரோடு,சேலம் கோவையில் நிறைய ரயில்கள் புழங்குவது போல் தோன்றுவது வெறும் ”காட்சிபிழை”. நண்பர்களே.அவையெல்லாம் நம்மை கடந்து கேரளம் போகின்றவை. “இவையும் கடந்து போகும்” என்ற அத்வைத தத்துவத்தின் அடிப்படையில் நம் ஆத்மாக்கள் அமைதி கொள்ள வேண்டியது தான்.
சென்னை மின்சார ரயில்களின் டிரிப்பை திடீரென போன வருடத்தில் குறைத்தார்கள். ஒரு நாளைக்கு இருபது ட்ரிப் குறைக்கப்பட்டது. குறைத்ததின் மர்மம் என்ன? காணாமல் போன அந்த ரயில்கள் ஈரோட்டிலிருந்து கேரள சொர்னூர்க்கு 170கிமீ கழிப்பறை இல்லாத ரயில்களாக போத்தீஸ், சென்னை சில்க்ஸ் விளம்பரங்களோடு ஒடிக்கொண்டிருக்கிறது .காஸ்மிக் தியரியெல்லாம் மலையாள சதிகள் முன் எம்மாத்திரம். மாடுகள் தான் இப்படி ஓடி போகும். மலையாளிகள் திருடிப் போன ரயில்களை எப்படி ஓட்டி வருவது?
சென்னையிலிருந்து கேரளம் போகும் ரயில்கள் பல இந்தியாவிற்கு அந்நிய செலவானி ஈட்டி தரும் திருப்பூரில் நிற்காது. இன்னும் நிறைய ரயில்கள் கோவைக்குள் நுழையாமல் போத்தனூர் வழியாக பாலக்காடு போய் விடும். இந்த ரயில்கள் தமிழ் நாட்டிற்குள் 400கிமீக்கு நான்கு நிறுத்தங்களில் மாத்திரமே நிற்கும். காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு பிறகு கேரளம் நுழைந்தால் சகட்டுமேனிக்கு பிளாட்பாரங்கள் இல்லாத ரயில் நிலையங்களில் எல்லாம் நிற்கும். குறைந்தது 20 நிறுத்தங்கள், 300கிமீக்கு.
400கிமீ நீளமும் 300கிமீஅகலமும் கொண்ட மாநிலத்தில் எவ்வளவு ரயில்கள். இந்தியாவில் அதிகம் பாசஞ்சர் ரயில் ஒடுவது இங்கு தான் பிராட்கேஜ் 90களிலே முடித்துவிட்டார்கள். நாம் இன்னும் குழி தோண்டிக் கொண்டிருக்கிறோம்.
மதுரை – போடி பாசஞ்சர் பற்றி தனியாக எழுத வேண்டும். பாரதிராஜாவின் “கிழக்கே போகும் ரயில்” ஞாபகம் இருக்கிறதா? அதில் கதாநாயகி பாஞ்சாலி {சிங்கள ராதிகா சித்தி தான்} தினமும் சென்னையில் இருக்கும் கதாநாயகனுக்கு ரயிலில் கடைசி பெட்டியில் செய்தி எழுதி அனுப்புவாள். அந்த ரயில் மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் உடன் இணைக்கப்படும். இது1978. இன்றைக்கும் இந்த வண்டி பாசஞ்சராக தான் ஒடிக் கொண்டிருக்கிறது. இன்னும் மீட்டர்கேஜ் பாதைதான்.” ”வேல்கம்பும் வீச்சரிவாளுமாக திரிகிறவர்கள். போர்தான் எங்கள் பொழுதுபோக்கு” என சொல்லிக் கொள்பவர்கள். இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஒருவேளை காதலர்கள் ரயில் வழிதான் தப்பி போகிறார்கள், பாசஞ்சர் என்றால் விரட்டி பிடித்து விடலாம் என நினைத்தார்களோ என்னவோ.ஆரம்ப காலத்தில் இந்த ரயிலில் வெறும் பொருட்கள் மட்டும் தான் வெள்ளை அதிகாரிகள் ஏற்றினார்களாம். பிறகு போனால் போகிறது என மக்களையும் அனுமதித்தார்களாம். சுதந்திர இந்தியாவிலும் நிலவரம் மாறி விடவில்லை. சுதந்திரம் பெற்று 63 வருடம் கழித்து இப்பொழுது தான் பட்ஜெட்டில் இதை அகலப்பாதை ஆக்க முனுமுனுத்திருக்கிறார்கள். அது ஆகும் இன்னும் ஒரு 10 வருசம்.
மதுரையிலிருந்து பாலக்காட்டிற்கு சர்விஸ் இருந்த பொழுது {இப்பொழுது அகல பாதைக்காக நிறுத்தப்பட்டு உள்ளது.} ஒரு நாளைக்கு 4 வண்டிகள் பாலக்காட்டிற்கு. அது போக கோவை போகும் ரயிலிலும் கனெக்சன் உண்டு. ஆக நாள் ஒன்றுக்கு 6 சர்விஸ்கள். தமிழ் நாட்டில் எந்த ஊர்க்கும் 6 சர்விஸ்கள் எப்பொழுதும் கிடையாது.
செங்கோட்டைக்கு மதுரையிலிருந்து தினமும் 3 பாசஞ்சர்கள். நம் மீதான கரிசனத்தில் அல்ல இவ்வண்டி. இந்த வண்டிகள் போய் சேரும்பொழுது அங்கு தயாராக புனலூர் வண்டி காத்திருக்கும். அதுவே சூட்சுமம்.சிறப்பு ரயில்கள் எப்பொழுதும் நாகர்கோவிலிருந்தே அறிவிக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழகத்திற்கு அறிவிக்கப்படும் சிறப்புரயில்கள் மூன்றில் ஒன்று கேரளத்தின் வழியாகத்தான் போகின்றன.
மதுரை கொல்லம் பாஸ்ட் பாசஞ்சர் இரவு பதினோர் மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு காலை 8.30க்கு கொல்லம் போய்சேரும். மொத்த பயண நேரம் ஒன்போதரை மணி நேரம். அதே ரயில் அங்கிருந்து ஆறு மணிக்கு புறப்பட்டு காலை ஆறு மணிக்கு மதுரை வந்து சேரும். போகும்போது ஒருநேரமும் வரும்போது ஒருநேரமும் ஆவது எப்படி, மாலை ஆறு மணிக்கு கிளம்பும் வண்டி அனைத்து நிறுத்தங்களிலும் நின்று கேரள எல்லையை நான்கு மணி நேரத்தில் கடக்கும். தமிழகத்துக்குள் நுழைந்தபின்பே அது பாஸ்ட் பாசஞ்சர் ஆகும். இந்த கொல்லம் பாசஞ்சர் மதுரை வைகை எக்ஸ்பிரஸ்க்கு கனெக்சன் வண்டி. திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு போகும் அனந்தபுரியை தவறவிட்ட மலையாளிகளுக்காகவே இந்த ஏற்பாடு. இதற்கு முறையான இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு ஒன்றும் கிடையாது. மலையாள அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரிலே இது இயங்கிகொண்டிருக்கிறது.
மற்றொரு சதி உண்டு தமிழகத்தில் புதிய இரயில்கள் கேட்டு கோரிக்கைகள் வைத்தால் ஏற்கனவே ஓடிக்கொண்டிருக்கும் இரயிலை நீட்டிவிடுவது. உதாரணத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெங்களூர்க்கு இரயில் கேட்டார்கள், போராடினார்கள், கடையடைப்பு நடத்தினார்கள், கடைசியாக இரயில் அறிவிக்கபட்டது. அது வேறொன்றுமில்லை, ஏற்கனவே மதுரையிலிருந்து பெங்களூர்க்கு போய்கொண்டிருந்த வண்டியை தூத்துக்குடி வரை நீட்டித்துவிட்டார்கள். தூத்துக்குடி பரதவர்களும் நாடார்களும் மதுரை தேவர்களும் இன்ன பிறரும் கட்டிக்கரையேறி போய் கொண்டிருக்கின்றனர். இது ஒரு வகையில் தமிழ்நாடு அரசாங்கம் அறிவித்திருக்கும் அருந்ததியருக்கான உள் ஒத்துக்கீடு போலத்தான். ஆனால் இதை புதிய ரயில் என்று பட்ஜெட் நம்மிடம் சொல்லும். சமீபகாலங்களில் இந்த நீட்டித்தல்கள் கேரளாவிற்குள் போய்கொண்டிருக்கின்றன. ஈரோட்டிலிருந்து பெங்களூர் போய் கொண்டிருந்த ரயிலை எர்ணாகுளத்திற்க்கு இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள். கோயம்புத்தூரும் இதுபோல் மூன்று இரயிலை இழந்திருக்கின்றது.
கேரளத்தின் முழு நீளத்திற்கும் பாசஞ்சர் ரயில்கள் இருக்கின்றன, மிக குறைந்த கட்டணத்தில் அவர்களால் மாநிலம் முழுவதும் பயணப்பட முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அதிக தொலைவு பயணிக்கும் பாசஞ்சர், நாகர்கோவில் – கோவை பாசஞ்சர் தான், நானூறு கி.மீ. இதில் நாம் கவனிக்க வேண்டியது அது ஒரு கேரள எல்லையிலிருந்து புறப்பட்டு மற்றொரு கேரள எல்லையில் போய் முடிகிறது .
மதுரையிலிருந்து சென்னைக்கு ஒரு பாசஞ்சர் ரயில் நம் மக்களின் நீண்டகால கோரிக்கை. அதனை முடியவே முடியாது என்று பலகாலம் மறுத்தார்கள். கடைசியாக போனால் போகிறதென்று விழுப்புரம் வரை மட்டுமே சாத்தியமென்று ஒரு பாசஞ்சர் ரயிலை அறிவித்தார்கள். இந்த இரயில் தான் ஒட்டு மொத்த தமிழகத்தையே அவமானத்திற்கு உள்ளாக்கும் ரயில். மதுரைகாரர்கள் அத்தனைபேரும் மருந்தை குடித்து சாகலாம் (நான் உட்படத்தான்) ஏனெனில் மதுரை விழுப்புரம் தூரம் 350 கி.மீ பயண நேரம் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நாலரை மணி நேரம்.
இந்த பாசஞ்சர் இரவு பதினோர் மணிக்கு மதுரையிலிருந்து கிளம்பி மறுநாள் மதியம் ஒரு மணிக்கு விழுப்புரத்தை அடையும். பதிமூன்று மணி நேரப்பயணம் அது. வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களில் போனால் மதுரையிலிருந்து விழுப்புரம் போய் மதுரை வந்து மறுபடியும் விழுப்புரம் வந்துவிடலாம். இதில் இன்னோர் கொடூர தகவல் சொல்கிறேன் பதிமூன்று மணி நேரமென்பது அதனுடைய ”சரியான பயண நேரம்” ஆனால் இந்த வண்டியின் சராசரி தாமத நேரம் நான்கு மணி நேரம் .
சேலம் கோட்டத்தை ஒரு ஐம்பது ஆண்டுகால யுத்தத்திற்கு பிறகுதான் நாம் மீட்டோம் .அதை அத்தனை காலம் பிடிவாதமாக நமக்கு விட்டுத்தர மறுத்த முடிவிற்கு பிறகு கேரளத்தின் நலனே ஒளிந்திருக்கிறது. ஒரு கோட்டத்தின் வருமானத்தை கொண்டுதான் அந்த கோட்டத்திற்க்கான நிதி ஒதுக்கப்படும். சேலம் பாலக்காடு கோட்டத்தோடு இருக்கும்போது அதனுடைய வருமானத்தை உயர்த்துவது சேலத்தின் வரவுகளே, இத்தனை காலம் சேலத்தின் வருமானத்தை கொண்டே பல திட்டங்களையும் நிதிகளையும் பெற்றார்கள். ஆனால் கவனமாக இந்த திட்டங்களும் நிதியும் கேரள மாநிலத்திற்கு மட்டும் பயன்படுவது போல் பார்த்துகொள்வார்கள். கேரளத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் சேலம் கோட்டத்தை எதிர்த்தனர். மாநிலம் தழுவிய பந்த் கூட நடத்தினர். கடைசியாக பொள்ளாச்சியை இழந்து நம்மை நஷ்டபடுத்துகின்ற பல இழப்புகளுக்கு பின்பே அதை நாம் பெற்றோம்.
தென்னக ரயில்வே அதிகபட்ச வருவாயை ஈட்டுவது தென் தமிழகத்திலிருந்தே. ரயில்வே பொதுமேலாளருடைய சொற்களின்படி தென் தமிழகத்தில் உள்ள தண்டவாளங்கள் முன்னூறு சதவீத பயன்பாட்டில் இருப்பதாக சொன்னார். மலையாளிகள் ரயில்வே மந்திரிகளாக சில சமயங்களே இருந்தாலும் அதிகாரிகள் மட்டத்திலும் ஊழியர்கள் மத்தியிலும் அவர்களே பெரும்பான்மை. தமிழகத்தின் மொத்த ரயில்வே ஊழியர்களில் கனிசமான சதவீதத்தினர் மலையாளிகளே ஆனால் கேரள ரயில்வே ஊழியர்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவே தமிழர்கள். கோவையெல்லாம் எப்பொழுதோ கேரள ரயில் நிலயமாகிவிட்டது. அங்கு சகலமும் மலையாளிகளே. வாசல்களில் நிற்கும் போலிஸ்காரர்கள் உட்பட. தமிழ்நாடு முழுக்க இருக்ககூடிய ரயில்வே கேண்டின்களும் ரயிலில் விற்கும் பேண்டரிக்காரும் ஏறக்குறைய மலையாளிகளின் வசமே.
2010-11-ம் ஆண்டுக்கான இரயில்வே பட்ஜெட்டை மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
* சென்னை புறநகர் இரயில் சேவையில் புதிதாக இரயில்கள் சேர்க்கப்படும்.
* வேளச்சேரி-பரங்கிமலை மெட்ரோ இரயில் சேவை 2012ல் இயக்கப்படும்.
* கோவையில் இருந்து திருப்பதிக்கு சேலம் வழியாக புதிய இரயில் (வாரம்3 நாள்)
* ஹவுராவில் இருந்து புவனேஸ்வர் வழியாக காட்பாடி-புதுச்சேரிக்கு வாராந்திர இரயில்
* நாகர்கோவிலில் இருந்து மதுரை- ஓசூர் வழியாக பெங்களூருக்கு வாராந்திர இரயில்
* சென்னை- நியூ ஜல்பைகுரி இடையே வாராந்திர இரயில்
* மங்களூர்- திருச்சிக்கு வாராந்திர இரயில்
* மதுரை – திருப்பதி இடையே வாரம் இருமுறை இரயில்
* கோவையில் இருந்து சென்னைக்கு தூரந்தோ இரயில்
* திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலிக்கு பயணிகள் இரயில்
* மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூருக்கு பயணிகள் இரயில்
* கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் இரயில் (அகலப்பாதை அமைக்கப்பட்ட பின்னர்)
* திருப்பதி-நெல்லூர்-சென்னை, சேலம்-காட்பாடி, கோவை-ஈரோடு ஆகிய வழித்தடங்கல்களில் குறுகிய தூர பயணிகள் இரயில்
இதுவே 2010-11 தமிழகத்திற்கான ரயில்கள். இதில் எவ்வளவு பொய் இருக்கிறது பாருங்கள். திருநெல்வேலி-திருச்செந்தூர் பாசஞ்சர், கோவை-பொள்ளாச்சி பாசஞ்சர், மயிலாடுதுறை-தஞ்சாவூர் பாசஞ்சர் இவையெல்லாம் ஏற்கனவே ஓடி கொண்டிருந்த ரயில்கள். இதைத்தான் புதிய ரயில்கள் என்கிறது ரயில்வே பட்ஜெட். இது தவிர மேலே அறிவிக்கபட்டிருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நாகர்கோவில் –பெங்களூர் எக்ஸ்பிரஸ் (அதுவும் வாரம் ஒருமுறை தான்) தவிர ஒன்று கூட தமிழ்நாட்டின் உள்போக்குவரத்துக்கு பயனளிக்க கூடியவை இல்லை.
விழுப்புரம் – திருச்சி மின்சாரமயமாக்குதல் நீண்ட காலமாக அப்படியே கிடக்கிறது. மதுரை- திண்டுக்கல்லில் இரண்டாவது இருப்பு பாதை வருடகணக்காக தொடர்கிறது. மதுரை-பொள்ளாச்சி இருப்புபாதையை இழுத்து மூடிவிட்டார்கள். தமிழகத்தின் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் ஒதுக்கப்படுவதே கிடையாது. இரண்டு வருடத்தில் நடந்து முடியவேண்டிய வேலைகள் ஏழெட்டு வருடங்களாக நீடிக்கின்றன.
மலையாள ரயில்வே அதிகாரிகள்தான் தமிழகத்திற்கான ரயில்வே குறித்த உயர்மட்ட முடிவுகளை எடுக்ககூடிய சக்திகளாக எப்போதும் இருக்கிறார்கள்.
அபகரிப்பது மலையாளிகளின் இயல்பு. அவர்களின் ரயில் பாதைகள் ஒன்றே ஒன்று மட்டுமே. அது கர்நாடகத்தின் வழி செல்கிறது. எனவே அவர்களின் அபகரிப்பு எல்லாம் நம்மிடம்தான்.
மலையாளிகள் ரயில்வே துறையில் அத்தனை கயமையோடு இருக்கிறார்கள் 2006 ரயில்வே பட்ஜெட் மலையாளிகளை புறக்கனிக்கிறது என்று அன்று மாலையே பாரளுமன்றத்தின் வளாகத்தில் பட்ஜெட்டை எரித்தார்கள். 2009ல் காங்கிரஸ் அமைச்சரவையில் ரயில்வே இனைஅமைச்சராக பதவியேற்ற கேரளாவை சேர்ந்த அகமது, இரண்டுமணி நேரத்தில் நேரடி ஒளிப்பரப்பில் மலையாள சேனலான ஏசியா நெட்டில் உடனடியாக மக்களோடு பேசுகிறார். தன்னால் சாத்தியமான அனைத்தையும் கேரளத்திற்கு செய்வதாக வாக்களித்தார்.
சென்னையில் ரயில்வே பொதுமேலாளராக இருந்து 2006ல் ஓய்வுபெற்ற வர்கீஸ் தான் ஓய்வுபெறுவதற்கு முதல்நாள் தற்காலிக பணியாளர்களாக இருந்த நானூறு பேரை நிரந்தர ஊழியர்களாக்கினார். அவர்மீது ஒரு தொழிற்சங்கம் வழக்கு பதிவு செய்தது. அந்த நானூறு பேர்களில் பெரும்பான்மையானோர் மலையாளிகளே……