ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அதற்கான பலன்கள் வழங்கப்படாதது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடந்த ஆண்டு முதலே பல்வேறு கட்ட பேச்சுகள் நடந்து வந்தன. கடந்த ஆண்டு மேமாதம் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். இந்நிலையில், வியாழக்கிழமை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக இல்லத்தில் வியாழக்கிழமையும் பேச்சு நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியுசி உள்ளிட்ட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சு நடத்தினர். இதிலும் சமூக உடன்பாடு எட்டப்படாததை அடுத்து முன்னர் அறிவித்தபடி வேலை நிறுத்தம் தொடங்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் அ.சவுந்தரராஜன் கூறியதாவது:
2.44 ஊதிய காரணியை எக்காலத்திலும் நாங்கள் ஏற்க மாட்டோம். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க அரசு மறுப்பது ஏன்? எங்களது கோரிக்கையை கருணையுடன் பார்க்க அரசு தவறிவிட்டது. போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு நாங்களா காரணம். அரசே கஷ்டத்தை தாங்க முடியாவிட்டால், தொழிலாளி எப்படி கஷ்டத்தை தாங்குவார்கள். நீதிமன்றத்தில் முறையிட்டால் அங்கு எங்களின் நியாயமான கோரிக்கைகளை முன் வைப்போம். வேலை நிறுத்தத்திற்கு அரசு தான் காரணம். நாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கியதால், தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.