முத்தரப்பு ‘டுவென்டி-20’ : இந்திய அணி முதல் வெற்றி ..


முத்தரப்பு ‘டுவென்டி-20’ தொடரில் இந்திய அணி முதல் வெற்றி பெற்றது. இரண்டாவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இலங்கை மண்ணில் இந்தியா, வங்கதேச அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ‘டுவென்டி-20’ நடக்கிறது. முதல் லீக் போட்டியில் இந்திய அணி இலங்கையிடம் தோல்வியடைந்தது. கொழும்புவில் நடந்த இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்துடன் மோதியது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

 

வங்கதேச அணிக்கு சவுமியா சர்கார் (14) ஏமாற்றினார். ஷர்துல் தாகூர் ‘வேகத்தில்’ தமிம் இக்பால் (15) ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் பந்துவீச்சில் முஷ்பிகுர் ரகிம் (18), கேப்டன் மகமுதுல்லா (1) சிக்கினர். பொறுப்புடன் விளையாடிய லிட்டன் தாஸ் 34 ரன்கள் எடுத்தார். உனத்கட் ‘வேகத்தில்’ மெகதி ஹசன் (3), சபிர் ரஹ்மான் (30) ஆட்டமிழந்தனர். வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. டஸ்கின் அகமது (8), முஸ்டபிஜுர் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக உனத்கட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

பின், களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் (17) ஏமாற்றினார். ரிஷாப் பன்ட் 7 ரன்களில் திரும்பினார். பின், இணைந்த ஷிகர் தவான், ரெய்னா ஜோடி சிறப்பாக செயல்பட்டது. ரூபைல் பந்தில் ரெய்னா (28) ஆட்டமிழந்தார். இத்தொடரில் தவான் இரண்டாவது அரை சதம் அடித்தார். இவர் 55 ரன்களில் அவுட்டானார். மணிஷ் பாண்டே கைகொடுக்க, இந்திய அணி 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாண்டே (27), தினேஷ் கார்த்திக் (2) அவுட்டாகாமல் இருந்தனர்.