காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி விமானநிலையத்தை விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் டிடிவி.தினகரன், அய்யாக்கண்ணு உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டம் நடத்திய தினகரன், பி.ஆர்.பாண்டியன்,அய்யாக்கண்ணுவை போலீசார் கைது செய்தனர்.
டிடிவி தினகரன், அ.ம.மு.க கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் விவசாயிகளால் திருச்சி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விமான நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
இந்த போராட்டத்தில் விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான அய்யாகண்ணு தலைமையில் திரளான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளுக்காக தஞ்சையில் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை ஆரம்பித்து வைத்தவர் டிடிவி தினகரன் என அய்யாகண்ணு அப்போது புகழாரம் சூட்டினார். அநாதைகளாக இருந்த எங்களுக்கு ஆதரவு கரம் நீட்டியவர் டிடிவி தினகரன் என்றும் அய்யாகண்ணு தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும், விவசாயிகளும் திருச்சி விமான நிலையத்தை சுற்றிலும் குவிந்துள்ளதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான நிலையங்களுக்கு செல்வோரும், வெளியே வருவோரும் உரிய நேரத்தில் செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அங்கே சேர்ந்துள்ளது.
மும்பையை அதிர வைத்த விவசாயிகள் பேரணியை போல திருச்சியில் பேரணி நடந்தது. எங்கு பார்த்தாலும் விவசாயிகள் தலையாக தென்பட்டது.
ஆயிரக்கணக்கான விவசாயிகளும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் திருச்சியில் குவிந்ததால் விமான நிலைய பகுதியே ஸ்தம்பித்தது.
திருச்சி விமான நிலையத்தை சூழ்ந்த விவசாயிகளும், தினகரன் ஆதரவாளர்களும், தடையை மீறி உள்ளே செல்ல முயற்சி செய்தனர். போலீசாரின் தடுப்புகளை தாண்டி விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை சிலர் உடைத்து எறிந்தனர்.
அப்போது தொண்டர்களையும், விவசாயிகளும் அமைதிகாக்குமாறு தினகரன் மற்றும் அய்யாகண்ணு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்பிறகு அய்யாகண்ணு தலைமையில் காவிரி தொடர்பாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அதை வழிமொழிந்து, தொண்டர்கள் கோஷமிட்டனர்.