முக்கிய செய்திகள்

திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டது..


திருச்சியில் பல்லவன் ரயில் தடம் புரண்டு விபத்துள்ளானது. பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் ரயில் திருச்சி வழியாக செல்கிறது. வழக்கம்போல் அந்தவழியாக இன்று காலை திருச்சி வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி கிராப்பட்டி அருகே வந்துகொண்டிருக்கும்போது ரயிலின் இன்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு இறங்கினர். தகவலறிந்த ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சரி செய்யும் பணியை செய்து வருகின்றனர். இன்று காலை 6.40 மணிக்கு பல்லவன் ரயில் திருச்சி வரும். இதனால் ரயில் காலதாமதம் ஆவதால் பயணிகள் ஒருபுறம் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மறுபுறம் ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பயணிகளின் உறவினர்கள், சக பயணிகள் அங்கு கூடி வருவதால் பரபரப்பு நிலவுகிறது.

இந்நிலையில், ரயில்வே துறை அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ”விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் தெரியவரும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.