முக்கிய செய்திகள்

முத்தரப்பு டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு..


இலங்கையில் மார்ச் மாதம் நடைபெற உள்ள டி20 முத்தரப்பு தொடரில், பங்கேற்கும் இந்திய அணில் கேப்டன் விராட் கோலி, அனுபவ வீரர் எம்.எஸ். தோனி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, முற்றிலும் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஷிகர் தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் மார்ச் 6-ம் தேதி முதல் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை தவிர மூன்றாவதாக பங்கேற்கும் அணி குறித்த தகவல் இல்லை.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை தேசிய தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் இன்று அறிவித்தார். இதில் சமீபத்தில் உள்நாட்டில் நடந்த சயீத் முஷ்டாக் அலி டி 20 தொடர், ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய வீரரக்ளுக்கு முக்கியத்துவம் அளித்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தென் ஆப்பிரிக்கத் தொடரில் கடுமையாக விளையாடி ஓய்வின்றி இருந்த கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர்கள் காயத்தில் சிக்காமல் தடுக்க, போதுமான ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்துவரும் தொடர்களில் வேகப்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது என பிரசாத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று விளையாடிய வீரர்களுக்கும், திறமையை சீராக வெளிப்படுத்திவரும் வீரர்களுக்கும் அதிகமாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்ட ரிஸ்பா பந்த், ஆஃப் ஸ்பின்னர் வாஷிங்டன் சுந்தர், வேகப்பந்துவீச்சாளர் முகம்மது சிராஜ், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பாண்டயா இடத்தை நிரப்பும் வகையில் தமிழக வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரிஷி பந்த் விக்கெட் கீப்பர் பணியைச் செய்யக்கூடியவர் என்றபோதிலும், தினேஷ் கார்த்திக்கும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், ரிஷப் பந்த் பேட்ஸ்மன், பீல்டராக மட்டும் செயல்படுவார்.

மேலும், இந்த சீசனில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான்(துணைக் கேப்டன்), கே.எல். ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்சர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெயதேவ் உனட்கத், முகம்மது சிராஜ், ரிஷ்பா பந்த்(விக்கெட் கீப்பர்)