முக்கிய செய்திகள்

திரிபுராவில் லெனின் சிலை அகற்றம். ..


திரிபுராவில் கால் நூற்றாண்டாக கோலோச்சி வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி பாஜக, ஐபிஎப்டி கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.

திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்தது. போட்டியிட்ட 51 தொகுதிகளில் 35 இடங்களை பாஜக கைப்பற்றி இருக்கிறது. ஒரு கவுன்சிலர் கூட இல்லாத பாஜக பெற்றுள்ள இந்த வெற்றியை அம்மாநில பாஜகவினர் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இதற்கிடையில், அங்கு பா.ஜ.க தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்துள்ளது.

மேலும், தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் வலுத்துள்ளது. ‘பா.ஜ.க மண்ணில் லெனின் சிலை எதற்கு’ என்று முகநூல் பக்கங்களில் சிலை அகற்றத்துக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.

‘இதுதான் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளின் உண்மை முகம்’ என்று கண்டனங்களும் குவிந்து உள்ளன. தேர்தல் முடிவுகள் வெளிவந்ததில் இருந்து திரிபுராவின் இயல்பு நிலை வழக்கத்துக்கு மாறாக இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க தேசிய செயலாளர் எச். ராஜா தனது முகநூல் பக்கத்தில், ‘திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்’ என்று பதிவிட்டுள்ளார்.