“திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராகிறார் 21 வயதான மாணவி” : இந்தியாவின் இளம் மேயரை தேர்வு செய்த சி.பி.ஐ.எம்…

திருவனந்தபுரத்தில் 21 வயதேயான ஆர்யா ராஜேந்திரன் என்ற இளம்பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி வெற்றிபெற்றது.

மாவட்டப் பஞ்சாயத்துக்களில் மொத்தமுள்ள 14 இடங்களில் 11 இடங்களையும், வட்டார பஞ்சாயத்துக்களில் மொத்தம் உள்ள 152 இடங்களில் 108 இடங்களையும், கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் உள்ள 941 இடங்களில் 514 இடங்களையும் இடது ஜனநாயக முன்னணி வென்றிருக்கிறது. ஆறு மாநகராட்சிகளில் 3 இடங்களையும், 86 நகராட்சிகளில் 35 நகராட்சிகளையும் வென்றிருக்கிறது.

ஐந்தாண்டுகளுக்கு முன் 2015இல் நடைபெற்ற தேர்தல்களைவிட அனைத்து விதங்களிலும் இடது ஜனநாயக முன்னணி வெற்றியைக் கணிசமான அளவிற்கு மேம்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த தேர்தலில் இளைஞர்களை அதிகளவில் களமிறக்கி வெற்றி பெற்றுள்ளது இடதுசாரி முன்னணி.

இந்நிலையில் தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்ட 21 வயதான இளம்பெண், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்தியாவிலேயே இளம் மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பெருநகர் மாநகராட்சியில் முடவன்முகல் பகுதியில் வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர் ஆர்யா ராஜேந்திரன். இவர் திருவனந்தபுரம் ஆல் ஜெயிண்ட் கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் படித்துக்கொண்டே இந்திய மாணவர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், பாலர் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருந்து வந்துள்ளார்.

பா.ஜ.கவை எதிர்த்து போட்டியிட்ட ஆர்யா பெருவாரியான வாக்கு வித்தியாத்தில் வெற்றி பெற்று கவுன்சிலராக பதவி ஏற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய ஆர்யாவை திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சியின் புதிய மேயராக அறிவித்துள்ளது இடது ஜனநாயக முன்னணி. இதன் மூலம் நாட்டிலேயே இளம் மேயர் என்ற பெருமையை ஆர்யா ராஜேந்திரன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர பற்றாளரான ஆர்யா ராஜேந்திரன், தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் பழனிசாமியா? பதிலளிக்க மறுத்த மத்தியமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா : பிற மாவட்ட பக்தர்களுக்கு தடை ; தமிழக அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு..

Recent Posts