எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கிய போதே, அது நடந்து விட்டது.
தமிழக அரசியலின் சித்தாந்தச் சரிவு என்பது, மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கிய புள்ளி என அதைத்தான் கூற முடியும்.
தமிழக வரலாற்றில் அதற்கு முன்னர் அரசியல் ரீதியாக அழுத்தமான வரலாற்றுத் தேவையோ, காரணிகளோ இல்லாமல், அப்படி ஒரு தக்கையான கட்சி தொடங்கப்பட்டதில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக தொடங்கப்பட்டு, பின்னர் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றப்பட்ட எம்ஜிஆரின் அந்தக் கதம்பக் கட்சிதான், 20 ஆம் நூற்றாண்டின் மிக மோசமான அரசியல் சரிவாகவும், சீரழிவாகவும் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் அரசியல் வருகை, சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த் தொடங்கி தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை அரசியல் கட்சிகளைத் தொடங்குவதற்கான உந்துதல் என அத்தனை வரலாற்று அவலட்சணங்களுக்கும் எம்ஜிஆரே தொடக்கப்புள்ளி.
ஜேப்பியார், திருநாவுக்கரசர் போன்றோருக்கு திரையில் நாயகர்களாக நடிக்க வேண்டும் என்ற ஆபத்தான ஆசை வந்ததற்கான ஆதர்ச புருசரும் எம்ஜிஆரே!
ஜேப்பியார்களும், ஐசரி வேலன்களும் வரலாற்றில் கல்வித் தந்தையாக இடம் பெற காரணமான “கருணை” வள்ளலும் எம்ஜிஆர்தான் என்பது, தனிப்பெரும் கதை!
ஏன் எம்ஜிஆர் மீது இத்தனை கோபம் என்கிறீர்களா…
தமிழக அரசியல் சீரழிவின் வேர்களைத் தேடினால், வெட்டி எறிய முடியாத புதர்களின் பின்னலாக, எம்ஜிஆரே இறுகிப் படர்ந்து கிடக்கிறார். எனவே அவரை விமர்சிக்காமல், இன்றைய சீரழிவு முகங்களை நீங்கள் தோலுரிக்க முடியாது.
இறந்தவர்களை விமர்சிப்பது மரியாதைக் குறைவானது எனக் கண்ணியம் காக்குமளவுக்கு எம்ஜிஆரின் தவறுகள் எளிமையானவை அல்ல. தமிழகத்தின் நூற்றாண்டையும் தாண்டிய அரசியல் சீரழிவுக்கு காரணமாகிவிட்ட அவரை அத்தனை எளிதாக கடந்து சென்று விடவும் முடியாது.
கலைஞரின் மீது கொண்ட காழ்ப்பைத் தவிர, அதிமுகவின் தொடக்கத்திற்கு வேறு எந்த அரசியல் அடிப்படையும் இல்லை என்பது, தமிழகம் அறிந்த வரலாற்று உண்மை.
ஆனால், கலைஞர் உட்பட அனைவருமே, எம்ஜிஆரை விமர்சிப்பதில் காட்டிய மெத்தனமும், மென்மையான போக்குமே, தமிழகம் இன்றுவரை சந்தித்து வரும் மிக மோசமான விளைவுகளுக்கும் காரணமாகி விட்டது.
1972 அக்டோபரில் அதிமுகவைத் தொடங்கிய எம்ஜிஆர், கலைஞர் மீதும் அவரது அரசின் மீதும் இன்றுவரை நிரூபிக்கப்படாத ஊழல் குற்றச்சாட்டுகளைப் பேசுவதையே தனது முழுநேர அரசியல் செயல்பாடாக வரித்துக் கொண்டார். நாடே எதிர்த்து நின்ற இந்திராகாந்தியின் அவசரநிலை பிரகடனத்தை அவர் ஆதரித்தார். திமுகவில் இருந்த போதே, எந்த ஒரு போராட்டக்களத்திலும் பங்கேற்று கைது செய்யப்படாத ஒரே “புரட்சி”த் தலைவரும் அவர்தான்.!
ஆட்சிக்கு வந்த பின்னரோ, அவர் திரைப்படங்களில் பேசிய அனைத்து வசனங்களுக்கும் மாறாகவே மக்களை அணுகினார்.
விவசாயிகள் மீது ஒடுக்குமுறை, மீனவர்கள் மீது அடக்குமுறை என எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அரங்கேறிய மக்கள் விரோத நடவடிக்கைகளின் பட்டியல் மிக நீளமானது. அதுமட்டுமின்றி, திராவிட இயக்கத்தின் உயிர்நாடியான சமூகநீதிக் கோட்பாட்டுக்கே உலைவைக்கும் வகையில், இடஒதுக்கீடு முறைக்கே சாவு மணி அடிக்கவும் துணிந்து விட்டார். வருமான உச்சவரம்பு அடிப்படையில் இடஒதுக்கீடு என அவர் வெளியிட்ட அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நல்ல வேளையாக கைவிட்டார்.
இத்தகைய அடிப்படையில் எம்ஜிஆரை அணுகினால் தான், அவருடைய அரசியலற்ற தன்மையை (Apolitical sense) இன்றைய தலைமுறையினர் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
ஆனாலும், இடதுசாரிகள் எம்ஜிஆரை வளர்த்து நிலை நிறுத்துவதில் முழு மூச்சாக இருந்தனர். (அவர்களது கட்சி வளர்ச்சிக்காக கூட அத்தனை பாடு பட்டிருக்க மாட்டார்கள்!)
இடதுசாரிகள் ஒரு பக்கமும், இந்த்துவ, பார்ப்பன சக்திகள் மறுபக்கமும் கலைஞருக்கும், திராவிட இயக்கத்திற்கும் எதிராக எம்ஜிஆரை வளர்த்தெடுக்கும் கைங்கர்யத்தை மிக கவனமாக அரங்கேற்றி முடித்தனர். அப்போதைய இடதுசாரிகளும், இந்துத்துவ பார்ப்பன சக்திகளும் இதில் ஏறத்தாழ ஓரணியாய் நின்றதுதான் வரலாற்று வினோதம்.
திமுகவையும் கலைஞரையும் இடதுசாரிகள் தங்களது அரசியல் எதிரியாக பார்த்தார்கள் என்றால், இந்துத்துவ பார்ப்பனர்கள் தங்களது தத்துவ எதிரியாக பார்த்தார்கள். எப்படியோ எம்ஜிஆரை ஆதரிப்பதில் இடதும், வலதும் ஒரு புள்ளியில் இணைந்தன.
எம்ஜிஆரைப் போல அடிப்படை அரசியல் கோட்பாடுகள் எதுவுமற்ற கலவையான ஒரு கவர்ச்சி பிம்ப ஆளுமை மூலம் மட்டுமே திமுகவை பலவீனப் படுத்த முடியும் என்பதை இடதும், வலதும் சரியாகவே கணித்து காய்நகர்த்தினர். காலத்தின் சூழல் அதைக் கச்சிதமாகவும் நிறைவேற்றிக் கொடுத்தது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதே போன்ற பிம்ப அரசியலுக்கு வாகான ஆளுமையாக அவர்களுக்கு ஜெயலலிதா வாய்த்தார்.
ஜெயலிலதா இரண்டு விதங்களில் பார்ப்பன, சனாதன, ஆதிக்க சக்திகளுக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தார்.
ஒன்று – தமிழகத்தில் அடுத்த சில ஆண்டுகளுக்கு அரசியல் தன்னுணர்வு என்பதை துளிர்க்கவே விடாமல் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு, பாசிச குணம் அவரிடம் படிந்திருந்தது.
இரண்டு – ராஜாஜிக்குப் பிறகு மிக வலிமையான, அவரை விடவும் வாக்குகளை வேட்டையாடும் வசீகரம் மிக்க தலைமையாகவும் ஜெயலலிதா அவர்களுக்கு கிடைத்தார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேல், அண்ணா, கலைஞர் போன்ற ஆளுமைகளுடன் திமுகவில் இருந்து வந்த எம்ஜிஆருக்கே அரசியல் கோட்பாட்டு உறுதி என எதுவும் இல்லாத போது, ஜெயலலிதாவிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்.
அரசியல் உறுதியற்றவர்களின் கையில் கிடைக்கும் ஆட்சி, அதிகாரம், மனநிலை பிறழ்ந்தவர்களின் கையில் இருக்கும் துப்பாக்கியை விடவும் ஆபத்தானது. அதனைத்தான், ஜெயலிலதாவின் ஆட்சிக் காலங்களில் நாம் அனுபவித்தோம்.
ஆட்சி நடத்துகிறேன் பேர்வழி என்ற பெயரில், அவர் அரங்கேற்றிய அவலங்களையும், அராஜகங்களையும் பட்டியலிடத் தேவையில்லை.
ஜெயலலிதாவின் 1991 – 1996 ஆட்சிக் காலத்தில், அவருக்கு ஆதரவாகவும், பின்னணியாகவும் செயல்பட்டதுதான் மன்னார்குடி மாபியா என தமிழகத்தையே குலை நடுங்க வைத்த சசிகலா குடும்பக் கும்பல். சசிகலா குடும்பத்தின் “ஃபேமிலி ட்ரீ” (Family tree) வரைபடத்தை போட்டு விளக்க வேண்டிய பரிதாப நிலைக்கு நமது ஊடகங்களும், பத்திரிகைகளும் தள்ளப்பட்டதையும் ஒரு கட்டத்தில் பார்த்தோம்.
சசிகலாவின் “அரசியல் பங்களிப்பு” எத்தகையது என்பதை, அவர்களது முகாமில் இருந்து “சத்தியாவேச” உந்துதலால் வெளியேறிவிட்டதாக கூறிக்கொள்ளும், ஈபிஎஸ், ஓபிஎஸ் வகையறாக்களே தற்போது புட்டு, புட்டு வைத்து வருவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம். அமைச்சர் ஜெயக்குமார் அதனை மிகத் தெளிவாகவே அவ்வப்போது விளக்கி வருகிறார்.
எம்ஜிஆரால் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். ஜெயலலிதாவால் சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த தினகரனும் தற்போது அரசியலுக்கு வந்துள்ளனர்.
எம்ஜிஆர் என்ற அரசியல் குழப்பத்தின் வீச்சும், வீரியமும், எந்த அளவுக்கு மோசமாக தமிழகத்தை பாதித்திருக்கிறது என்பதற்கு இவர்களே உதாரணம்.
சசிகலா தான் செய்த “தியாகங்களுக்காக” சிறைக்கு சென்று விட்ட நிலையில், அவரது பிரதிநிதியாக டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் களமாடி வருகிறார்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கொள்ளையிடப்பட்ட சொத்துகளை பாதுகாப்பாக பதுக்கவும், ஒதுக்கவுமான கடுமையான “சாதனை”களைப் புரிந்தவர்…
ஓ.பன்னீர்செல்வம் முதல் பலரையும் அரசியலில் “முன்னுக்கு” கொண்டு வந்த “பேராளுமை”…
என்ற ஒளிவட்டங்கள் பின்னணியில் சுழல, அரசியல் அரங்கிற்குள் நுழைந்த டிடிவி தினகரன், தற்போது திமுகவை எள்ளி நகையாடும் அளவுக்கு துணிவையும் பெற்றிருக்கிறார்.
எனக்குத் தெரிந்து திமுகவை, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் கூட இந்த அளவுக்கு இழிவாக சிறுமைப்படுத்தி இருக்க மாட்டார்கள்.
தினகரனுக்கு எங்கிருந்து இத்தனை துணிச்சல் வந்தது?
ஆர்கே நகர் தேர்தல் வெற்றி.
திமுகவினரின் தவறான மதிப்பீட்டாலும், ஓரே ஒரு தொகுதி என்பதால் 20 ரூபாய் டோக்கன் பார்முலா மூலம் தினகரன் அங்கு செய்த தில்லாலங்கடி வேலைகாளாலும், ஆர்கே நகர் வெற்றி சாத்தியமாயிற்று.
இப்போது தினகரனை ஆதரிப்பவர்கள் சொல்வது என்ன?
அவர் துணிச்சலாக பாஜகவை எதிர்க்கிறார்…
மிக சரளமாக செய்தியாளர்களுடன் பேசுகிறார்…
எதையும் “இன்முகத்துடன்” எதிர் கொள்கிறார்…
இப்படி நிறைய பட்டியலை வாசிக்கிறார்கள்.
அவரது பாஜக எதிர்ப்பு எத்தகையது, எதுவரை என்பதையெல்லாம் காலம் விரைவில் காட்டிக் கொடுத்து விடும்.
எந்தப் பொறுப்பும் இல்லாதவரை தெருவில் குப்பை பொறுக்கும் சிறுவன் கூட செய்தியாளர்களுடன் சரளமாக பேச முடியும்.
புன்னகைக்கும் போது ஹிட்லரின் முகமும் கூட இன்முகமாகத்தான் தோன்றி இருக்கும்.
அவர் வெற்றி பெற்ற ஆர்கே நகர் தொகுதி மக்களிடம் தற்போது சென்று கேட்டால், தினகரனின் உண்மையான தன்மை என்ன என்பது புரியும்.
போகட்டும்.
தினகரனின் ஆதரவாளர்கள், அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதுகுறித்து விமர்சிப்பது வீண்வேலை.
ஆர்கே நகர் தேர்தலின் போது, ஊடக விவாதங்களில் பங்கேற்ற சில பழம் பெரும் பத்திரிகையாளர்களும், “நடுநிலையாளர்கள்” எனக் கூறிக் கொண்டு நாக்கூசாமல் பொய் பேசுவோரும், தினகரன் வசீகரம் மிக்க தலைவராக (charismatic leader) உருவெடுத்து விட்டதாக பரவசப்பட்டார்களே பார்க்கலாம்… அப்போதுதான் தினகரன் எனும் அரசியல் ஆபத்தின் மற்றொரு பரிமாணத்தை நம்மால் உணர முடிந்தது.
திமுகவுக்கும், கலைஞருக்கும் எதிராக எம்ஜிஆரையும், ஜெயலலிதாவையும் நிறுத்திய கூட்டம், இப்போது தினகரனை அந்த இடத்திற்கு கொண்டு வரப் பார்க்கிறது என்பது அப்போதுதான் அம்பலமானது.
இடைப்பட்ட காலத்தில் அந்த இடத்திற்கு விஜயகாந்தை கொண்டு வர தமிழருவி மணியன்களைப் போல பலர் பாடாய்பட்டனர். அது முடியாமல் போய்விட்டது.
இப்போது தினகரன்.
இந்திரா காந்தியின் மிரட்டலுக்கு பயந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றிய எம்ஜிஆரின் கதம்ப அரசியலின் பரிணாம வளர்ச்சியாகவும், விளைச்சலாகவும் தோன்றி இருப்பதுதான் டிடிவி தினகரனின், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற “புரட்சி” இயக்கம்!
சரி. தினகரன் தொடங்கி இருக்கும் கட்சியின் கொள்கை என்ன?
அவரை ஆதரிக்கும் அறிவு ஜீவிகள் அதுகுறித்தெல்லாம் கவலைப்படத் தயாராக இல்லை. ஊடகவியலாளர்கள் கூட அந்தக் கேள்வியை தினகரனிடம் எழுப்பியதாகத் தெரியவில்லை.
தமிழ்த்தேசிய பொதுவுடைமைச் சிந்தனையாளரும், பெருங்கவிஞருமான தணிகைச் செல்வன், பத்து ஆண்டுகளுக்கு முன்னர் “தேசியமும் மார்க்சியமும்” என்ற நூலை எழுதுவதற்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வேலைத்திட்டம் அல்லது கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தேடி அலைந்தது நினைவுக்கு வருகிறது. இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், திமுக தவிர மற்ற கட்சிகளிடம் முறையான கொள்கை விளக்கக் குறிப்பே இல்லை என்பதை அனுபவ ரீதியாக அப்போது உணர நேர்ந்ததாக அவர் கூறுவார்.
அரசியல் கட்சி தொடங்க கொள்கை என்ற ஒன்றே தேவையில்லை என்ற நிலைக்கு தமிழகத்தின் அறிவுத் தளம் சரிந்து கிடப்பதை அவர் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த நிலையின் உச்சபட்ச அடையாளம், வெளிப்பாடு, விளைச்சல் தான் டிடிவி தினகரன்.
இந்த நிலையில் தான் தினகரனை திராவிடத்தின் பரிணாமம் எனச் சிலரும், கரிஸ்மாட்டிக் லீடர் எனச் சிலரும் சமூக வலைத்தளங்களில் கட்டமைக்க படாத பாடு பட்டு வருகின்றனர்.
சமூகநீதி, சாதி ஒழிப்பு, சமத்துவம் போன்ற கருத்தாக்கங்களை, தமிழ் மண்ணில் இருந்து வேரடி மண்ணோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற மூர்க்கத்தின் வெளிப்பாடே தினகரன் ஆதரவு என்ற நிலைப்பாடு.
அதிமுக தொடங்கப்படும் வரை, நீதிக்கட்சி – காங்கிரஸ், காங்கிரஸ் கம்யூனிஸ்ட், திமுக – காங்கிரஸ் என தமிழக அரசியல் களத்தில் குறைந்த பட்ச தத்துவார்த்த மோதலுக்கும், விவாதங்களுக்கும் இடமிருந்தது.
எம்ஜிஆர் காலத்தில் திரைக்கவர்ச்சியே அரசியல் களத்தை தீர்மானிக்கும் என்ற நிலைக்கு தேய்ந்தது.
ஜெயலலிதா காலத்தில் ஊழல் மூலமாக பொருள் குவித்து, அதன் மூலம் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரம், அரசியலாக பரிணமித்தது.
அதிமுகவினரால் அது அரசியல் வேலைத்திட்டமாகவே புதுப்புது வியூகங்களுடன் விரிவு படுத்தப்பட்டது.
தினகரனோ 20 ரூபாய் டோக்கன் சிஸ்டமாக தமிழக அரசியலை அதல பாதாளத்திற்கு சரித்துத் தள்ளி விட்டார்.
தமிழக அரசியல் களத்தை, தத்துவார்த்தத் தேடல் கொண்ட அறிவுத்தளமாக மீண்டும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும் என்ற குறைந்த பட்ச அக்கறை இருப்பவர்கள் கூட, தினகரன் போன்றவர்களை ஆதரிக்க முடியாது.
நீதிக் கட்சித் தலைவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் வழியாக தமிழ்ச் சமூகம் பெற்ற அறிவார்ந்த அரசியல் பயணத்தையும், அடையாளத்தையும், தினகரனைப் போன்ற சுயநலமிகளின் கூட்டம், சுனாமியின் வேகத்துடன் வந்து அழித்தொழிக்க பார்க்கிறது.
வர்ணாசிரமத்தை இந்த மண்ணில் மீண்டும் நிலை நாட்டத் துடிக்கும் இந்துத்துவ, பார்ப்பனிய சக்திகளோ, அதற்கு வசதியான ஆயுதமாக தினகரன்களைப் போன்ற சுயநலமிகளைப் பயன்படுத்த அனைத்து வகையிலும் தயாராகி வருகிறது.
தேர்தல்களில் தினகரன் பெறும் வெற்றி என்பது அரசியலுக்கு ஏற்படும் தோல்வி என்பதை அறிவார் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏற்கனவே இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற அரசியல் விபத்துகளில் சிக்கி சின்னாபின்னப் பட்டுவரும் தமிழகம், இந்த நூற்றாண்டில் தினகரன் என்ற மேலும் ஓர் ஆபத்தை எதிர் கொள்ள வேண்டுமா என்பதை இன்றைய தலைமுறை சிந்தித்து பார்க்க வேண்டும்.
திருவாரூர் இடைத்தேர்தலில் என்ன செய்கிறேன் பாருங்கள் என்ற பாணியில் சிரிக்கும் தினகரனின் தெனாவட்டான புன்னகை, ஏனோ நமக்கு ஹிட்லரை நினைவு படுத்துகிறது.
எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில், தினகரனைப் போன்ற மற்றுமோர் அரசியல் பேராபத்து தமிழகத்திற்கு தேவையா நண்பர்களே…?