டிடிவி தினகரன் அணிக்கு ‘பரிசுப்பெட்டி’ சின்னம் ஒதுக்கீடு..

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் மொத்தம் 59 தொகுதிகளுக்கும் பொதுவான தேர்தல் சின்னம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து பிரிந்து தனி அணியாக இயங்கி வருபவர் டிடிவி தினகரன். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் வெளியேறினார் தனி அணியாக செயல்பட்டார்.

இந்நிலையில் சசிகலா தலைமையிலான அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு ஆட்சி அமைந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல, பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். தினகரன் வெளியேற்றப்பட்டார்.

டிடிவி தினகரன் தலைமையில் அமமுக என தனி அணி அமைந்தது தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

ஓபிஎஸ் இபிஎஸ் அணியினர் புதிதாக கட்சியில் மாற்றம் கொண்டுவந்து  ஒருங்கிணைப்பாளர், ஒருங்கிணைப்பாளர் என பொதுக்குழு மூலம் ஒப்புதல் வாங்கி  நாங்கள்தான் உண்மையான அதிமுக என நடத்தி வருகின்றனர்.

தனியாக செயல்படும் டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் வென்றதன்மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என அவர் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே இரட்டை இலை சின்னம் தங்களுக்குத்தான் சொந்தம் என்று டிடிவி தினகரன் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் அது ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணிக்கு என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனியாக வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் தனிக்கட்சியாக துவக்கினால் இரட்டை இலைக்கு  உரிமை கோர முடியாது என்பதால் தனி அணியாக தேர்தல் கட்சியாக பதிவு செய்யாமல் அமமுக இயங்கி வருகிறது.

நாடாளுமன்ற மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர்சின்னம் கேட்டு டிடிவி அணி உச்சநீதிமன்றம் சென்றது.

தனிக்கட்சியாக பதிவு செய்யாததைப்பயன்படுத்திய  அதிமுக, குக்கர் சின்னம் கோரிய வழக்கில்  பொதுச் சின்னம் பதிவு செய்யப்படாத கட்சிக்கு வழங்கக்கூடாது என எதிர்த்தது.

தேர்தல் ஆணையமும் பதிவு செய்யப்படாத கட்சிக்கு  தனிச்சின்னம் வழங்குவது தேவையற்ற முன்னுதாரணத்தை உருவாக்கும் என்பதால் வழங்க முடியாது என்று  மறுத்துவிட்டது.

இதையடுத்து தாங்கள் தனி அணியாக ஏற்கனவே இயங்கி வருகிறோம் தங்களுக்கு குக்கர் சின்னம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என டிடிவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

குக்கர் சின்னம் வழங்காவிட்டால், ஏதாவது ஒரு பொதுச்சின்னம் ஒதுக்குங்கள்,  தனிக் கட்சியாக பதிவு செய்ய தயார் ஆனால் கால அவகாசம் இல்லை என்று தெரிவித்தனர்.

இதை ஏற்றுக்கொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம் குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்தது.

அதேவேளையில் இருக்கின்ற நிலைமையை கருத்தில் கொண்டு டிடிவி தினகரன் அணிக்கு ஒரு பொதுவான சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

ஆனால் அவர்கள் தேர்தலில் வென்றால் சுயேச்சையாக தான் கருதப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தலுக்கு இன்னும் நாட்களே உள்ள நிலையில் டிடிவி தினகரன் சின்னம் இல்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலை நீடித்தது.

இந்நிலையில் இன்று காலை 7 மணி அளவில் தேர்தல் ஆணையம் தரப்பில் டிடிவி தினகரன் அணிக்கு பொதுவான சின்னம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 தொகுதிகள் பாண்டிச்சேரி 1 தொகுதி,  தமிழகத்தில்  18 சட்டமன்ற தொகுதிகளின்  இடைத்தேர்தல் மற்றும் பாண்டிச்சேரியில் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தல் என மொத்தம் 59 தொகுதிகளில் டிடிவி அணிக்கு அவருக்கு பரிசு பெட்டி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ள தேர்தல் ஆணையம், உடனடியாக அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு  அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் டிடிவி தினகரன் அணியினருக்கு இந்த சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் டிடிவி தினகரன் அணி இந்த தேர்தலில் பரிசு பெட்டி சின்னம் மூலம் 59 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பரிசுப்பெட்டி சின்னத்தில் தினகரன் அணியினர் போட்டியிட்டாலும் அவர்கள் சுயேச்சைகளாகத்தான் கருதப்படுவார்கள்.