தூத்துக்குடியில் 2 நாள்கள் 144 தடை அமல் : மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

தூத்துக்குடியில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவு தினத்தை முன்னிட்டு வரும் 25 முதல் 27-ம் தேதி வரை 2 நாள்கள் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா, அம்மன்புரம் கிராமத்தில் வரும் 26.9.18 அன்று அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்த வெங்கடேஷ் பண்ணையாரின் 15-வது நினைவுதினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி

அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் ஒழுங்கைப் பராமரித்திடவும் வரும் 25.9.18 அன்று மாலை 6 மணி முதல் 27.09.18 காலை 6 மணி வரையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

அதன்படி, இந்த தினங்களில் பொதுமக்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடுவதற்கும், வாள், கத்தி, கம்பு, கற்கள் மற்றும் இதர அபாயகரமான, ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு வருவதற்கும்,

அன்னதானம் வழங்குவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் பொதுமக்களை அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாக இந்த நினைவுநாளில் கலந்துகொள்ள அழைத்து வருவதற்கும் குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-ன் கீழ் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உத்தரவிடப்படுகிறது.

இது பள்ளி, கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்கள் கொண்டுசெல்லும் வாகனங்கள், சுற்றுலாவுக்காகச் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றுக்குப் பொருந்தாது.

இந்த நாள்களில் அமைதியை நிலைநாட்ட மாவட்டக் காவல்துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நாள்களில் ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலம் நடத்த இருப்பின் காவல் கண்காணிப்பாளரின் அனுமதி பெற்றுக்கொள்ளவும் மேற்கொள்ளப்படுகிறது.

இத்தடை உத்தரவு, திருமணம் மற்றும் இறுதிச் சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.