தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்முதல் முறையாக 4300 சரக்கு பெட்டகங்களை கொண்ட கப்பல் கையாளப்படுகிறது
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றி செல்லும் கப்பல் இலங்கை கொழும்பு துறைமுகத்திற்கு சென்று அங்கிருந்தே பிற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும்.
இதனால் கால நேரம் விரயமாவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக சரக்கு ஏற்றுமதி நிறுவனங்கள் தெரிவித்து வந்தன
குறிப்பாக சீனா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் போது தாமதம் ஏற்படும் நிலை இருந்தது.
இந்நிலையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் தனியார் சரக்கு பெட்டக தளத்திற்கு ( 8 வது தளம், தக்ஷின் பாரத் கேட் வே) முதல் முறையாக சீனா, மலேசிய நாடுகளுக்கு நேரடி கப்பல் சேவை இன்று துவங்கப்படுகிறது.
இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் காணொலி மூலம் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து முதல் முறையாக மதர் வெசல் என்றழைக்கப்படும் மிக பெரிய கப்பல் இயக்கப்படுகிறது.
இதில் சுமார் 4300 (20 அடி பெட்டகம்) சரக்கு பெட்டகங்கள் கையாளப்படும். இதன் மூலம் சீனா , மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விரைவாக சென்றடையும்