முக்கிய செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு- சிபிஐ விசாரணை கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்..


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக உள்துறை செயலாளருக்கும், சிபிஐ-க்கும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், முடக்கப்பட்ட இண்டர்நெட் சேவையை விடுவிக்க வேண்டும், காயம்பட்டவர்களை பார்வையிட்டு காயங்களின் தன்மை குறித்து ஆராய்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கவேண்டும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் ஏ.ப்பி.சூரியபிரகாசம் மே 23, 24 தேதிகளில் தமிழக அரசுக்குக்கும், சிபிஐ-க்கு மனு அனுப்பி இருந்தார்.

அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்காததால், மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் இன்று விசாரித்தபோது, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜராகி காயமடைந்த பொதுமக்கள், காவல்துறையினர் என அனைவருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், அசம்பாவிதங்கள் தொடராமல் இருக்கவே இணைய சேவை முடக்கப்பட்டதாகவும், இயல்புநிலை திரும்பி வருகிறது என தெரிவித்தார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு இயல்புநிலை திரும்புகிறது என்றால் ஏன் இன்னும் முடக்கியுள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். மாணவர்கள், தேர்வு எழுதுபவர்கள், எழுதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டது.

அதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், இணைய சேவை 5 நாட்களுக்கு முடக்கப்பட்டதாகவும், அதில் மூன்று நாட்கள் முடிவடையப்போகிறது என்று தெரிவித்து, பொறியியல் படிப்பு விண்ணப்பத்திற்கான தேதி மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகத்தின் கடித தொடர்பை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற நீதிபதிகள், இணைய முடக்கம் விடுவிப்பு, தனியார் மருத்துவ சிகிச்சை தொடர்பான கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டனர். துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்கவும், சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மே 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.