தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது, இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா? அல்லது பாசிச ஆட்சி நடக்கிறதா? பதில் பேசுங்கள் மோடி என்று பாஜக மூத்த தலைவர் சத்ருகன் சின்ஹா காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இதற்கு பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கடுமையாகக் கண்டனம் தெரிவித்து, ட்வீட் செய்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களை போலீஸார் இரக்கமின்றி சுட்டுக்கொன்ற சம்பவம் வேதனையளிக்கிறது. இது வெட்கப்பட வேண்டிய சம்பவம். கண்டிக்கப்பட வேண்டியது. காட்டுமிராண்டித்தனமானது என பாரதத்தாய் உணர்கிறாள். நாம் ஜனநாயக ஆட்சியில்தான் வாழ்கிறோமா? அல்லது பாசிச ஆட்சியில் வாழ்கிறோமா?.
எந்தவிதமான எச்சரிக்கையும் விடுக்காமல் தானியங்கி துப்பாக்கிமூலம் அமைதியாகப் போராடிய ஏழை அப்பாவி மக்கள் மீது போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மக்களைக் கொல்லும் இந்தப் படுகொலைக்கு யார் உத்தரவிட்டது?. இந்திய வரலாற்றில் இது கறுப்பு நாள்.
நல்ல ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழலைத்தானே அந்தப் பகுதி மக்கள் கேட்டார்கள், இது மிகப்பெரிய குற்றமா? ஜனநாயகத்தில் தங்களின் குரலை உயர்த்திப் பேச அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு தீவிரவாதிகளுக்கு இணையாக சுட்டுக்கொலை செய்தால் மக்கள் எங்கு செல்வார்கள்?
இந்தப் படுகொலைக்கு நீதி கண்டிப்பாக வழங்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொலை செய்தவர்கள், காரணமானவர்கள் கொடூரமாகத் தண்டிக்கப்பட வேண்டும். நான் இந்த விவகாரத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை ஆதரிக்கிறேன். தமிழகத்தில் ஆளும் அரசிடம் இருந்தும், நிர்வாகத்திடம் இருந்து ஏராளமான கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
பிரதமர் மோடி நீங்கள் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. காஷ்மீர் கதுவாவில் சிறுமி பலாத்காரத்தின் போதும் பேசவில்லை, பெட்ரோல் விலை உயர்வு குறித்தும் வாய் திறக்கவில்லை. தூத்துக்குடியில் மக்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டபோதும் நீங்கள் மவுனம் கலைக்கவில்லை.
தானியங்கி துப்பாக்கி மூலம் அப்பாவி மக்களைக் கொல்ல யார் உத்தரவிட்டது. காஷ்மீர் பற்றி எரிகிறது, நீங்கள் ஒன்றுமில்லை என்று கூறிவிட்டீர்கள். இப்போது தமிழ்நாடு கொந்தளிக்கிறது. ஆர்எஸ்எஸ் தொண்டரின் ஜோடனையான, தோரணைப் பேச்சை இப்போது கேட்க முடியுமா?”
இவ்வாறு சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார்.