தூத்துக்குடி துப்பாக்கி சூடு : தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய உள்துறை..


தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. போராட்டக்காரர்களை கலைக்க எவ்வளவோ யுக்திகள் இருந்தும், தேச விரோதிகளை சுடுவது போன்று சரமாரியாக சுட்டது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண உடை அணிந்த காவலர் போலீஸ் வேனில் அமர்ந்தபடி போராட்டக்காரர்களால் துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் காட்சி அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனைப்பார்த்த பலரும் காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தூத்துக்குடியில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையிடம் உரிய விளக்கம் பெறப்பட்டு, மத்திய அரசுக்கு தமிழக அரசு அறிக்கை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.