முக்கிய செய்திகள்

யு-19 கிரிக்கெட்: உலகக் கோப்பையை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை…

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதற்குமுன் எந்த அணியும் 4முறை உலகக் கோப்பையை வென்றது இல்லை என்ற வரலாற்றை மாற்றி எழுதி இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

இந்திய அணியின் கல்ராவின் சதம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடந்தது. மவுண்ட் மவுங்கானி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரலேலிய அணியை எதிர்கொண்டது இந்திய அணி.

இருஅணிகளும் தலா 3 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளதால், 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றுவது யார் என்ற தீவிரத்துடன் களமிறங்கின.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் சங்கா பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளத்தில் இருந்த லேசான ஈரப்பதத்தை பயன்படுத்திக்க கொண்ட இந்திய பந்துவீச்சாளர்கள் போரல், நாகர்கோட்டி தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி அளித்தனர். 60 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிரையன்ட்(14), எட்வர்ட்ஸ்28), கேப்டன் சங்கா(13) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால், ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடிக்கு ஆளானது. அதன்பின் வந்த மெர்லோ, உப்பல் கூட்டணி நிலைத்து ஆட ஓரளவு ஆஸ்திரேலிய அணி சரிவில் இருந்து மீண்டது.

சிறப்பாக விளையாடிய உப்பலை 34 ரன்களில் வெளியேற்றினார் ராய். அதன்பின் வந்த வீரர்கள் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி விரைவாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஸ்வீனி(23) , சதர்லாந்து(5) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், மெர்லோவுக்கு துணையாக ஆட ஆள் இல்லாமல் தவித்தார். இருப்பினும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார். அதன் பின் நீண்நேரம் நிலைக்காத மெர்லோ 76 ரன்களில் ராய் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

கடைநிலை வீரர்களான ஹோல்ட்(13), இவான்ஸ்(1), ஹேட்லி(1) ஆகியோர் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 47.2 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்திய அணித் தரப்பில் போரல், சிவாசிங், நாகர்கோட்டி, ராய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

ஒவருக்கு 4.34 ரன்கள் சேர்த்தால் வெற்றி என்ற எளிதான ரன் ரேட்டை விரட்டி இந்திய அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பிபி ஷா, மஞ்சோத் கல்ரா சிறப்பான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை மிகவும் “கூலாக” எதிர்கொண்ட இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளுக்கு விரட்டி ரன் வேகத்தை அதிகரித்தனர். சிறப்பாக பேட் செய்துவந்த பிபிஷா 29 ரன்களில் சதர்லாந்து பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின், அதிரடி வீரர் கில் களமிறங்கி, கல்ராவுடன் இணைந்தார். அதிரடியாக 3 சிக்சர்களை அடித்து தன் இருப்பை வலுவாக வெளிப்படுத்திய கல்ரா 47 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

அதன்பின் இருவரும் பந்துகளை வீணாக்காமல் ரன்களை சேர்த்ததால் அணியின் ரன் சேர்க்கை வேகமெடுத்தது. நிதானமாக பேட் செய்து வந்த கில் 31 ரன்களில் உப்பல் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 60 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

விக்கெட்டுகளை ஒருபக்கம் வீழ்ந்த போதிலும் கல்ரா தூண்போல் பேட் செய்து சதத்தை நோக்கி முன்னேறினார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய விக்கெட் கீப்பர் தேசாய், கல்ராவுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து பேட் செய்தார். இதனால், இந்திய அணி விரைவாக இலக்கை நோக்கி முன்னேறிச் சென்றது.

இருவரின் லகுவான ரன் சேர்ப்பை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும் தேசாய், அதிகமான பவுண்டரிகள் அடிக்காமல், ஒன்று, இரண்டு ரன்களாகச் சேர்த்து அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார்.

அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இடது கை ஆட்டக்காரர் கல்ரா 101 பந்துகளில் சதம் அடித்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், தேசாய் பவுண்டரி அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

38.2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தேசாய் 47 ரன்களுடனும்(5பவுண்டரி), கல்ரா 101 ரன்களுடனும்(8பவுண்டரி, 3 சிக்சர்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து, உலகக்கோப்பையை 4-வது முறையாக வென்ற அணி என்ற உலக சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.