முக்கிய செய்திகள்

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி…


U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நேற்று தொடங்கியது. இன்றைய தினம் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ‘டி’ பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின

 

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பிரித்வி ஷா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷாவும், மன்ஜோத் கல்ராவும் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பிரித்வி ஷா 100 பந்துகளில் 94 ரன்கள் (8 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்தது.

அவரைத்தொடர்ந்து கல்ராவும் 86 ரன்கள் (99 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷுப்மன் கில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றவர்கள் பெரிதாக ரன்குவிக்க தவறியதையடுத்து இந்தியா, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் எடுத்தது. கம்லேஷ் நகர்கோட்டி 11 ரன்களுடனும், ஆர்யன் ஜுயால் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சில் ஜாக் எட்வர்ட்ஸ் நான்கு விக்கெட்களும், வில் சுதர்லாண்ட், பரம் உப்பல், ஆஸ்டின் வாக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இந்திய அணி 329 ரன்களை ஆஸ்திரேலியா அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

பின்னர் விளையாடி ஆஸித்திரேலிய அணி 42.5 ஓவரில் 238 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.