கல்லூரி மாணவர் சங்கர் (22), கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பலால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்டார். அவரது மனைவி கெளசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று, உடல்நலம் தேறினார்.
பொதுமக்கள் முன்னிலையில் வெட்டிச் சாய்க்கப்பட்ட சங்கர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக, கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை மற்றும் செல்வக்குமார், மதன் என்ற மைக்கேல், பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீசன், பழநியைச் சேர்ந்த மணிகண்டன், கலை தமிழ்வாணன், பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், தன்ராஜ் மற்றும் கல்லூரி மாணவர் பிரசன்னா ஆகிய 11 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டுவந்த நிலையில், நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இருதரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் இறுதித் தீர்ப்பு, வரும் டிசம்பர் 12 – அன்று வெளியிடப்படும் என்று அறிவித்தார்.