முக்கிய செய்திகள்

உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : 6 பேருக்கு மரண தண்டனை..


உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் பெற்றோர் உள்பட 11 குற்றவாளிகளுக்கு திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த சங்கர் (22) என்பவரும், திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த கவுசல்யா (19) என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி இவர்கள் 2 பேரும் உடுமலை பஸ்நிலையத்திற்கு சென்ற போது, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர் – கவுசல்யாவை சரமாரியாக வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த சங்கர் பரிதாபமாக இறந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பினார்.

இந்த கொலை குறித்து உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை, மற்றும் செல்வகுமார், மதன், ஜெகதீசன், மணிகண்டன், கலை தமிழ்வாணன், மற்றொரு மணிகண்டன், தன்ராஜ், பிரசன்ன குமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர்.

கடந்த ஓராண்டாக இந்த வழக்கு விசாரணை நடந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என நீதிபதி அலமேலு நடராஜன் தீர்ப்பளித்தார். தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளிகள் தரப்பு நீதிபதியிடம் முறையிட்டனர். அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அரசுத்தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தண்டனை விபரங்களை அறிவித்தார். கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.