தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் கடந்த 28ம் தேதி முதல் வருகிற 4ம் தேதி (இன்று) வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடந்த 28ம் தேதி முதல் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வமுடன் மனு தாக்கல் செய்தன. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்தான் கூட்டணி கட்சிகளுடன் சீட் பங்கீடு முடிந்து, வேட்பாளர்களை அறிவித்து வந்தனர்.
திமுக சார்பில் நேற்று இரவு சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, திமுக, அதிமுக வேட்பாளர்கள் இன்று காலை முதல் தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதியிலும், வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் மனு தாக்கல் செய்தனர்.
கட்சி வேட்பாளர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது மேள தாளம், செண்ட மேளம் முழங்க திரண்டு வந்து மனு தாக்கல் செய்தனர். சிலர் மாட்டு வண்டியில் வந்து மனு தாக்கல் செய்தனர். ரூபாய் நோட்டு மாலையுடன் வந்தும் அசத்தினர். சில வேட்பாளர்கள், டெபாசிட் தொகையாக சில்லறை நாணயத்துடன் வந்து தேர்தல் அதிகாரிகளிடம் வழங்கினர். ஒரே குடும்பத்தில் அண்ணன், தம்பி மற்றும் கணவன், மனைவி என தனித்தனி கட்சிகள் சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்த சம்பவமும் அரங்கேறியது. சென்னை, பெசன்ட்நகரை சேர்ந்த 94 வயது பாட்டியும் மனு தாக்கல் செய்து மக்களை கவர்ந்துள்ளார். இப்படி, கடந்த சில நாட்களாக வேட்புமனு தாக்கலின்போது பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 50,000 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று கடைசி நாள் என்பதால் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று வரை மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,477 பேரும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 11,663 பேரும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 37,518 பேர் என மொத்தம் 12,838 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு 37,518 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 27,365 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அதேபோன்று கூட்டணி கட்சி தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ஈஸ்வரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் கனிமொழி எம்பி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோரும் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதிமுக சார்பில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பிரசாரம் செய்ய உள்ளனர். வேட்பாளர்களும் கடந்த சில நாட்களாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். கடந்த 28ம் தேதி முதல் இன்று மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் அனைத்தும் நாளை காலை 10 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு, மனு தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற மனுக்கள் நிராகரிக்கப்படும். வருகிற 7ம் தேதி (திங்கள்) மாலை 5 மணி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். அன்றைய தினம் மாலையே சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படும். இதையடுத்து தமிழகத்தில் தேர்தல் களம் மேலும் சூடுபிடிக்கும்.
வருகிற 19ம் தேதி அனைத்து வார்டு கவுன்சிலர் பதவிக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். 22ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.