உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்திருக்கிறார்.
உ.பி தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
இதை ஒட்டி பிரியங்கா காந்தி உத்திரப்பிரதேச மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.
அதன்படி உ.பி-யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை, மின் கட்டணம் குறைப்பு, நெல் – கோதுமை கொள்முதல் விலை உயர்வு, பள்ளிப் படிப்பு முடித்த மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் மற்றும் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு மின்சார ஸ்கூட்டர் வழங்கப்படும் என ஏற்கனவே பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்திருக்கிறார்.
அந்த வகையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் என பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும், உத்தரபிரதேசத்தில் சுகாதார நடவடிக்கைகள் சரி இல்லாததால் சுகாதாரம் ரீதியாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
கரோனா காலத்திலும் மக்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு அரசு நிவாரணங்கள் கிடைக்கவில்லை. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சைகளை அளிப்போம் எனவும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர் சுற்றுப்பயணங்கள், பெண்கள் தொடர்பான அதிரடி அறிவிப்புகள் உள்ளிட்டவை காரணமாக, பிரியங்கா காந்தி பெண்கள் மத்தியில் பரவலாக சென்று சேர்ந்திருக்கிறார். காங்கிரசுக்கான ஆதரவும் ஓரளவு பெருகியிருக்கிறது என்றே சொல்லப்படுகிறது.