தமிழில் மொழிபெயர்த்தவர் ஆசை, நன்றி : தி தமிழ் இந்து
மரண தண்டனையைச் சட்டப் புத்தகத்திலிருந்தே அகற்ற வேண்டும் என்று அதிகார மட்டத்துக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன். அரசாங்கத்தால் நிறைவேற்றப்படும் எந்த மரண தண்டனையும் கொலையன்றி வேறென்ன? அரசாங்கத்தால் நிகழ்த்தப்படும் இதுபோன்ற மோசமான குற்றங்களுக்கு எதிராக இந்திய மக்கள் போராட வேண்டும். வாழ்வதற்கான உரிமையை அரசு பறித்துவிட முடியாது.
கிட்டத்தட்ட 90 சதவீத உலக நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருக்கும் நிலையில், மரண தண்டனை என்ற படுகொலைக்கு எதிராகக் குரல்கொடுக்கும்படி என் நாட்டு மக்களிடமும், உலக நாடுகளிடமும் வேண்டிக்கொள்கிறேன்.
உயிர் என்பது கடவுளால் கொடுக்கப்பட்டது, அது கடவுளால் மட்டுமே பறிக்கப்பட முடியும். ஆனால், அரசாங்கம் ஒரு உயிரைப் பறிப்பது என்பது மனிதத் தன்மையற்ற செயல். மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதில் காந்தியின் தேசம் ஒரு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
இனியும் மரண தண்டனை வேண்டாம் என்று குடியரசுத் தலைவரையும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களையும் வேண்டிக்கொள்கிறேன். தூக்கை ஒழித்துக்கட்டுங்கள்.
எழுங்கள், விழிப்படையுங்கள், மரண தண்டனை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, அரசாங்கங்கள் மனித உயிருக்கு முக்கியத்துவம் அளிக்கும்வரை இடைவிடாது போராடுங்கள். மனித உயிரைப் பறிப்பதற்கு எதிராக இந்தியா முழுவதும் மக்கள் இயக்கம் திரள வேண்டும்.
வாழ்க்கை என்பது புனிதமானது; இதுதான் நமது முக்கியக் குறிக்கோள். இதைக் காப்பாற்றுவதே உன்னதமான கடமை.