வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு…


கேரளாவிலும் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடி வரை எட்டியது.

பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
வைகை அணையின் முழு கொள்ளவான 71 அடியில் நேற்று 68.60 அடி நிரம்பியது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதன்படி வைகை அணை இன்று திறக்கப்பட்டது.

அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதன்மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் 1 லட்சத்து 5,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

வைகை அணை திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரையில் வைகை ஆறு கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றை கடக்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம். ஆற்றின் அருகே கால்நடைகளின் மேய்ச்சலை தவிர்க்கவேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.