கலைஞருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: வைகோ

தமிழ்கூறும் நல்லுலகின் தன்னேரில்லாத் தலைவர் கலைஞர். கோடிக்கணக்கானத் தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, பேரறிஞர் அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார். ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை விளக்கம் அணைந்து போனது. ஓயாத கடல் அலை போல உழைத்துக் கொண்டிருந்த ‘தமிழர்களின் சகாப்தம்’ தன் மூச்சை நிறுத்திக்கொண்டது.

மேலும் இந்திய அரசியல் தலைவர்களிலேயே எழுத்தாற்றலும், சொல்லாற்றலும் ஒருங்கே பெற்றிருந்த மக்கள் தலைவர் கலைஞர் ஒருவரே என்றால் அது மிகையல்ல. மேடையில் வீசிய மெல்லியப் பூங்காற்றாய், உலகத் தமிழர்களின் உள்ளத்தில் நிறைந்தவர், தன் ஈடற்ற எழுத்து வன்மையால் தமிழ் அன்னைக்கு முத்தாரங்கள் பலவற்றை அணிகலனாகப் பூட்டி மகிழ்ந்த வித்தகப் பெருமகன் கலைஞர்.

அவர் தீட்டிய குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா, சங்கத் தமிழ்,  ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர் போன்றவை தலைவர் கலைஞரின் சாகாவரம் பெற்ற இலக்கியப் படைப்புகள் ஆகும். தமிழ்த் திரை உலகில் பேனா முனையில் புரட்சிகர வசனங்கள் தீட்டி, வண்ணத் தமிழுக்கு மேலும் அணிசேர்த்து காவியப் புகழ் கொண்டவர்.

5 முறை தமிழகத்தின் முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, மக்கள் பணி ஆற்றியவர். இந்திய ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் வலுசேர்க்கும் வகையில், இந்தியாவிலேயே முதன் முதலில் சட்டப்பேரவையில் ‘மாநில சுயாட்சி’ தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கலைஞருக்கு மட்டுமே உரியது ஆகும்.

மேலும் திராவிட இயக்கத்தின் ஆணி வேரான ‘சமூக நீதி’ தழைப்பதற்கு பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இடஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர். செம்மொழித் தமிழுக்கு சிறப்பான திட்டங்களால் பெருமை சேர்த்தவர்.

பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கிட சட்டம், வேளாண்மை செழிக்க இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், கல்வி, சுகாதாரத் துறைகளில் தமிழகம் பெற்றிருக்கும் வளர்ச்சி, தொழில் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு திகழ கலைஞரே காரணம்.

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற ‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டம்’ கொணர்ந்த பெருமையும் கலைஞரையே சேரும்.

இந்திய நாட்டில் தென்னகத்து ஒளிவிளக்காக ஏழு கோடி தமிழர்களின் நெஞ்சில் மட்டுமல்ல, மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும், போற்றுதலுக்கும் உரிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்திய அரசு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.

Vaiko Demand For Baratha Rathna to Kalaingar

 

மாட்டுக்கறி தின்றதால் நேரு பண்டிட் இல்லையாம்: சொல்றாரு பாஜக எம்எல்ஏ

கலைஞருக்கு பாரத ரத்னா வழங்குவது பற்றி ஆலோசிக்க மத்திய அரசு குழு: இல.கணேசன்

Recent Posts