முக்கிய செய்திகள்

தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்: வைகோ பேட்டி


ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து தி.மு.க. மருதுகணேஷ் இன்று காலை எழும்பூரில் உள்ள தாயகத்திற்கு சென்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் மாவட்டச் செயலாளர்கள் மாதவரம் சுதர்சனம், பி.கே.சேகர்பாபு, தொ.மு.ச.பேரவை செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றிருந்தனர். அனைவரையும் வைகோ வரவேற்றார். வேட்பாளர் மருது கணேசுக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினார்.
அதன்பிறகு வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.

தாயகத்தில் இன்று என்னை நேரில் சந்தித்த தி.மு.க. வேட்பாளரையும், நிர்வாகிகளையும் வரவேற்கிறோம். எங்கள் இயக்க தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு சகோதரர் மருதுகணேசை வெற்றி பெறச் செய்வதற்கும், உதய சூரியன் சின்னத்தை வெற்றிபெறச் செய்வதற்கும் பாடுபடுவார்கள்.

அடுத்து வரப்போகிற பாராளுமன்ற தேர்தல் ஆனாலும் சட்டமன்ற தேர்தல் ஆனாலும் அதில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு, ஆழ்மனதிலே இருக்கக்கூடிய உணர்வோடு வாழ்த்துகிறோம்.

அந்த வெற்றிகளுக்கு இது நுழைவு வாயிலாக, ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அமையட்டும் என்ற உணர்வோடு வாழ்த்துகிறோம். களப்பணியாற்றுவோம்.

கே:- தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?

பதில்:- நிச்சயமாக போவேன். தேர்தல் பிரசாரம் செய்வேன்.

நாங்கள் தொலைநோக்கோடு இந்த சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் பாராளுமன்ற தேர்தல்களிலும் திராவிட இயக்கத்தை பாதுகாப்பது என்றும், இந்துத்துவ சக்திகளின் படையெடுப்பை முறியடிப்பது என்றும், திராவிட இயக்கத்தின் பரம எதிரிகளின் முயற்சிகளை முறியடிப்பது என்பதிலும் தெளிவாக உள்ளோம்.

எந்தவித சுயநல லாபம் பற்றி சிந்திக்காமல் தமிழ்நாட்டின் எதிர்கால நலன்கருதி, திராவிட இயக்கத்தின் வருங்காலம் வலிமையானது என்பதை நினைத்து இந்த ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளோம்.

எங்களது இந்த முடிவுக்கு தமிழகம் முழுவதும் உள்ள கழக கண்மணிகள், மாவட்டச் செயலாளர்கள் நேற்று முதல் தங்களது மகிழ்ச்சியை தொலைபேசியிலும், நேரிலும் தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள் என்று கூறினார்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ம.தி.மு.க….. என்று கேள்வி கேட்பதற்குள் இடைமறித்து பதில் கூறிய வைகோ நல்லவற்றையே சிந்திப்போம், நல்லவற்றையே பேசுவோம் என்றார்.