முக்கிய செய்திகள்

வைரமுத்துவை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் ஜீயர் மீண்டும் உண்ணாவிரதம்..


ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் சடகோப ராமானுஜ ஜீயர் இன்று (பிப்.,8) காலை 10.40 மணியளவில் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினார்.

ஆண்டாள் குறித்து, கவிஞர் வைரமுத்து தவறாக பேசியதாக, சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. ‘ஆண்டாள் சன்னதியில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறி, ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் உண்ணாவிரதம் இருந்தார். முக்கிய பிரமுகர்கள் ஜீயருடன் பேச்சு நடத்தியதையடுத்து ஜீயர் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மேலும் வைரமுத்து வரும் பிப்.,3 ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க தவறினால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்றும் ஜீயர் கூறியிருந்தார்.

இந்நிலையில், வைரமுத்து தரப்பில் தற்போது வரை எந்த விளக்கமும் தராத காரணத்தால், அதனை கண்டித்து ஸ்ரீவில்லிபுத்துார் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர், சடகோப ராமானுஜர் மீண்டும் உண்ணாவிரதத்தை துவக்கினார். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
அப்போது ஜீயர் கூறுகையில், ஆண்டாள் தாயார் கூறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனக்கூறினார்.