அரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது வேதனையளிப்பதாகவும், அங்கு மட்டுமே தமிழ் வாழ்வதால் அவை மூடப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கவிஞரும் கலைவிமர்சகருமான இந்திரனின் 70ஆவது பிறந்த நாள் மற்றும் நூல் வெளியீட்டு விழா சென்னை ரஷ்யன் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பத் திரிகையாளரும் எழுத்தாளருமான சுந்தரபுத்தன், விழாவை ஒருங்கிணைத்து நடத்திய பேசும்புதிய சக்தி இதழின் ஆசிரியர் ஜெயகாந்தன், டிஸ்கவரி புக்பேலஸ் வேடியப்பன், கவிஞர் கோ.வசந்தகுமாரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர்.

கவிஞர், ஓவியர், கலை விமர்சகர் இந்திரன்

இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கவிஞர் வைரமுத்து தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்திப் பேசினார். அவர் பேசியதில் இருந்து:

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் எழுதியவற்றை வாசிப்பதற்கும், போற்றுவதற்கும் இப்போது வரை நாங்கள் இருக்கிறோம். 30 ஆண்டுகளாக எழுதி வரும் என்னுடைய, இந்திரனுடைய எழுத்துகளை படிப்பதற்கு அடுத்து தமிழ் தெரிந்த தலைமுறை இருக்க வேண்டாமா… 2040ல் வைரமுத்துவின் தமிழை வாசிப்பதற்கு தமிழ் தெரிந்தோர் இருப்பார்களா… இருக்க வேண்டும்… அதற்கு அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில்தான் தமிழ் வாழ்கிறது. அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்துவிட்டுத்தான் உங்கள் முன்னால் வந்து வைரமுத்துவாக நிற்கிறேன். அரசுப் பள்ளியில் படித்துத்தான் அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். ஆனால், அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதை அறிந்து வேதனைப்படுகிறேன். இப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எனது நண்பர்தான். அவர் நன்றாக  செயல்படுவதாகவும் பாராட்டப்படுகிறார். ஆனாலும், அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலையைத் தடுக்க வேண்டும்,. மாறாக அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். 

அப்போதுதான் எதிர்காலத்தில் எங்களது எழுத்துகளை வாசிப்பதற்கான வாசகர்கள் இருப்பார்கள். இது சுயநலமல்ல. பொதுநலம். மொழியும், அடையாளமும் காக்கப்பட வேண்டும் என்ற பொதுநலம். எனவே, குழந்தைகளுக்கு தாய்மொழிக் கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் பெற்றோருக்கும் இருக்கிறது.பெற்றோரும், ஆசிரியர்களும் இதில் கூட்டாக இணைந்து செயல்பட வேண்டும். அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலம் உட்பட பிற மொழிகளைக் கற்பிக்கலாம். ஆனால், தாய்மொழியைக் கற்ற பின்னர் அதனைக் கற்கலாம். தாய்மொழியில் படிப்பதைக் கட்டாயப்படுத்த வேண்டும்.

இவ்வாறு வைரமுத்து பேசினார். இறுதியில் ஏற்புரை வழங்கிய கவிஞர் இந்திரனும் வைரமுத்து தெரிவித்த கருத்தை வலியுறுத்திப் பேசினார். மனிதன் எத்தனை மொழியில் பேசினாலும், எழுதினாலும் தாய்மொழியில்தான் கனவு காணமுடியும் எனக் கூறிய இந்திரன், “தாழ்ந்த இனம் உயர்ந்த மொழி படைத்ததில்லை” என்ற மரபுக்கவிஞர் குலோத்துங்கனின் கவிதை வரிகளையும் சுட்டிக்காட்டி, தாய்மொழியின் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருவாரூரில் இருந்த படி பேசும் புதிய சக்தி உள்ளிட்ட இதழ்களை நடத்திவரும் பதிப்பாளரும், ஆசிரியருமான ஜெ.ஜெயகாந்தன், இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தார். மேலும், விழாநாயகர் இந்திரனுக்கு ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தார்.

Vairamuthu raise voice to demand don’t close the Govt Schools

2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை : சரத் பவார் ..

தாமிரபரணி புஷ்கரம்: சென்னையிலிருந்து, நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்..

Recent Posts