வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது

இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின்  கள்ளிக்காட்டு இதிகாசம் நூலுக்கு இந்த இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகத்தின் இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகம் விருது வழங்கப்படுகிறது

கவிஞர் வைரமுத்துவின் புகழ்மிக்க நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். இதுவரை 32 பதிப்புகள் கண்டிருக்கிறது. 2003இல் சாகித்ய அகாடமி விருதுபெற்ற இந்நாவலை சாகித்ய அகாடமி 23 மொழிகளில் மொழிபெயர்த்து வருகிறது. முதல் மொழியாக இந்தி மொழியில் ‘நாகபானி வன் கா இதிகாஸ்’ என்ற பெயரில் மொழியறிஞர் எச்.பாலசுப்பிரமணியன் மொழிபெயர்த்திருக்கிறார். சாகித்ய அகாடமியால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அந்த நூல் இந்த ஆண்டு இந்தியில் வெளிவந்த இந்தியாவின் சிறந்த புத்தகம் என்ற விருதைப் பெற்றிருக்கிறது. ‘இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகம்(எப்.ஐ.சி.சி.ஐ)’ இந்த விருதை வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம் இந்தத் தகவலை அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது. 1927ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின்படி பிர்லாவால் தொடங்கப்பட்ட அமைப்பே இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகம் ஆகும்.

இந்தி தவிர ஆங்கிலம் – மலையாளம் – கன்னடம் – தெலுங்கு ஆகிய மொழிகளின் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவடைந்திருக்கின்றன. விரைவில் அவை அந்தந்த மொழிகளில் வெளியிடப்படும். அவற்றைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் கள்ளிக்காட்டு இதிகாசத்தின் மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும்.

விருது பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறியதாவது.

“பெருமைமிக்க விருது இது. சாகித்ய அகாடமியின் செயலாளர் சீனிவாசராவ்தான் இந்த விருது குறித்து எனக்கு முதலில் அறிவித்தார். என்நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்த இந்திய வர்த்தகக்  கூட்டாண்மைக் கழகத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது எனக்கு நேரடியான விருது அல்ல; சாகித்ய அகாடமிக்கான விருது. சாகித்ய அகாடமிதான் இந்திய மொழிகளுக்கெல்லாம் விருது தரும். ஆனால், தமிழில் வெளிவந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசத்தால் சாகித்ய அகாடமி விருது பெறுவது கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்தியாவின் பழைமையான சிறந்த மொழி தமிழ் என்று அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் ஆற்றிய உரை நமக்கெல்லாம் பெருமிதம் தந்தது. அதே நேரத்தில் இந்த விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழம் நழுவி விழுந்த பாலில் கற்கண்டும் விழுந்து கரைந்ததுபோல் இருக்கிறது இந்தச் செய்தி. தமிழ் மொழி தன் தகுதியால் மொழிகளின் வெளிகளைத்தாண்டி விரிந்துகொண்டே செல்கிறது. இந்த விருது ஒவ்வொரு தமிழரையும் தங்கள் உயரத்தில் ஓர் அங்குலம் உயர்த்தி இருப்பதாகக் கருதுகிறேன். மகிழ்ச்சி; மிக்க மகிழ்ச்சி”.

இவ்வாறு கவிஞர் வைரமுத்து கூறினார்.

Vairamuthu’s Kallikattu Ithikasam Hindi Version get Best Book of this year award By FICCI

கலைஞரிடம் கற்றது பேச்சல்ல, துணிச்சல்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக மு.க.ஸ்டானின் முதல் உரை

Recent Posts