தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை வாஜ்பாய் நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்: ஸ்டாலின் புகழாஞ்சலி..


மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

உடல்நலக் குறைவால் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து அவதிப்பட்ட வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை வாஜ்பாய் தனது 93-வது வயதில் காலமானார்.

வாஜ்பாய் மறைவு தொடர்பாக இன்று ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”முன்னாள் பிரதமர் ஏ.பி.வாஜ்பாயின் மறைவுச் செய்தி கேட்டு பெரிதும் வேதனையடைந்தேன்.

அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரை இழந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், அவர் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருக்கும் பிரதமர் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் திமுக சார்பில் என் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு,தலைவர் கலைஞருடன் அன்பும் நட்பும் பாராட்டிய தலைவர் வாஜ்பாய்.
ஈழத் தமிழர்கள் உரிமை காக்க மதுரையில் கூட்டப்பட்ட டெசோ மாநாட்டில் பங்கேற்று தமிழினத்திற்குப் பெருமை சேர்த்தார்.

தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத்தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதி நீர் ஆணையத்தை உருவாக்கினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக எத்தனையோ அழுத்தங்கள் கொடுக்கப்பட்டும், தனது ஆட்சிக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட, திமுக ஆட்சியை அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக கலைக்க முடியாது என்று உறுதிபடக் கூறி அதன்படியே நின்றார்.

தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பராக இருந்த வாஜ்பாய் நாட்டின் பன்முகத்தன்மையை நிலைநாட்ட வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக “National Agenda for Governance” என்ற ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியில் சிறப்பாகப் பணியாற்றி நிலையான போற்றத்தகுந்த ஆட்சியை நாட்டுக்கு வழங்கினார்.

“பி.ஜே.பி.க்கு என்று தனி அஜெண்டா ஏதும் இல்லை. தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து தயாரித்து இருக்கும் National Agenda for Governance தான் இனி பாஜகவின் அஜெண்டா” என்று துணிச்சலாக நாட்டின் நலனை முன்னிலைப்படுத்தியவர்.

திமுகவின் சார்பில் முரசொலி மாறன் மத்தியத் தொழில் அமைச்சராக இருந்தபோது, அவர்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து ஊக்கமும் ஆக்கமும் அளித்தார் என்பதை எந்நாளும் மறப்பதற்கில்லை.

மத்தியில் அமைந்த கூட்டணி ஆட்சிகளில் அவரது தலைமையிலான ஆட்சி குறிப்பிடத்தக்கதொரு மைல்கல். நாட்டின் தங்கநாற்கர தேசிய நெடுஞ்சாலை என்றென்றைக்கும் அவருடைய நற்பெயரை எல்லோர்க்கும் நினைவுபடுத்தும்.

பாரத ரத்னா வாஜ்பாய் ஒரு நல்ல கவிஞர் மட்டுமல்ல. மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி. அறிஞர் அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக இருந்து உரையாற்றிய போதெல்லாம் அவருக்கு ஊக்கமளித்து உறுதுணையாக நின்றவர் வாஜ்பய்.

ஜனநாயகத்தின் பக்கம் நின்று தன் வாழ்நாள் முழுவதும் அயராது போராடியவரும், அனைவரையும் கவரும் அற்புதமான பேச்சாற்றல் மிகுந்தவருமான அடல்ஜியின் இழப்பு நாட்டிற்கும்-
நாட்டின் பன்முகத்தன்மைக்கும் பேரிழப்பாகும்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.