வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநரின் பகல் கனவு பலிக்காது: பழ.நெடுமாறன்…

பழ.நெடுமாறன்…
தமிழ் சமுதாயம் சனாதன வலையில் சிக்கி சீரழியக் கூடாது என்பதற்காகவே வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தொண்டாற்றினர். வள்ளலாரை வைதீக சிமிழுக்குள் அடைக்க பார்க்கும் ஆளுநர் ரவியின் பகல்கனவு ஒருபோதும் பலிக்காது. வேதங்களையும், புராதன சாத்திரங்களையும் கடுஞ்சொற்களால் இகழ்ந்துரைத்தவர் வள்ளலார். சனாதன தர்மத்தின் ஆணி வேரை அடியோடு அறுப்பதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க நெறியை நிறுவியவர் வள்ளலார். சனாதன தர்மம் என்னும் குப்பையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பாக தோன்றியவர்தான் வள்ளலார். தமிழர் பண்பாடு, வரலாறு பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் ஆளுநர் ரவி உளறிகொட்டுகிறார். பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்ற வள்ளுவரை பின்பற்றி சன்மார்க்க நெறியை மக்களிடம் புகுத்தியவர் வள்ளலார் என்று தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

29.06.23 அன்று இரவு 7 மணிக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்து தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதத்தை ஆளுநர் ரவி அனுப்பியுள்ளார். ஆனால், நள்ளிரவில் அவருக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தின் விளைவாக மற்றொரு கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்புகிறார். அக்கடிதத்தில் அமைச்சரை நீக்குவதாகத் தெரிவித்ததை நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக இந்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் அறிவுரை பெறவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
அமைச்சரை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் உரிய அதிகாரத்தை அரசியல் சட்டம் மாநில முதல்வருக்கும், இந்திய தலைமையமைச்சருக்கும் மட்டுமே வழங்கியுள்ளது. வேறு யாரும் இதில் தலையிட இயலாது. ஒரு மாநிலத்தின் முதல்வர் அல்லது இந்திய தலைமையமைச்சர் யார் யாரை அமைச்சர்களாக நியமிக்கவேண்டும் என்பதையும், அவரவர்களுக்கு எந்தெந்தத் துறைகள் வழங்கவேண்டும் என்பதையும் முடிவு செய்வார்கள். அந்த முடிவினை ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ அறிவிப்பார்கள். அதைப்போல அமைச்சர்களின் துறைகளில் மாற்றம் செய்வதற்கும், அமைச்சர்களை நீக்குவதற்கும் உரிய அதிகாரமும் அவர்களுக்கு மட்டுமே உண்டு. இப்பிரச்சனைக் குறித்து அவர்களின் அறிவுரைகளை ஏற்று ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் செயல்படவேண்டும். அவர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. அரசியல் சட்டம் அதை அனுமதிக்கவில்லை. அரசியல் சட்டம் கூறும் இந்த உண்மையை உணர்ந்து செயல்படும் அடிப்படை அறிவுகூட ஆளுநருக்கு இல்லை என்று பழ நெடுமாறன் கூறியுள்ளார்.

தனக்கும் தெரியாது; சொன்னாலும் புரியாது” என்ற பழமொழிக்கு முற்றிலும் ஏற்றவர் ஆளுநர் ரவியே என்று கூறினால் மிகையாகாது. ஒரு அமைச்சரை நீக்குவதற்கு முன்பு அதற்குரிய அதிகாரம் தனக்கு இருக்கிறதா? என்பதை உரிய சட்ட அறிஞர்களிடம் கேட்டாவது ஆளுநர் முடிவெடுத்திருக்க வேண்டும். நீக்குவதற்கான ஆணையை பிறப்பித்தப் பிறகு நள்ளிரவில் ஏதோ காரணத்தினால் ஏற்பட்ட தடுமாற்றத்தின் விளைவாக தனது ஆணையைத் தானே நிறுத்தி வைக்கிறார். அதற்குப் பிறகு இந்தியத் தலைமை வழக்கறிஞரிடம் அறிவுரை கேட்க முனைகிறார்.

நமது அரசியல் சட்டம் யார் யாருக்கு என்னென்ன அதிகாரங்கள் என்பதை திட்டவட்டமாகவும் தெளிவாகவும் வரையறுத்திருக்கிறது. அமைச்சர்களை நியமிப்பதற்கும், நீக்குவதற்கும் முதலமைச்சர்களுக்கும், தலைமையமைச்சருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் அமைச்சரை நீக்கிய ஆளுநரின் செயல் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே ஓரளவுக்காவது நிலவும் கூட்டாட்சி முறையை அடியோடு தகர்த்துவிடும். அதுமட்டுமல்ல அரசியல் சட்ட முறையும் செயல்பாடும் முற்றிலுமாக அழிந்துபோகும். அரசியல் யாப்பு அவையில் ஆளுநர் பதவி குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது அறிஞர் அம்பேத்கர் “அரசியல் சட்டப்படி ஆளுநருக்குத் தன்னிச்சையான நிர்வாக அதிகாரம் எதுவும் அளிக்கப்படவில்லை” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். அதற்கிணங்க ஆளுநர்கள் தன்னிச்சையாக அமைச்சர்களை நியமிக்கவோ, பதவி விலக்கவோ செய்யவே முடியாது. முதலமைச்சரின் விருப்பத்திற்கிணங்கவே அவர் செயல்பட்டாகவேண்டும்.

இந்தத் தெளிவான வரைமுறைகளையோ, இத்தகைய பிரச்சனைகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளையோ எள்முனையளவுக்குக் கூட அறிந்திராமல் தான்தோன்றித்தனமாக ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இவர் மட்டுமல்ல, வேறு பல மாநிலங்களின் ஆளுநர்களும் தங்களின் அதிகார வரம்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்படுகிறார்கள். அரசியல் சட்டத்தின் மாண்பினை சிதைக்கும் ஆளுநர்களின் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கடமை குடியரசுத் தலைவருக்கு உண்டு. அதை உணர்ந்து குடியரசுத் தலைவர் செயல்படத் தவறினால் அரசியல் சட்ட சீர்குலைவும் நாட்டில் அமைதியின்மையும் உருவாகும். இவ்வாறு பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.

அரசு வேலை தேடுபவரா நீங்கள்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் மேலாளர் பணிக்கு 1000 காலிப் பணியிடங்கள் ..

மின்னணு ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்…

Recent Posts