
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் தனது சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டிய லட்சுமி வளர்தமிழ் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.21) திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்வாக கட்டிடத்தில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைப்பெற்ற விழாவுக்கு மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

ப.சிதம்பரம், கவிஞர் வைரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் ரவி வரவேற்றார்.விழாவில் கலையரங்கு கருந்தரங்க கூடத்துக்கு வீறுகவியரசர் முடியரசனார் அரங்கு என்று முதல்வர் பெயர் சூட்டினார். தொடந்து அவர் வெளியிட்ட கருணாநிதி நூற்றாண்டு விழா தேசிய கருத்தரங்கு ஆய்வு கட்டுரைகள் தொகுப்பு நூலை துணைவேந்தர் பெற்றுக் கொண்டார்.கவிஞர் அண்ணாதாசன் எழுதிய ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை ப.சிதம்பரம் வெளியிட துணைவேந்தர் பெற்றுக்கொண்டார்.

இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “காரைக்குடி வள்ளல் அழகப்பர் கல்வித் தொண்டு மற்றும் தமிழ் தொண்டை சேர்த்து ஆற்றியததால் தான், பலரும் பட்டங்கள் பெற்று, உலகம் முழுவதும் பரவியுள்ளனர். தமிழர்களின் ஈகைக்கு அடையாளமாக வாழ்ந்தவர் தான் அழகப்பர். வள்ளுவர் நெறிகளே வாழ்வியல் நெறியாக மாறும் என்று கூறி வருகிறோம்.

திருக்குறளை பின்பற்றினால் தான் தமிழகமும், உலகமும் காப்பற்றப்படும். அதற்கு வள்ளுவரை யாரும் கபளீரம் செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும். வள்ளுவர், வள்ளலார் போன்ற தமிழகத்தில் சமத்துவத்தை பேசிய மாமனிதர்களை ஒரு கூட்டமே களவாட முயல்கிறது.

அதற்கு எதிரான காவலர்களாக ஒவ்வொரு தமிழனும் இருக்க வேண்டும். வீறுகவியரசர் முடியரசனார் திமுக இலக்கிய அணி தலைவராக இருந்து கன்னித் தமிழை வளர்த்தார். அறிவு தான் நம்மை காக்கும் கருவி என்று வள்ளுவர் சென்னதுக்கு அடையாளமாக ப.சிதம்பம் தனது தாயார் பெயரில் நூலகத்தை கட்டியுள்ளார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ப.சிதம்பரமே நடமாடும் நூலகம். திராவிட மாடல் ஆட்சியில் அறிமுகப்படுத்தும் ஒவ்வாரு திட்டம் குறித்தும் ப.சிதம்பரம் என்ன சொல்வார் என்று எதிர்பார்பேன். ஏனென்றால் அவரது பார்வையும், பாராட்டும் எனக்கு உற்சாக மூட்டும்.

கொடை உள்ளமும், அறிவுத் தாகமும் கொண்டவர்கள் தங்களது ஊர்களில் ஒவ்வொரு நூலகத்தை ஏற்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுக்கிறேன். நான் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், எனக்கு கைத்தறி ஆடைகள் அணிவிக்க வேண்டாம்; நூல்களை வழங்குங்கள் என்று கூறினேன். இதுவரை 2,75,000 நூல்கள் எனக்கு வந்துள்ளன. அதை பல்வேறு நூலகங்களுக்கு அனுப்பியுள்ளேன். அதபோல் இங்கு திறக்கப்பட்ட வளர்தமிழ் நூலகத்துக்கு எனது சார்பில் 1,000 நூல்களை முதல்கட்டமாக அனுப்ப உள்ளேன். அதுபோக அரசு மூலமாகவும் உதவி செய்வேன்.
சமூக, வரலாற்றையும், முற்போக்கு சிந்தனைகளைப் பெறவும் இத்தகைய நூலகங்கள் தான் அடித்தளமாக அமையும். இதன் மூலம் உருவாகும் இளைஞர்கள் தான் தமிழ் சமுதாயத்தை நல்வழியில் நடத்துவர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் பெரியார் நூலகம், திருச்சியில் அமைய உள்ள நூலகம் தமிழகத்தின் அடையாளமாக திகழும். தமிழ் சமுதாயத்தை மேம்படுத்தும். தமிழகத்தை வளப்படுத்தும். கல்வி தான் திருட முடியாத சொத்து என்று அடிக்கடி மாணவர்களிடம் சொல்வேன்.

இளைஞர்கள் அறிவுசமூகத்தை உருவாக்க பாடுபட்டால், பொருட்செல்வம் நிச்சயம் உங்களை தேடி வரும். திராவிட மாடல் ஆட்சியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். உயர்க்கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 32 கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தில் 22.56 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி தந்து பெருநிறுவனங்களில் சேர வைத்துள்ளோம்.
புதுமை பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ் புதல்வன் திட்டத்தாலும் உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ரூ.1,000 கோடியில் காமராஜர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டமும், ரூ.150 கோடியில் உயர்கல்வி நிறுவனங்களில் டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைந்த கற்றல் மேம்பாடு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்களால் தமிழகத்தில் உயர்கல்வித் தரம், அடிப்படை கட்டமைப்பு மேம்பட்டு வருகின்றன.

இந்தியாவில் அதிக அரசு பல்கலைக்கழங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. 500-க்கும் மேற்பட்ட தரமான பொறியியல் கல்லூரிகள், அதிக மருத்துவக் கல்லூரிகள், புகழ் பெற்ற 100 உயர்கல்வி நிறுவனங்களில் 31 உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது. உயர்கல்வி மாணவர்கள் சேர்க்கையில் தேசிய சராசரியை விட 2 மடங்காக உயர்ந்துள்ளது. 49 சதவீதம் பெற்று இந்தியாவில் முதலிடம் பெற்றுள்ளது. உயர்கல்வியில் சிறப்பாக விளங்க பல்கலைக்கழக நிர்வாகம் மாநில அரசு முழு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வேந்தர் பதவியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம்.
உயர் கல்வி மாணவர்களுக்கு திட்டங்கள் வகுத்து, செலவு செய்வது மாநில அரசு. பேராசிரியர்களுக்கு ஊதியம், கட்டமைப்பு வசதிகளை செய்வது மாநில அரசு. ஆனால் வேந்தர் பதவியை மட்டும் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒருவருக்கா என்பது தான் எனது கேள்வி. அதனால் தான் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மீட்கும் வரை சட்டப் பேராட்டம் தொடரும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இந்நிகழ்வில், அமைச்சர்கள் கே.ஆர். பெரியகருப்பன், ரெகுபதி, தங்கம்தென்னரசு, கோவி.செழியன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சுவாமிநாதன், மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி& படங்கள்
சிங்தேவ்