வஞ்சகர் உலகம் : திரை விமர்சனம்..
தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் வர்த்தகத்திற்கு அப்பாற்பட்ட படம் வெளிவரும். அப்படி தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் சிலர் தரமான முயற்சிகளை சினிமாவில் எடுத்து வருகின்றனர்,
அந்த வகையில் அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் வஞ்சகர் உலகம், இவை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்ததா? பார்ப்போம்.
ஒரு கொலையை மையமாக வைத்து, கேங்ஸ்டர் கதை சொல்லும் படம் வஞ்சகர் உலகம்.
கதைக்கரு
வில்லா ஒன்றில் வசிக்கும் மைதிலி (சாந்தினி தமிழரசன்) கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் பிணமாக கிடக்கிறார்.
போலீசின் சந்தேகப் பார்வை எதிர்த்த வீட்டில் குடியிருக்கும் குடிகார இளைஞன் சண்முகம் எனும் சாம் (சிபி)மீது விழுகிறது.
இந்த கொலையை வைத்து போதை பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் துரைராஜை பிடிக்க நினைக்கிறார் பத்திரிகையாளர் விசாகன் (விசாகன் சூலூர் வணங்காமுடி).
அவருக்கு உதவியாக இருக்கிறார் சக பத்திரிகையாளரான சம்யுக்தா (அனிஷா ஆம்புருஸ்). இந்த இருவரின் சந்தேகம் மைதிலியின் கணவர் பாலா (லென்ஸ் பட இயக்குனர் ஜெயப்பிரகாஷ்) மீது விழுகிறது.
பாலாவை காப்பாற்றுவதற்காக நிழல் உலகில் வாழும் அவரது உயிர் நண்பரான கேங்ஸ்டர் சம்பத் வெளி உலகுக்கு வருகிறார். மைதிலியை கொலை செய்தது யார்? எதற்காக ? என்பது தான் படத்தின் கதை.
படம்பற்றி ஒரு பார்வை
நியூயார்க் பிலிம் அகாதமியில் படித்து, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவியாளராக பணியாற்றிய மனோஜ் பீதா இந்த படத்துக்கு திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.
ஹாலிவுட் படங்களை போன்று, கதை எழுதியது வேறு ஒருவர். வினாயக் தான் இந்த படத்திற்கு கதையும் வசனமும் எழுதியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய மற்றவர்களும் இளைஞர்களே.
இந்த இளைஞர் கூட்டணி ஒன்று சேர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக வஞ்சகர் உலகை படைத்திருக்கிறார்கள். படத்தின் முதல் காட்சியில் ஒரு வாலிபர் சுயநினைவு கலைந்து எழுகிறார்.
அவர் மயங்கிக்கிடக்கும் வேன் தீப்பற்றி எரிகிறது. தட்டுதடுமாறி வேனில் இருந்து கூலாக வெளியே வந்து, தன் பாக்கெட்டில் இருக்கும் மீதி சரக்கை குடித்துவிட்டு எந்த பதற்றமும் இல்லாமல் கேசுவலாக வீட்டிற்கு சென்று உறங்குகிறார்.
இதுவே வித்தியாச அனுபவத்தை தருகிறது. காட்சிகளை அடுத்தடுத்து நேர்த்தியாக இல்லாமல், முன்னுக்கு பின்னாக மாற்றி அமைத்து வித்தியாச உணர்வை ஏற்படுத்துகிறார் இயக்குனர்.
ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி அழகம்பெருமாள், இன்ஸ்பெக்டர் வாசு விக்ரம், போதை கேங்ஸ்டர்கள் குரு சோமசுந்தரம், ஜான் விஜய் என அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான ஸ்கேஸ் கொடுக்கிறது திரைக்கதை.
ஆனால் அனைவருமே அவ்வப்போது தேங்கி நிற்கிறார்கள். வித்தியாசமான முயற்சியாக இருந்தாலும், நிறைய சறுக்கல்களை சந்திக்கிறது திரைக்கதை. அதனாலேயே ‘என்ன சொல்ல வருகிறார்கள்’ என்பது புரியாமல் பார்வையாளர்களின் விழி பிதுங்குகிறது.
ஒரு பத்திரிகையாளரின் எல்லை என்ன என்பதை அறிந்து அந்த பாத்திரத்தை கையாண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒரு அபிசியல் போலீஸ் மீட்டிங்கில் நிருபரை அமரவைத்து ஆலோசனை கேட்பதெல்லாம் அமெரிக்காவில் வேண்டுமென்றால் பழக்கமாக இருக்கலாம்,
இங்கு அந்தளவுக்கு எல்லாம் பறந்த மனசு இல்ல புரோ. எப்போதும் போதையில் இருக்கும் சைக்கோ கேங்ஸ்டர் கேரக்டரில் குரு சோமசுந்தரம். போதை அசாமியாக, சைக்கோவா நம்ப வைப்பவர், கேங்ஸ்டராக ஏமாற்றுகிறார்.
‘இத இட்லினு சொன்னா சட்னியே நம்பாது’ என்பது போல் தான் இருக்கிறது குரு சோமசுந்தரத்தின் கேங்ஸ்டர் ஆக்டிங்.
ஆனால் போதை பேர்வழியாகவும், தாழ்வுமனப்பான்மை கொண்ட அரக்கனாகவும் அசத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம் சிபி புவனச்சந்திரன். பதற்றமே இல்லாத குடிகார இளைஞனாக கிக்கேத்துகிறார்.
சாந்தினியுடனான தனது உறவை வெளிப்படுத்தும் காட்சி ஆசம் ஆக்டிங். வெல்கம் புரோ. ஜிம்பாடி பத்திரிகையாளர் விசாகன் தனது பொறுப்பை உணர்ந்து யதார்த்தமாக செய்திருக்கிறார்.
படத்தின் மைய கதாபாத்திரமான மைதிலியாக நடித்திருக்கும் சாந்தினி கொள்ளை அழகு. சின்ன கண்ணசைவிலேயே சொக்க வைக்கிறார். தனது பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். அழகம்பெருமாளை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம்.
ஏற்கனவே பலமுறை பார்த்து சலித்துபோன அதே ஆக்டிங்கில் ஜான் விஜய். இப்டி ஒரு கேரக்டர் எழுதும் போதே, ஜான் விஜய்யை பிக்ஸ் செய்துவிடுவார்கள் போல. அனிஷா ஆம்ப்ருஸ் லிப் சிங்காகாமல் நடித்திருக்கிறார்.
வாசு விக்ரம், ஜெயப்பிரகாஷ், ஹரீஷ்பெரேதி என அனைவருமே தங்கள் பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள். படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தான்.
ஹாலிவுட் கேமராமேன் ரோட்ரிகோவும், நம்ம ஊர் சரவணன் ராமசாமியும் இணைந்து படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள்.
கேங்ஸ்டர் – போலீஸ் துப்பாக்கிச் சண்டையின் போது பின்னால் ஒலிக்கும் ‘கண்ணனின் லீலை’ கிளாசிக்கல் காக்டெயில். சபாஷ் சாம் சி.எஸ். இவர்களுடன் எடிட்டர் ஆண்டனியும் கைக்கோர்த்து படத்தின் மேக்கிங்கை ஹாலிவுட் ஸ்டைலுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
குருசோமசுந்தரம் இவரை வாழ்த்த வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும், முதல் பாதியில் இவர் எதற்கு இந்த படத்தில் என்று நம்மை எண்ண வைத்து,
இரண்டாம் பாதியில் மிரட்டி விடுகின்றார், அதிலும் திரையரங்கில் ஒரு காட்சி குரு எவ்வளவு பெரிய நடிகர் என்பதை நிரூபித்துவிடுகின்றார்.
அதை தொடர்ந்து சிபி கதாபாத்திரம் கவனிக்க வைக்கின்றது, முதல் படம் போலவே இல்லை, இப்படி ஒரு புதிய முயற்சி கொண்ட படத்தில் ஏன் அத்தனை செயற்கை தனமான பத்திரிகையாளர்கள், எந்த ஒரு இடத்திலும் டப்பிங் மேட்ச் ஆகவே இல்லை.
படத்தில் பலரும் பேசத்தயங்கும் சில விஷயங்களை இயக்குனர் மனோஜ் தைரியமாக பேசியுள்ளார், இவை கதைக்கு மிக முக்கியம் என்பதால் அதை சொல்ல முடியவில்லை, படத்தின் முதல் பாதி ஆரம்பித்த 10 நிமிடம் விறுவிறுப்பாக செல்ல அடுத்து இடைவேளை வரை நம் பொறுமையை மிகவும் சோதிக்கின்றது.
இரண்டாம் பாதி கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது, கேங்ஸ்டர் என்று ஒரு கதை தனியாக வர, அதில் குருசோமசுந்தரமே செம்ம ஸ்கோர் செய்கின்றார், அதிலும் அவர் கேங்ஸ்டராக மெல்ல வளர்ந்து வருவது போல் காட்டும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றது, தென்னிந்தியாவின் நவாஸுதின் சித்திக் என்றே இவரை சொல்லலாம்.
டெக்னிக்கல் விஷயங்கள் படத்தின் மிகப்பெரிய பலம் அதிலும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு ஏற்றவாறு கலர் தேர்ந்தெடுத்தது புதிய முயற்சி, இவர்கள் எல்லோரையும் விட படத்தின் மறைமுக ஹீரோ இசையமைப்பாளர் சாம் தான், இவரின் பெஸ்ட் என்றே இதை சொல்லலாம்.
ப்ளஸ்
குருசோமசுந்தரம் படத்தை ஒன் மேனாக தாங்கி படத்தை தாங்கிசெல்கின்றார்.
டெக்னிக்கல் விஷயங்கள் ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் அருமை.
கிளைமேக்ஸ் டுவிஸ்ட் ஒவ்வொன்றாக தெரியும் காட்சி புதிய அனுபவத்தை தருகின்றது.
மைனஸ்
படத்தின் முதல் பாதி மிகவும் மெதுவாக நகருகிறது. திரைக்கதையில் தொய்வு போல் உள்ளது.
சில காட்சிகள் அதாவது பத்திரிகையாளரின் நடிப்பு மிக செயற்கைத்தனமாக உள்ளது.
ஆனால் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள். படம் முழுவதுமே கேள்விக்குறிகளால் நிரம்பி இருக்கின்றன. ஒரு சின்ன புள்ளியை பெரிதாக டெவலப் செய்து, பிரிண்ட் போட்டிருக்கிறார்கள்.
அதனால் தான் அதன் பிக்சல்கள் உடைந்து மங்களாக தெரிகிறது. இருப்பினும் ஒரு வித்தியாசமான உணர்வை பெற இந்த ‘வஞ்சகர் உலகதுக்குள்’ போய் வரலாம்.
ஜென்ரல் ஆடியன்ஸிற்கு படம் எளிதில் புரியுமா? என்று தெரியவில்லை.
மொத்தத்தில் புதிய முயற்சியை விரும்புவோர்கள், கண்டிப்பாக வஞ்சகர் உலகத்திற்கு விசிட் அடிக்கலாம். மற்றவர்களுக்கு?.