“வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் :பேரவையில் பன்வாரிலாலின் தமிழ் பேச்சு..


சட்டபேரவையில் இந்த ஆண்டின் முதல் உரையை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வணக்கம் என்று கூறி தன்னுடைய உரையைத்தொடங்கினார். புத்தாண்டு வாழ்த்துகளையும் தமிழில் தெரிவித்த அவர் ஆளுநர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை உட்காருங்கள் என்று தமிழில் கூறினார்.

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தமிழக ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் தொடங்கியது. உரையைத் தொடங்கும் முன்னர் அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தமிழில் வணக்கம் கூறினார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று தமிழிலேயே பேசினார் ஆளுநர் பன்வாரிலால்

இதனையடுத்து ஆளுநர் தன்னுடைய உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எதிர்க்கட்சியினர் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது நிலைமையை உணர்ந்து அனைவரும் உட்காருங்கள் என்று தமிழிலேயே இரண்டு முறை கூறினார் ஆளுநர்.

ஆளுநர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை அமரச் சொன்னதை அதிமுகவினர் மேஜை மீது தட்டி வரவேற்றனர். தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், உரையை வாசிக்க விடுமாறும், எதிர்ப்புகளை விவாதத்தின் போது தெரிவிக்கலாம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறினார். எனினும் திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.