காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி அவதூறாகப் பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் வார்தா எனும் இடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் நேற்றுப் பேசிய பிரதமர் மோடி, ” இந்துக்களுக்கு எதிராக இந்து தீவிரவாதம் என்று ராகுல் காந்தி பேசியதால், இந்துக்களுக்கு பயந்து சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் வயநாட்டில் போட்டியிடுகிறார் ” பேசினார்.
பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பிரதமர் மோடி தனதுபேச்சுக்கு மன்னிப்புகோர வேண்டும் என்று கூறியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து அவதூறாக மோடி பேசியுள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் பிரிவு 123-ன்கீழ் குற்றச் செயலாகும்.
பிரதமராக இருக்கும் ஒருவர் அவரின் அலுவலகத்துக்கு மதிப்புக் குறையும் வகையில் பேசியுள்ளார். பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற தன்மையும், தனது செயல்பாட்டில் ஒழுக்கமும் இருப்பதும் அவசியம்.
பிரதமர் மோடி தனது பேச்சுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். சுதந்திரப் போராட்ட இயக்கத்தையும், ஒட்டுமொத்த தென் இந்தியாவையும் அவமதித்துவிட்டார் மோடி.
பல்வேறு கலாச்சாரம், மொழிகள், மதங்கள், சாதிகள், மரபுகள் கொண்டு ஒற்றுமையாக இருக்கும் தேசத்தையும் மோடி அவமதித்துவிட்டார்.
தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் மோடி பேசுகிறார்.
பிரதமர் எனும் உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் தான் வகிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு நெறிகளையும் உடைக்கிறார்,
ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி குறிப்பிட்ட மதத்தினர் வாழும் பகுதி என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வயநாடு எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், கோட்டயம் ராஜ வம்சத்தினர் எவ்வாறு செயல்பட்டனர் எனும் வரலாறு மோடிக்கு தெரியாது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக மட்டும் செயல்படாமல், அவர்களுக்கு எதிராக கொரில்லாப் போர் தாக்குதலையும் நடத்தி பலமுறை அவர்களை தோற்கடித்து புறமுதுகுகாட்டி ஓடவைத்துள்ளனர்.
கடவுள் ராமர், சீதா ஆகியோரின் புதல்வர்கள் லவன், குஷன் ஆகியோருக்கு கோயில்கள் வயநாட்டில் இருப்பது மோடிக்கு தெரியுமா.
மோடிக்கு வயநாடு குறித்தும் தெரியாது, குறிப்பாக ஜெயின்களின் கண்ணாடிக் கோயில் குறித்தும் தெரியாது. 8 வகையான பழங்குடிமக்கள் வயநாட்டில் வாழ்வது குறித்து மோடிக்கு தெரியுமா
வயநாட்டில் 50 சதவீதம் இந்துக்களும், அதில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தோர், தலித்துகள் இருப்பது மோடிக்கு தெரியுமா,
கிறிஸ்தவர்கள் 21 சதவீதம் பேரும், முஸ்லிம்கள் 28 சதவீதம் இருப்பது மோடிக்கு தெரியுமா. வயநாடு என்பது பல்வேறு தரப்பட்ட மதத்தினர், சமூகத்தினர் ஒன்றாக வாழும் மண்டலம். இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.
பழசிராஜா பெருமை தெரியுமா
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே .சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில் ” ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி குறித்து கண்டிக்கத்தக்க வகையிலும்,
பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும் பேசிய மோடி மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்.
குறிப்பிட்ட மதத்தினர் வாழும் வயநாடு பகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்று மோடி பேசியது அவர் வகிக்கும் பதவிக்கு மதிப்புக்குறையாகும்.
வயநாடு என்பது, கேரளாவின் சிங்கம் என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த கேரள வர்மா பழசி ராஜா வாழ்ந்த மண்.
மோடியின் பேச்சு வயநாடு மக்களை மட்டும் அவமானப்படுத்தவில்லை, சுதந்திரப் போராட்ட இயக்கத்தையே அவமதித்துவிட்டார் ” எனத் தெரிவித்துள்ளார்.