வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்தா? : வருமான வரித்துறை விளக்கம்..

வேலூர் மக்களவைத் தொகுதியில் அளவுக்கு அதிகமான பணம் புழங்குவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுதொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் அந்த கட்சியின் பொருளாளர் துரைமுருகன் மகன், கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், அமமுக சார்பில் பாண்டுரங்கன் தீபலட்சுமி (நாம் தமிழர் கட்சி), சுரேஷ் (மக்கள் நீதி மய்யம்) என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வீட்டில் கடந்த மாதம் 29,30 தேதிகளில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதன்பின் இம்மாதம் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனுக்கு நெருங்கி உறவினரும் திமுக பகுதிசெயலாளருமான பூஞ்சோ சீனிவாசனின் சகோதரி வீட்டில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.11 கோடியே 48லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கட்டுக்கட்டாக
கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்தத என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காட்பாடி நீதிமன்றத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், உறவினர் பூஞ்சாலை சீனிவாசன், அவரின் சகோதரியின் கணவர் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், வருமானவரித்துறையினர் தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளித்துள்ளனர். தேர்தல் ஆணையமும் தங்களின் பரிந்துரைகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ” வேலூர் தொகுதி குறித்த எங்கள் பரிந்துரைகளை இன்று குடியரசு தலைவருக்கு அனுப்பிவிடுவோம்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே தி இந்துவுக்கு(ஆங்கிலம்) அளித்த பேட்டியில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரபா சாஹு வேலூர் தொகுதி குறித்து கூறுகையில்,

” தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து விவரங்களையும், அறிக்கைகளையும் அளித்துவிட்டோம்.

அவர்கள் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அவர்களின் உத்தரவுக்கு ஏற்க நடவடிக்கை இருக்கும் ” எனத் தெரிவித்தார்.

இதனால், வேலூரில் மக்களவைத் தேர்தல் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு நிலவிய நிலையில், தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷேய்பாலி கிரண் ஊடங்களிடம் கூறுகையில், ”

ஊடங்களில் வருவதுபோல் வேலூரில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை, முடிவும் எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

இதனிடையே வருமானவிரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்தவொரு தொகுதியின் தேர்தலை ரத்து செய்யுமாறு வருமானவரித்துறை பரிந்துரைக்கவில்லை. அதுபோல் பரிந்துரைக்கவும் மாட்டோம் எனத் தெரிவித்துள்ளது.