முக்கிய செய்திகள்

வேலூர் மக்களவைத் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 7 புள்ளி 4 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் என மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிடும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 14 லட்சத்து 32 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்கத் தகுதியானவர்கள். அவர்களில் பெண்கள் 7 லட்சத்து 31 ஆயிரத்து 99 பேர். ஆண்கள் 7 லட்சத்து ஆயிரத்து 351 பேர். 105 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

வாக்குப்பதிவுக்காக ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்து 600 துணை ராணுவத்தினரும், 5 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதிக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது வாக்காளர்கள் வந்து வாக்கினைப் பதிவு செய்தனர்.

வேலூர் பொதுப் பணித்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வாக்களித்தார். வாக்குச்சாவடிகளை பார்வையிட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது. ஆம்பூர் இந்திரா நகர் இந்து மேல் நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 7.50 மணி வரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. அதன் பிறகு தான் வாக்குகள் பதிவாகின.

இதேபோல் தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, வள்ளலார் நகர், காகித பட்டறை உள்ளிட்ட இடங்களில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. வேலூர் சார்ப்பனாமேட்டில் 68ஆவது எண் வாக்குச் சாவடியில் விவிபேட் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது.

 

வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.