மடிப்பிச்சையல்ல காவிரி… மண்ணின் தொன்று தொட்ட உரிமை: வேல்முருகன்

காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 

மே 3ந் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால் முன்பு 6 வாரக் கெடுவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அலட்சியப்படுத்தியதைப் போல, இந்த 5 வாரக் கெடுவிலும் வரைவுத் திட்டம் தயாரிக்காமல் அலட்சியமாக இருந்து, மே 2ந் தேதியன்று உச்ச நீதிமன்றத்திற்குப் போய் மேலும் 10 நாட்கள் அவகாசம் கேட்டு, அவசர வழக்காக இதை விசாரிக்க வேண்டும் என்றது மோடி அரசு.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம் மறுநாள் விசாரணை நடைபெறும் என்றது.

ஆனால் மறுநாள் 3ந் தேதியன்று, ’பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை’ என்று காரணம் சொல்லி 10 நாள் அவகாசம் கோரினார் மத்திய சொலிசிட்டர் ஜெனரல்.

எந்த அரசியல் காரணத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டித்த நீதிமன்றம், ‘மேலாண்மை வாரியம் குறித்த வரைவுத் திட்டத்தை மே 8ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்; கர்நாடகம் தமிழகத்திற்கு உடனடியாக 4 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

உடனடியாகவே கர்நாடகத்திலிருந்து முதல்வர் சித்தராமையா மறுமொழி கூறினார்: “ஒரு சொட்டு தண்ணீரும் விடுவதற்கில்லை.”

மோடி அரசு மேலும் 10 நாள் அவகாசம் கேட்டதன் நோக்கம் புரிந்துகொள்ளக்கூடியதே.

அதாவது அதற்குள் கர்நாடகத் தேர்தல் முடிந்துவிடும்; அதையடுத்து ஒரு 15 நாட்கள் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை நாட்கள். அதன் பிறகு தேர்தல் முடிவைப் பொறுத்து மேலாண்மை வாரிய முடிவை வைத்துக்கொள்ளலாம். தாம் வென்றால் மேலாண்மை வாரியத்திற்கு எடியூரப்பா மூலம் முட்டுக்கட்டை போடலாம். காங்கிரஸ் வென்றால் சித்தராமையா தலையில் கட்டிவிடலாம். இதுதான் மோடியின் திட்டம்.

ஆக மேலாண்மை வாரியத்தை மோடி அமைக்கமாட்டார்; கர்நாடக பாஜகவும் காங்கிரசுமே அமைக்கமாட்டார்கள்.

எப்படியெனில், இப்போது சட்டமன்றத் தேர்தல்; அடுத்து உள்ளாட்சித் தேர்தல்; அதன்பின் நாடாளுமன்றத் தேர்தலும் வந்துவிடும். இதுதான் நிலை.

சரி, உச்ச நீதிமன்றத்தின் நிலை?

அதுவும் மோடிக்கு உடந்தையான நிலையே!

முதலில் மேலாண்மை வாரியத்திற்கான 6 வாரக் கெடு அதை அமைக்காமலே முடிந்தது;அடுத்து வரைவுத் திட்டத்திற்கான  5 வாரக் கெடுவும் அதைத் தாக்கல் செய்யாமலேயே முடிந்தது. இப்போது மேலும் 5 நாட்கள் கெடு வழங்கப்பட்டிருக்கிறது.

கெடு வழங்கிய உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு தடவையும் மத்திய அரசைக் கண்டித்து ஒப்புக்காகவே ஒருசில வார்த்தைகள், அறிவுறுத்தல்களை கூறுவதோடு சரி!

ஆனால் ஒவ்வொரு தடவையும் மோடி அரசு செய்திருப்பது நீதிமன்ற அவமதிப்பு! இது நீதிமன்றத்துக்குத் தெரியாதா என்ன? ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

நியாயம், நீதி என்னவென்றால், “உடனடியாக மேலாண்மை வாரியம் அமையுங்கள்” என்று மட்டும்தான் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்க வேண்டும்; வேறு வார்த்தைகளை அது பேசியிருக்கவே கூடாது; அப்படிப் பேசியிருப்பதும் இப்படி நடந்துகொண்டிருப்பதும் நீதியமைப்பு முறைக்கே புறம்பானதாகும்.

ஆக மோடி அரசு, அதன் பாஜக, சித்தராமையா அரசு, உச்ச நீதிமன்றம் எல்லோருமே இதில் கூட்டாளிகள்!

இவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து தமிழகத்திற்குத்தான் துரோகமிழைத்தார்கள்.

மோடியும் அவரது பாஜகவும் தமிழ்மண்ணுக்கும் மக்களுக்கும் எதிராக நடந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல; ஏனெனில் பிறப்பை வைத்தே மனிதரைப் பிரிப்பவர்கள் அவர்கள்!

அவர்களிடமே இன்று மத்திய ஆட்சியதிகாரம்!

அதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து மனிதரை இணைக்கும் காரியத்தை மோடி அரசு செய்யும் என எண்ணுவதே சுத்த ஏமாளித்தனமாகும்.

மனித மாண்பற்ற மோடி அரசிடம் கேட்கும் மடிப்பிச்சையல்ல காவிரி; அது தமிழ்மண்ணின் தொன்றுதொட்ட இயற்கை உரிமை!

அதற்காகப் போராடுவோம்; வேறு வழியில்லை; வாரீர் என தமிழ்மக்களை வருந்தி வேண்டி அழைக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Velmurugan Statement About Cauvery Issue