முக்கிய செய்திகள்

நீட்டா… நாமா… இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும்: வேல்முருகன்

நீட் தேர்வு திணிப்பு குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்ற ஆண்டு அரியலூர் மாவட்ட மாணவி அனிதாவின் உயிரைப் பறித்தது நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு!

அது கண்டு தமிழ்நாடே அதிர்ந்தது. தமிழக மக்களின் கொதிப்பு கண்டனக் குரலாகவும் போர்க்குரலாகவும் உயர்ந்தது.

தமிழகத்தை விட்டு நீட்டை விலக்கக் கோரிய போராட்டங்கள் இன்றுவரை தொடர்கின்றன.

ஆனால் இவை எதையும் கண்டுகொள்ளவில்லை மத்திய பாஜக மோடி அரசு.

மாநில ஈபிஎஸ்-ஓபிஎஸ் அரசும் நீட்டை எதிர்க்கிறாற்போல் காட்டி நடித்து மோடியிடம் நற்சான்று பெற்று நாட்களை மட்டும்தான் கடத்திக்கொண்டிருக்கிறது.

அதற்கு நீட்டைப் பற்றியோ நாட்டைப் பற்றியோ எந்தக் கவலையுமே கிடையாது என்பது,நீட்-விலக்கு மசோதாவுக்கு அது ஒப்புதல் வாங்காததிலிருந்தே தெரிந்துவிட்டது.

அதனால் இந்த ஆண்டும் நீட்டின் விளைவு தமிழகத்தை ஆட்டிப்படைத்தது.

இந்த ஆண்டு வெளிமாநிலத்தில் நீட் சென்டர் போடப்பட்டு மாணவர்கள் பழிவாங்கப்பட்டார்கள்.

இதனால் திருத்துறைப்பூண்டி மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் தன் தந்தைகிருஷ்ணசாமியைப் பறிகொடுத்தார்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு அறைக்குள் மகனை அனுப்பிவிட்டு தங்கியிருந்த விடுதி அறைக்குத் திரும்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

தந்தை மரணமடைந்தது தெரியாமலேயே மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.

தேர்வு முடிந்து திரும்பிய மகன் தந்தையைக் காணாது “அப்பா எங்கே” என்று கேட்டு அலைபாய்ந்த அவரது முகத்தைப் பார்க்க நமக்கு ஏற்பட்ட வேதனையையே விவரிக்க வார்த்தையில்லை.

இந்த சோகம் நிகழ்ந்து ஒன்றரை மணிநேரத்திற்குள்ளாகவே சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த கண்ணன் மாரடைப்பால் மரணமடந்தார்.

மதுரை பசுமலை நீட் சென்டரில் தேர்வு எழுதிய தன் மகள் ஐஸ்வர்யாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மரணமடைந்தார்.

மகள் ஐஸ்வர்யா, நீட் தேர்வு கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியதைக் கேட்கப் பொறுக்காமல்தான் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

மகளுக்கு நீட் ஏற்படுத்திய அதிருப்தியும் வேதனையும் தந்தை கண்ணனையும் தாக்கவே அவருக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது; உயிரை விட்டுவிட்டார்.

கடந்த ஆண்டு மாணவி அனிதாவைக் கொன்ற நீட், இந்த ஆண்டு அடுத்தடுத்து இருவரைக் கொன்றுவிட்டது.

உயிரிழந்த தந்தையர் இருவருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது; அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறது.

இப்படி தொடர் மரணங்களுக்குப் பிறகும் இந்த நீட் இங்கு இருக்கலாமா?

இந்த விபரீதங்களுக்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு என்னதான் தண்டனை?

இனியும் இதனைப் பார்த்துக்கொண்டிருப்பதா?

நீட்டா, நாமா, இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டாமா?

தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி!

இவ்வாறு வேல்முருகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Velmurugan Statement