விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதை

விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதைku.pa.rajagopalan

______________________________________________________________________________________________

 

 

 

தந்தியைக் கண்டு எல்லாரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது.

 

“சிவராமையர் டேஞ்சரஸ்’’ என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

 

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்துவிட்டார். க்ஷயத்தின் சின்னம் கொஞ்சம்கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

 

ஓங்கித் தலையில் அடித்ததுபோல குஞ்சம் மாள் பிரமை தட்டிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

 

எங்கள் எல்லாருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டுவிதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக்கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

 

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரி யிலிருந்துதான் வந்திருந்தது. சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள். குஞ்சம்மாள் பேருக்குத்தான்! தவறு எப்படி நேர்ந்திருக்க முடியும்?

 

ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்கமுடியும்? மூன்று நாட்களுக்கு முன்பு தானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு சௌகரியமில்லாமல் இருந் தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

 

 

என் தமக்கையும் நானும் சாயந்தரம் ரெயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப்  போகும் முதல்வண்டி.

 

புறப்படுவதற்கு முன் நல்லவேளை பார்த்துப் ‘பரஸ்தானம்’ இருந்தோம். சாஸ்திரிகள், ‘ஒண்ணும் இருக்காது. கிரகம் கொஞ்சம் பீடிக்கும், அவ்வளவுதான்!’ என்றார். அம்மா, தெய்வங்களுக்கெல்லாம், ஞாபகமாக ஒன்றைக் கூடவிடாமல், பிரார்த்தனை செய்துகொண்டு, மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்துவைத் தாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப் பாக்கு க்ஷேமதண்டுலம் எல்லாம் மறந்துபோகாமல் மடி நிறையக் கட்டிக்கொடுத்தாள். பசியுடன் போகக்கூடாது என்று புறப்படும்பொழுது கட்டாயப்படுத்தி இருவரையும் சாப்பிடச் செய்தாள்.

 

குஞ்சம்மாள், இயந்திரம்போலச் சொன் னதையெல்லாம் செய்தாள்; ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு!’ என்றதும் போய் நமஸ்காரம் செய்தாள்.

 

அவள் கதிகலங்கிப் போயிருந்தாள் என்பது அவள் பேச்சற்றுப் போயிருந்ததிலிருந்தே நன்றாகத் தெரிந்தது. அவளுடைய கலகலப்பு, முதல் தடவையாக அன்று எங்கோ அடங்கிவிட்டது.

 

அம்மா வாசலில் போய் சகுனம் பார்த்தாள். திவ்யமான சகுனம். காவேரியிலிருந்து அடுத்த வீட்டுச் சுந்தரி ஜலம் எடுத்துக்கொண்டு எதிரே வந்தாள்.

 

“ஒண்ணும் இருக்காது! நமக்கேன் அப்படி யெல்லாம் வரது? நாம் ஒருத்தருக்கு ஒண்ணும் கெடுதல் எண்ணல்லே’’ என்றெல்லாம், அம்மா அடிக்கடி தன்னையும் பிறரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.

 

ரெயில் ஏறுகிறபோது மணி சுமார் எட்டு இருக்கும். இரவு பூராவும் போயாக வேண்டுமே என்று துடித்தோம். போய் இறங்குவதற்குமுன் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றதால், கொஞ்சங் கொஞ்சமாகத் துடிப்பும், கலக்கலுங்கூட மட்டுப் பட்டன. இரண்டு ஜன்னல்களின் அருகில் நேர் எதிராக இரண்டு பெஞ்சுகளில் உட்கார்ந்தோம்.

 

‘””நீ புறப்படுகிறபோது ஒன்றுமே’ இல்லையே, அக்கா?”’ என்றேன், ஏதாவது பேச்சுக்கொடுக்க வேண்டும் என்று.

 

“”ஒண்ணுமில்லையே! இருந்தால் புறப்பட்டு வருவேனா?”’ என்று அவள் ஏக்கம் நிறைந்த குரலில் பதில் சொன்னாள். ‘அதற்குள் திடீரென்று ஒன்றும் ஏற்படுவதற்குக் காரணமே இல்லையே!’

 

எது எப்படியானாலும், மனசைச் சில மணி நேரங்களாவது ஏமாற்றித் தத்தளிப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம் என்று நினைத்ததுபோல பேச்சு வெளிவந்தது.

 

‘””நான், இந்த நோன்பிற்காக இங்கே தாமதம் செய்யாமல், போயிருக்காமல் போனேன்!”’

 

’””ஒருவேளை, அக்கா, நோன்பிற்காக நீ இங்கே இருந்துவிட்டதுதான் அத்திம்பேருக்குக் கோபமோ? அவர் உடனே வரும்படியாக எழுதியிருந்தார். நாம் ஒரு வாரத்தில் வருவதாகப் பதில் எழுதினோம். அதற்காகத்தான் இப்படித் தந்தி அடித்து விட்டாரோ?”

 

“”ஆஸ்பத்திரியிலேயிருந்து வந்திருக்கே?”

 

’””ஆஸ்பத்திரி பேரை வைத்து அத்திம்பேரே அடிக்கக் கூடாதா?”

 

“”அப்படி அடிக்க முடியுமோ?”’ குஞ்சம்மாள் குரலில் ஆவல் இருந்தது.

 

“”ஏன் முடியாது? தந்தியாபீஸில்” ‘

 

“”ஒருவேளை அப்படி இருக்குமோ?”’ என்று கேட்டபொழுது குஞ்சம்மாளின் முகம் கொஞ்சம் மலர்ந்துவிட்டது.

 

“”அப்படித்தான் இருக்கவேண்டும். இப்படித் திடீரென்று ஒன்றும் ஏற்படக் காரணமே இல்லை. முந்தா நாள்தானே கடிதாசு வந்தது?”

 

“”ஆமாம்! அதில் ஒடம்பெப் பத்தி ஒண்ணுமே இல்லையே?”

 

“”தந்தி அடித்தால் நாம் உடனே புறப்பட்டு வருவோம் என்றுதான் அடித்திருக்கிறார். வீட்டிலிருந்து அடித்தால்கூட அவ்வளவு தாக்காது என்று ஆஸ்பத்திரி பேரை வைத்து அடித்திருக்கிறார்.”

 

“”அப்படி அடிக்க முடியுமாடா, அம்பி? அப்படியிருக்குமா?”’ என்று மறுபடியும் குஞ்சம்மாள் சந்தேகத்துடன் கேட்டாள்.

 

அவள் அப்படிக் கேட்ட பொழுது, முடியாது என்று எனக்குத் தெரிந்திருந்தால்கூடச் சொல்ல மனம் வந்திருக்குமோ, என்னவோ?

 

“”நீ வேண்டுமானால் பாரேன்! எழும்பூர் ஸ்டேஷனில் வந்து இருக்கப்போகிறார்” என்றேன்.

 

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒரு தரம் அந்தத் திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும்; உடம்பு பதறும்; நெஞ்சு உலரும்; அடிவயிறு கலங்கும்; முகம் விகாரமடையும். மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும்; பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.

 

சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?

 

ரெயில் வண்டி வெறி பிடித்ததுபோல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தது; எங்கேயோ சென்னையில் விடியப்போகும் ஒரு காலையை நோக்கிக் கனவேகமாகப் போய்க் கொண்டிருந்ததுபோல் இருந்தது.

 

துக்கத்தில் தலையெடுக்கும் தைரியம்போல தொலை இருளில் அந்த ஒளித்தொடர் விரைந்து சென்றுகொண்டிருந்தது.

 

சென்னை போய்ச் சேரும்பொழுது, எங்கள் கவலையும் அந்த இருளைப் போல பின்தங்கிவிடாதா? நிம்மதி, காலையைப்போல, அங்கே எங்களை வந்தடையாதா? இருள், நிச்சயம் கூடவராது! சென்னையில் காலைதான்!  இவ்வாறெல்லாம் பேதைமனம் தன்னைத் தேற்றிக் கொண்டே இருந்தது.

vidiumaart5.4

 

குஞ்சம்மாள் மூட்டையிலிருந்து வெற்றிலை பாக்கை எடுத்து எனக்குக் கொடுத்துத் தானும் போட்டுக் கொண்டாள்.

 

எங்களவர்க்குள்ளேயே குஞ்சம்மாள் அதிக அழகு என்று பெயர். நல்ல சிவப்பு; ஒற்றை நாடித் தேகம்; அவளுக்கு தெருவிலேயே ஒரு செல்வாக்கு உண்டு.

 

அன்று என்னவோ, இன்னும் அதிகமாக, அவள் ஒளிர்ந்துகொண்டிருந்தாள். அவள் முகத்தில் என்றுமே இல்லாத ஓர் ஏக்கம் அன்று முதல் முதலாகத் தென்பட்டதாலோ என்னவோ, அவள் அழகு மிளிர்ந்து தோன்றினாள்.

 

குஞ்சம்மாளுக்குப் புஷ்பம் என்றால் பிராணன். யார் கேலி செய்தாலும் லட்சியம் செய்யமாட்டாள். தலையை மிஞ்சிப் பூ வைத்துக் கொள்ளுவாள். ஆனால் அன்று அவள் தலையில் வைத்துக் கொண்டிருந்த பூவைப்போல, அது என்றும் சோபித்ததில்லை அன்று என் கண்களுக்குப் பட்டது. வெற்றிலைக்காவி அவளுடைய உதடுகளில் அன்றுதான் அவ்வளவு சிவப்பாகப் பிடித்திருந்தது போல இருந்தது.

 

சோர்வில்தான் சௌந்தரியம் பரிமளிக்குமோ? அல்லது? கடைசியாக, அணைவதற்கு முன்னால், விளக்கு? இல்லை! இல்லை!

 

குஞ்சம்மாள் அன்று என்னவோ அப்படி இருந்தாள்.

 

வெற்றிலையைப் பாதி மென்றுகொண்டே, ‘””அம்பி, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?”’ என்றாள் குஞ்சம்மாள்.

 

அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.

 

“”என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? என் வாழ்வே அழுகை யாக”’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.

 

“”எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!”

 

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தோம். ஆனால் மனசு மட்டும் மௌனமாக இருக்கவில்லை.

 

நல்ல நிசிவேளை. வண்டியில் ஜனங்கள் உட்கார்ந்து கொண்டும் படுத்துக் கொண்டும் அநேக தினுசாகத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். வண்டி ஒரு சின்ன ஸ்டேஷனில் நின்றதும், சிலர் எழுந்து இறங்கிப் போவார்கள், மௌனமாகப் பிசாசுகள் போல. அப்பொழுதுதான் தூங்கி எழுந்த சிலர், ‘இதென்ன ஸ்டேஷன்?’ என்று தலையை நீட்டிக் கேட்பார்கள். போர்ட்டர் ஒருவன் ஏதாவது ஒரு ஸ்டேஷன் பெயரை அரைகுறையாகத் தூங்கி வழிந்துகொண்டே சொல்லுவான். மறுபடியும் வண்டி பூரான் மாதிரி ஓட ஆரம்பிக்கும்.

 

சுமார் ஒரு மணிக்கு வண்டி விழுப்புரம் ஸ்டேஷனுக்குள் ஆர்ப்பாட்டத்துடன் போய்நின்றது. அதுவரையிலும் வண்டியில் அமைதியும் நிசப்தமும் இருந்தன. அந்த ஸ்டேஷனில் கூட்டமும் கூக்குரலும் அதிகமாயின. அது வரையில் காலியாகவே வந்த எங்கள் பலகையில் சாமான்கள் நிறைந்தன. நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி, பெண் குழந்தையும் புட்டியுமாக என் தமக்கையின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.
அவள் அணிந்திருந்த முதல் தரமான வைரங்களுடன் அவள் முகமும் ஜொலித்துக் கொண்டு இருந்தது. ஏதோ ஓர் உள்ளப்பூரிப்பில் அவள் தன்னையே மறந்து தன் குழந்தையுடன் கொஞ்சினாள்.

 

வண்டி புறப்பட்ட சற்று நேரத்திற்கெல்லாம் என் தமக்கையின் பக்கம் தன் புன்னகை பூத்த முகத்தைத் திருப்பி, “”எங்கிட்டுப் போறீக அம்மா?” என்று கேட்டாள்.

 

என் தமக்கை சுருக்கமாக, ‘பட்டணம்’ என்றாள்.

 

“”நானும் அங்கேதாம்மா வாரேன்!”’ என்று ஆரம்பித்து, அந்தப் பெண் வரிசையாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பிறகு தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுத்தாள்.

 

என் தமக்கை மெய்சிலிர்த்துப் போனாள். வெகு ஆவலுடன் அந்தப் பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொண்டாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறை வில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணினாள்.

 

அதுவரையில் அவளுக்கு ஒவ்வொரு வார்த்தை பதில் சொல்லிக்கொண்டு வந்தவள், உடனே இளகி, அவளிடம் சங்கதி பூராவும் சொன்னாள்.

 

“”மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!”’ என்று அவள் சொன்னதைத் தெய்வ வாக்காக எடுத்துக்கொண்டு விட்டாள் குஞ்சம்மாள். அந்த ஆறுதலில் கொஞ்ச நேரம் அவளுடன் கவலை மறந்து பேசிக் கொண்டிருந்தாள்.

 

திடீரென்று ஞாபகம் வந்துவிட்டது. ஏதோ பெருத்த குற்றம் செய்தவள்போல திகிலடைந்தாள். ‘ஐயையோ! பைத்தியம்போல் இப்படிச் சிரிச்சுண்டு பேசிக் கொண்டிருக்கிறேனே!’ என்று எண்ணினவள் போல அவள் கலவரமடைந்தது நன்றாகத் தெரிந்தது. வண்டிபோன வேகத்தில் விர்ரென்று அடித்த காற்றிலும் அவளுடைய முகத்தில் வியர்வை தென்பட்டது.

 

ஆனால் எவ்வளவு நேரந்தான் கவலைப்பட முடியும்? கவலையால் ஏற்பட்ட அசதியிலேயே எங்களை அறியாமல் கண்ணயர்ந்தோம்.

 

துக்கத்தில், நித்திரையும் நினைவு மறதியும் சேர்ந்துதான் வாழ்க்கைக்கு ஒரு சிறு போதையாகித் தாபத்தைத் தணிக்கின்றனவோ?

 

வண்டி செங்கற்பட்டை நெருங்குகிற சமயம். வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து உட்கார்ந்தோம். கிழக்கு வெளுத்துக்கொண்டிருந்தது. வண்டி ஏதோ ஒரு குக்கிராமத்தைக் கடந்து போய்க்கொண்டிருந்த பொழுது கோழி கூவியதுகூடக் காதில் வந்துபட்டது.

 

“அப்பா! விடியுமா?”’ என்கிற நினைப்பு ஒருபக்கம்.

 

“ஐயோ! விடிகிறதே! இன்னிக்கி என்ன வச்சிருக்கோ!’’ என்ற நினைப்பு மற்றொரு பக்கம்.

 

இரவின் இருட்டு அளித்திருந்த ஆறுதலைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைகாட்டிய வெளிச்சம் பறிக்க வருவதுபோல் இருந்தது.

 

எங்கேயோ, கண்காணாத தூரத்தில் உருவடைந்த ஒரு காட்சியில் ஈடுபட்டவளாய் நிலைகுத்திய பார்வையுடன் குஞ்சம்மாள் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

 

செங்கற்பட்டில் பல் தேய்த்துக்கொண்டு காபி சாப்பிடுவோமா?’ என்று கேட்டேன்.

 

“”எல்லாம் பட்டணத்தில்தான்!” என்று சொல்லிவிட்டாள் குஞ்சம்மாள். பக்கத்தில் நகரத்தார் பெண் கவலையற்றுத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

இதோ ஆயிற்று, இதோ ஆயிற்று!’ என்று சொல்வதுபோல வண்டி தாவிப் பறந்து கொண்டிருந்தது.

 

ஆனால் எங்களுக்கு என்னவோ பட்டணம் நெருங்க நெருங்க, வண்டி வேண்டுமென்றே ஊர்வதுபோல இருந்தது.

 

எழும்பூர் வந்தது கடைசியாக.

 

ஸ்டேஷனில் யாருமில்லை; அதாவது எங்கள் அத்திம்பேர் இல்லை எல்லாரும் இருந்தார்கள். ‘ஆனால் அவர் ஸ்டேஷனுக்கு எதற்காக வர வேண்டும்? அங்கே எதிர்பார்ப்பது சரியில்லைதான்’ என்று அப்பொழுது தோன்றிற்று.

 

வீட்டுக்குப் போனோம். வீடு பூட்டியிருந்தது.

 

உடம்பு சௌகரியமில்லைதான்! சந்தேகமில்லை இப்பொழுது!

 

ஜெனரல் ஆஸ்பத்திரிக்குப் போனோம். அரைமணி நேரம் துடித்த பிறகு குமாஸ்தா வந்தார்.

 

“”நீங்கள் கும்பகோணமா?”’ என்றார்.

 

’””ஆமாம்”’ என்றேன்.

 

‘””நோயாளி நேற்றிரவு இறந்துபோய்விட்டார்”’ என்று குமாஸ்தா சாவதானமாகச் சொன்னார்.

 

இறந்து? அது எப்படி? அதற்குள்ளா?’ அப்பொழுதும் சந்தேகமும் அவநம்பிக்கையும் விடவில்லை.

 

“”சிவராமையர்?”’

 

“”ஆமாம், ஸார்!”

 

ஒருவேளை-’

 

“”சற்று இருங்கள். பிரேதத்தைப் பெற்றுக் கொள்ளலாம்”’ என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுக் குமாஸ்தா தம் ஜோலியைக் கவனிக்கப் போனார்.

 

கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம்.

 

அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சய மாயிற்று!

 

ஒருவழியாக மனதிலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.

 

பிறகு-?

 

விடிந்துவிட்டது.