கேரளத்தில் ஆகலாம்… தமிழகத்தில் கூடாதா?: விடுதலை ராசேந்திரன்

Vidudhalai-Rajendran-1திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக்கி சாதனை படைத்திருக்கிறது. இதில் ஆறு அர்ச்சகர்கள் ‘தலித்’கள் என்பது கூடுதல் சிறப்பு. “ஆகம விதிமுறைகளைப் பின்பற்றும் பெரும் கோயில்களில், பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியும்; வேறு பிரிவினர் அர்ச்சகராவது, ஆகமங்களுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிரானது’ என, தமிழ்நாட்டு பிராமணர்கள் கூறிவருகிறார்கள்.

 

தி.மு.க ஆட்சி, பெரியார் கோரிக்கையை 1970-ம் ஆண்டே ஏற்று சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. பார்ப்பனர்கள், உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாகச் சென்று சட்டத்தை முடக்கினார்கள். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது, இதுகுறித்து ஆராய நீதிபதி மகராஜன் தலைமையில் 1979-ம் ஆண்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரை, 1982-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக எந்தத் தடையும் இல்லை என்று சாஸ்திர ஆதாரங்களை விரிவாக எடுத்துக்காட்டியது.

 

பிராமண அர்ச்சகர்கள் பூஜையின்போது மந்திரத்தைத் தவறாக உச்சரிப்பது, மாற்றிச் சொல்வது, வேத வழிபாடு உடைய ஸ்மார்த்த பிராமணர்கள் சிதம்பரம் நடராசர் கோயிலில் பூஜை செய்யும் மோசடிகள், முறையான பயிற்சியின்றிப் பணியில் இருக்கும் அர்ச்சகர்கள் என ஆகமத்துக்கு எதிராக நடைபெறும் பல்வேறு மாற்றங்களைப் பட்டியலிட்டது மகராஜன் குழு. முறையான பயிற்சி வழங்கும் அர்ச்சகர் பள்ளிகளைத் தமிழகம் முழுவதும் நிறுவ வேண்டும். இந்துசமய அறநிலையச் சட்டத்தில் பழக்கவழக்கம் என்பதை ஒழித்து திருத்தம் செய்ய வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் மத உரிமை வழங்கும் சரத்து 25-ஐ திருத்த வேண்டும் என அந்தக் குழு பரிந்துரை செய்தது.

 

பிறகு 2006-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியிலிருந்தபோது, `உரிய கல்விப் பயிற்சி பெற்ற எந்த `இந்து’வையும் இந்துக் கோயில்களில் அர்ச்சகராக்கலாம்’ என்ற அரசாணையைப் பிறப்பித்தது (23.05.2006). அதைத் தொடர்ந்து அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்கவழக்கம், மரபு என்பவற்றை ஒழித்து அவசரச் சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டது (14.07.2006). இதற்கு ஏற்றவாறு இந்துசமய அறநிலையத் துறையின் 55-வது பிரிவு ஏற்கெனவே திருத்தப்பட்டிருக்கிறது என்பதையும் அந்த அவசரச் சட்டம் சுட்டிக்காட்டியது. உடனடியாக மதுரை ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கத்தினர் 1972-ம் ஆண்டு தீர்ப்பை அடிப்படையாக வைத்து தடையாணை பெற்றுவிட்டனர்.

 

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006-ம் ஆண்டில் போடப்பட்ட அரசாணையின் மூலம், நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டி அர்ச்சக மாணவர்களின் தகுதி, பாடத்திட்டம், பயிற்சிக்காலம் மற்றும் தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெறும் பூஜை முறைகள், பணியிலிருக்கும் அர்ச்சகர்களின் தகுதிகள் என விரிவாக ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கையாக சில பரிந்துரைகளைச் செய்தது. அதன்படி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவரங்கம் கோயில்களில் வைணவப் பயிற்சிப் பள்ளிகளும், திருவண்ணாமலை, மதுரை, திருச்செந்தூர், பழநி கோயில்களில் சைவப் பயிற்சிப் பள்ளிகளும் அமைக்கப்பட்டன. மொத்தம் 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து, 2008-ம் ஆண்டில் தீட்சையும் பெற்றனர். ஆனால் தமிழக அரசோ, மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கவில்லை.

 

இப்படி ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான பின்னணியில் 2002-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்துக்கு வந்த ஒரு முக்கிய வழக்கின் தீர்ப்பு இருந்ததைக் குறிப்பிட வேண்டும். அது கேரளாவில் ஆதித்தியன் என்கிற நம்பூதிரி தொடர்ந்த வழக்கு. நம்பூதிரிகள் மட்டுமே அர்ச்சகராக இருந்த ஒரு கேரள கோயிலில், ஈழவச் சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு (எ.ராஜேந்திர பாபு – துரைசாமி ராஜூ) இந்த வழக்கில் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை அளித்தனர்.

 

“இந்திய அரசியல் சட்டம் வருவதற்கு முன், குறிப்பிட்ட ஒரு சாதியினரே அர்ச்சகராக வர முடியும் என்ற ஒரு பழக்கம் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தாலும், இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்த பிறகு பழைய பழக்கவழக்கம் ( Custom and Usage ) எனக் காட்டி அரசியல் சட்டத்துக்கு எதிரான உரிமையைக் கோர முடியாது. அரசியல் சட்டத்தால் மனித உரிமைகள், சமூகச் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இதற்கு நேர் எதிரான வேறு உரிமைகள் ஏதும் இருக்க முடியாது. அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவோர் குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவராக இருக்க வேண்டும், அந்தச் சாதியின் பெற்றோர்களுக்குப் பிறந்திருக்க வேண்டும் என வற்புறுத்துவது அத்தியாவசியமானதல்ல. அப்படிச் செய்வதற்கு சட்டரீதியிலான அடிப்படையும் இல்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறி ஆதித்தியன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் சட்டத்தில் ‘பழக்கவழக்கம்’ என்ற பிரிவு நீக்கப்பட்டது.

 

இதே அடிப்படையில் கேரளாவில் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்கள் இப்போது நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பின்னணியில் “கேரள தேவஸ்வம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள 1,248 கோயில்களில் அனைத்துச் சாதியினரையும் தகுதி அடிப்படையில் நியமிக்கலாம்” என மாநில அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இப்போது உத்தரவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் தேவஸ்வம் போர்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்று அவர்களுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளை நடத்தி ஆறு தலித்கள் உள்ளிட்ட பார்ப்பனர் அல்லாத 36 பேரை அர்ச்சகராக நியமித்துள்ளது. ஆணையாளர் இராமராஜ பிரசாத் இதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளார்.

 

தி.மு.க. ஆட்சி 2006-ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, ஆதி சைவ சிவாச்சாரிகள் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் நிர்வாகச் சபை சார்பில் பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தாலும், தீர்ப்பில் குறிப்பிட்ட ஒரு வகுப்பினரே அர்ச்சகராக முடியும் என ஆகமங்கள் கூறுவதை நியாயப்படுத்தியதோடு, இதைத் ‘தீண்டாமை’யாகக் கருத முடியாது’ என்றும் கூறிவிட்டது (Agamas are not Violaiton of Right to Equality). பார்ப்பனர் அல்லாதார் கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்ற `கர்ப்பக்கிரக தீண்டாமையை’ அந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியது. அர்ச்சகர் பயிற்சி முடித்த 206 மாணவர்களும் ஒன்பது ஆண்டுகளாக அர்ச்சகர் ஆக முடியவில்லை.

 

“கேரளத்திலுள்ள இந்து கோயில்களும் கடவுள்களும், அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக அரவணைக்கும். தமிழ்நாட்டில் உள்ள ‘இந்து கோயில்களும் இந்து கடவுள்களும்’ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பார்ப்பனர் அல்லாத எவரையும் ‘அர்ச்சகராக’ ஏற்றுக்கொள்ளாது!” என்ன விசித்திரம்! இதுதான் ஒற்றை ‘இந்து’க் கலாசாரமா?

 

– விடுதலை ராசேந்திரன் . திராவிடர் விடுதலைக் கழகம்

 

நன்றி: தாகம்

 

viduthalai Rajendiran’s Article

 ______________________________________________________________________